ஊழியத்தில் மிகவும் அன்பான பங்காளரே,

இந்த 2026-ம் ஆண்டிற்காக தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் 2 சாமுவேல் 7:11-ல் உள்ளது. அதில் அவர்: "நான் உன் வீட்டைக் கட்டுவேன்" என்று கூறுகிறார். தேவன் தாவீதின் குடும்பத்தையும், அவன் வம்சத்தையும் என்றென்றைக்கும் நிலைப்படுத்துவதாக வாக்குப்பண்ணினார். அந்த வாக்குத்தத்தம் இஸ்ரேல் தேசத்தில் இன்றும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. அப்படியே, பயம் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையின் மத்தியிலும், நம் குடும்பங்களை உறுதியாகக் கட்டுவதாகவும், நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகவும், சமாதானத்தை நமக்குக் கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளிக்கிறார். இந்த ஆண்டு நம் வாழ்க்கையும் குடும்பமும் இயேசுவாலும் இயேசுவுக்குள்ளும் கட்டப்படும்.

தேவன் இந்த ஆண்டு நம் வீட்டை எவ்வாறு கட்டுவார்? தேவன் நம்மை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்தப்பட்ட தம்முடைய சொந்த மாளிகையாகக் கட்டுவார். அவரே அங்கு வாசம்பண்ணி, தமது பிரசன்னமும், சமாதானமும் செழிப்பும் நிரம்பி வழியும்படி செய்வார்.

இயேசுவை அஸ்திபாரமாகக்கொண்டு ஒரு மாளிகையாக கட்டப்பட்டுள்ளோம்: நம்முடைய பாவங்களை நீக்கி, அசைவில்லாத மகிமையான ஒரு மாளிகையாக நாம் நிலைத்திருக்கும்படியாக, கிறிஸ்து தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தினார்; தம்முடைய உன்னத மகிமையைத் துறந்து, பாடுகள் பட்டு மரித்தார். இயேசுவை நமது உறுதியான அஸ்திபாரமாக நாம் கொண்டிருக்கும்போது, அவர் நம் வாழ்க்கையை உயர்த்தி, அதை உறுதியாக நிலைநிற்கப்பண்ணுவார். (1 கொரிந்தியர் 3:11)

✨ பரிசுத்த ஆவியானவர் வசிக்கும் ஒரு மாளிகையாக கட்டப்பட்டுள்ளோம்: இயேசுவே அஸ்திபாரம், ஆனால் நம்மை ஒரு அரண்மனையாகக் கட்டுகிறவர் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனத்தில் நமக்கு உதவிசெய்து, நம்மைப் பாதுகாக்கிறார், நம்மைப் பலப்படுத்துகிறார், அவருடைய வாசஸ்தலமாக நம்மை வைத்திருக்கிறார். தேவனுடைய வார்த்தையால், நாம் ஜீவனைப் பெற்று, ஜீவனுள்ள கற்களைப்போல இயேசுகிறிஸ்து வாசம்பண்ணும் ஆவிக்குரிய மாளிகையாக நாம் கட்டப்படுகிறோம். (எபேசியர் 2:20-22; ரோமர் 8:26; ஏசாயா 59:19; 1 கொரிந்தியர் 14:15 மற்றும் மாற்கு 16:16- 18)

✨ சமாதான வேலியுடன்கூடிய ஒரு மாளிகையாக கட்டப்பட்டுள்ளோம்: பிசாசுக்கோ, நம்மை எதிர்க்கும் மக்களுக்கோ, இந்த உலகத்தின் அழுத்தங்களுக்கோ நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவன் நம்மைச் சுற்றிலும் அக்கினி மதிலையும், இயேசுவாகிய சமாதான வேலியையும் வைத்திருக்கிறார். சமாதானம் பரிசுத்தத்தை உருவாக்குகிறது, பரிசுத்தத்தின் மூலம் நாம் தேவனைத் தரிசிக்கிறோம். (சங்கீதம் 147:14; ரோமர் 16:20; யோபு 1:10; எபிரெயர் 12:14)

✨ உச்சிதமான ஆசீர்வாதங்களுடன்கூடிய ஒரு மாளிகையாக கட்டப்பட்டுள்ளோம்: இயேசு ஐசுவரியமுள்ளவராய் இருந்தும், அவருடைய தரித்திரத்தினாலே நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு, அவர் நமக்காக தரித்திரரானார். அவருடைய வறுமையின் மூலம் நாம் ஐசுவரியவான்களாகிறோம். தேவன் நம்மை ஒரு மாளிகையாக மாற்றும்போது, அவருடைய ஜனங்களுக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் நம்மை ஒரு ஆசீர்வாதமாக மாற்றும் ஆசீர்வாதங்களை உடையவர்களாக நம்மை வைக்கிறார். (சங்கீதம் 81:16; 2 சாமுவேல் 6:11; 2 சாமுவேல் 7:29; 2 கொரிந்தியர் 8:9; 9:8)

