எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய வாக்குத்தத்த வசனம், "உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்" (நீதிமொழிகள் 16:3) என்று கூறுகிறது. சிறிதானதோ, பெரிதானதோ எந்தக் காரியமாயிருந்தாலும் தேவனுடைய கரங்களில் அதை அர்ப்பணிப்பது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது! நாம் இப்படிச் செய்யும்போது என்ன நடக்கிறது? எல்லாமும் நிலைப்படுத்தப்படும். நீங்கள் செய்கிற யாவற்றையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைத்திடுங்கள்; அவர் உங்கள் யோசனைகளை ஸ்திரப்படுத்துவார். வேதம், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கவேண்டும் என்று கூறுகிறது (பிரசங்கி 3:22). "சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்" என்றும் எழுதப்பட்டுள்ளது (ரோமர் 2:7).
நாம் எதைச் செய்தாலும் நன்மைக்கேதுவாகவே செய்ய பிரயாசப்படவேண்டும். மக்களை வெறுப்பதோ, புண்படுத்துவதோ, அவர்களுக்குத் தீமையானவற்றை செய்வதோ தேவனுடைய சித்தம் அல்ல. நாம் முதலாவது தேவனையும் பிறகு நம்மை சுற்றிலுமிருக்கிறவர்களையும் நேசிக்கவேண்டும். வேதம், "நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்," என்று கூறுகிறது (2 கொரிந்தியர் 9:8). நீங்கள் எதைச் செய்தாலும் அது நன்மையானதாக, தேவனுக்குப் பிரியமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உடன் மனுஷரை, குடும்பத்தினரை, உங்கள் உடன் பணியாளர்களை நேசிப்பதுடன் அவர்களுக்கு உதவியும் செய்யவேண்டும்.
வேதத்தில், எஸ்தர் ராஜாத்தி இவ்வண்ணமே வேண்டிக்கொண்டாள். அவள் ராஜாத்தியாக இருந்தாலும் கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, மூன்று நாட்கள் உபவாசித்து, யூத மக்கள் அழிந்துபோகாதபடி ஜெபித்தாள். தன் ஜனங்களுக்கு பெரிய விடுதலை வேண்டும் என்று அவள் வேண்டுதல் செய்தாள். அதற்காகவே தேவன் என்னை எஸ்தர் ஜெபக் குழுவை ஆரம்பிக்கும்படி வழிநடத்தினார். இந்த ஊழியத்தால் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகின்றனர். நான் எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்படைத்திருக்கிறேன். கர்த்தர், ஆயிரக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக எஸ்தர் ஜெபக் குழுவை ஆச்சரியவிதமாக செயல்படுத்தும்படி என்னை வழிநடத்துகிறார். ஆம், அன்பானவர்களே, அப்படியே செய்திடுங்கள். தேவனுக்குப் பயந்து எல்லாவற்றையும் அவரது மகிமைக்காகவே செய்திடுங்கள். அவர் பார்வைக்கு பிரியமானபடி வாழ்ந்திடுங்கள். அப்போது பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்.
ஜெபம்:
அருமையான பரம தகப்பனே, என் எளிமையான வேண்டுதல்களைக் கேட்டு அவற்றுக்குப் பதில் கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என்னை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் எதைச் செய்தாலும் உம் பார்வைக்குப் பிரியமானதாக செய்ய உதவும். நான் செல்லவேண்டும் என்று நீர் விரும்புகிற பாதைகளில் என்னை நடத்தும். தகப்பனே, உம் பரிபூரண சித்தத்தின்படி என்னை வழிநடத்தும். நான் செய்கிறவை யாவும் வாய்க்கவும் உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரவும் வேண்டுமென இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