அன்பின் பிதாவே, என் வாழ்க்கைக்கு அஸ்திபாரமாக இருந்து, பரிசுத்தஆவியானவர் மூலமாக என்னை உம்முடைய மாளிகையாக மாற்றும், உமது வார்த்தையின் மூலம் என்னை ஜீவனுள்ள கற்களாக மாற்றும். என் வாழ்க்கையை உமது தெய்வீக மதிலால் சூழ்ந்துகொண்டு, உமது ஆசீர்வாதங்களால் வாழ்க்கையை பரிபூரணமாக அனுபவிக்க எனக்கு உதவிசெய்யும். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில், ஆமென்.

மிகுந்த அன்பு மற்றும் பிரார்த்தனைகளுடன்,

உங்கள் அன்பு சகோதரர்,

Dr. பால் தினகரன்

 

தலைமை நிர்வாக அதிகாரியின் மேசையிலிருந்து
2025-ம் ஆண்டில் – உங்கள் மூலமாக உண்டான நல்தாக்கம்

2025-ம் ஆண்டைப் பற்றிச் சிந்திக்கும்போது, இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் காணப்பட்ட தேவனுடைய உண்மைத்தன்மை மற்றும் இந்த ஊழியப் பயணம் முழுவதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்திருந்தது ஆகியவற்றிற்காக தேவனைத் துதிக்கும் நன்றியுணர்வால் எங்கள் உள்ளம் நிரம்புகிறது. உங்களைப் போன்ற பங்காளர்களின் தாராளமான ஆதரவானது, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 2.4 கோடி ஆத்துமாக்களின் வாழ்க்கையில் எவ்வாறு நல்தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதை எங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம்.

ஆசீர்வாதமான மழையின் ஆண்டு (எசேக்கியேல் 34:.26) என்ற வாக்குத்தத்தத்தின்படியே இந்த 2025-ம் ஆண்டு, இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் ஒவ்வொரு ஊழியப் பிரிவிலும் மாபெரும் அறுவடை நிறைந்ததாகவும், அற்புதமான முன்னேற்றங்கள் உள்ளதாகவும் இருந்தது.

ஜெப கோபுர ஊழியம்: இந்தியா முழுவதும் உள்ள 104 ஜெப கோபுரங்கள் மூலம், ஜெப கோபுரங்களைப் பார்வையிட்ட 19,07,500 நபர்களுக்கு மன்றாட்டு ஜெப வீரர்கள் ஊழியம் செய்தனர். ஜெப கோபுரங்களில் நடத்தப்பட்ட 43,000-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் மூலம் 15.7 லட்சம் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர். 10.21 லட்சம் பேருக்கு இலவச ஜெப எண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இயேசு அழைக்கிறார் ஊழியர்களுடன் சேர்ந்து, இந்த ஆண்டு மட்டும் சுமார் 20,157 தன்னார்வலர்கள் இந்த அனைத்து சேவைகளையும் சாத்தியமாக்கினர்.

கடிதம் மற்றும் மின்னஞ்சல் ஊழியம்: Dr. பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் இயேசு அழைக்கிறார் ஊழியர்களுடன் சேர்ந்து மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் மூலம் பெறப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களுக்காக ஜெபம்செய்து, தேவனுடைய வார்த்தை மற்றும் தேவநிச்சயத்துடன் பதிலளித்தனர்.

தொலைபேசி ஊழியம்: எங்கள் மன்றாட்டு ஜெபவீரர்கள் 13 மொழிகளில் 46 லட்சம் ஜெப விண்ணப்பங்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள்; 5,86,309 பங்காளர்கள் தங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் தேவனுடைய வாக்குத்தத்தம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளையும் பெற்றனர்.

சமூக ஊடக ஊழியம்: ஆவிக்குரிய பதிவுகள், பாடல்கள், நேரடி நிகழ்ச்சிகள், குறும்படங்கள், விவாதங்கள், பேச்சு நிகழ்ச்சிகள், தினசரி வாக்குத்தத்தம் மூலம் இந்த ஆண்டு 18 கோடி ஆத்துமாக்களை நாங்கள் சென்றடைந்தோம். பாடல்கள் மூலம் 24 லட்சம் மக்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா ஊழியம் மூலம் 2.1 கோடி மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

தொலைக்காட்சி ஊழியம்: அனைத்து வயதினரும் ஆசீர்வதிக்கப்படும் வகையில் புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல சேனல்களில் 1,875 நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினோம். 'ஃபேமிலி சேனல்' மூலம் 14.4 கோடி பார்வையாளர்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

திருச்சபைகளுக்கு உதவி: இந்த ஆண்டு, 810 போதகர்களுக்கு நிதி உதவி வழங்கியதோடு, 23 புதிய தேவாலயங்கள் கட்டப்பட்டு, புதுப்பிக்கப்பட இயேசு அழைக்கிறார் ஊழியம் உதவி செய்தது.

 

🌟 ஜனவரியில் ஊழியம்


2026 ‘வாக்குத்தத்தப் பாடல்’: புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காக நாங்கள் YouTube-ல் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் ‘2026 வாக்குத்தத்தப் பாடலை’ வெளியிட்டோம். தயவுசெய்து இந்தப் பாடல்களைக் கேட்டு, உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஜார்கண்ட், ராஞ்சி ஜெப கோபுரம்: கடந்த ஆண்டு, இந்த ஜெப கோபுர ஊழியத்தின் மூலம் 37,500 பேரை நாங்கள் சென்றடைந்தோம். இந்த ஆண்டு 50,000 பேருக்கு ஊழியம் செய்ய திட்டமிட்டுள்ளோம். கூட்ட அரங்கம், ஜெப-ஆலோசனை அறைகள், ஆடியோ-விஷுவல் அறைகள், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான பயன்பாட்டு அறைகள் மற்றும் இன்னும் அதிகமான தொலைபேசி ஜெப ஜெபவீரர்கள் ஊழியம் செய்வதற்கு ஏதுவாக அதிக இருக்கைகள் என பல்வேறு கூடுதல் வசதிகளை ரூ. 3 கோடி செலவில் இந்த ஜெப கோபுரத்தில் செய்துள்ளோம்.

காருண்யா பல்கலைக்கழகம் - கல்வி, புதுமை மற்றும் மனதுருக்கம் மூலம் அநேகருடைய வாழ்வில் நல்தாக்கங்களை ஏற்படுத்துதல் 

  • காருண்யா பல்கலைக்கழகம் - NAAC A++ அங்கீகாரம், NBA, ICAR, ACCA (UK) ஒப்புதல்கள் மற்றும் QS I-GAUGE பிளாட்டினம், QS உலக பல்கலைக்கழக தரவரிசை மற்றும் டைம்ஸ் உயர் கல்வி (THE) உலக தரவரிசை 2025 மூலம் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவற்றுடன் சிறந்து விளங்குகிறது.
  • 2025–26-ம் கல்வியாண்டில் தகுதியான 1,092 மாணவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவித்தொகை வழங்கப்பட்டது. மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட, பின்தங்கிய மாணவர்கள் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100% கல்விக் கட்டணத் தள்ளுபடிகள் இதில் அடங்கும்.
  • காருண்யா பல்கலைக்கழகம் பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த 25 மாணவர்களை வரவேற்று, 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளிநாட்டு செமஸ்டர் திட்டங்கள் மற்றும் சர்வதேச பயிற்சிகள் மூலம் உலகளாவிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்களுடன் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்கியது.
  • காருண்யா பல்கலைக்கழகத்தில் 2026-2027-ம் ஆண்டிற்கான சேர்க்கை திறக்கப்பட்டுள்ளது. முழு கல்விக் கட்டணத் தள்ளுபடிகள் மற்றும் பல தகுதி உதவித்தொகைகள் உட்பட பல கோடி உதவித்தொகைகள் சேர்க்கப்பட உள்ள மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. https://admissions.karunya.edu என்ற இணைப்பை பார்வையிடுங்கள்

சீஷா - வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புதல் 

  • இந்தியாவின் பல பகுதிகளில் வறுமையில் வாடும் 30,000-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்களுக்கு வேண்டிய பள்ளிப் பொருட்கள் மற்றும் புதிய ஆடைகளைப் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.
  • இந்த ஆண்டு, கட்ரு (ராஞ்சி), கோட்டயம் (கேரளா), மணிப்பூர், திருவள்ளூர், விக்கிரவாண்டி (விழுப்புரம்) மற்றும் வியாசர்பாடி ஆகிய இடங்களில் ஆறு புதிய சீஷா கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் இந்தியா முழுவதும் மொத்தம் 63 மையங்கள் செயல்படுகின்றன. சீஷா, அருணாச்சலப் பிரதேசத்தின் ரோயிங் மற்றும் இட்டாநகரில் புதிய தையல் மையங்களைத் தொடங்கி வைத்தது. மேலும் சென்னை தாம்பரம் மற்றும் பாரிமுனையில் இலவச தையல் மையத்தைத் திறந்து வைத்தது. இதன் மூலம் சமுதாயத்தில் பின்தங்கிய பெண்கள் வாழ்க்கை மேம்படும்.
  • இவை தவிர, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், கல்வி மையங்கள், மருத்துவ உதவிகள், பேரிடர் நிவாரணம், முதியோர் சேவை போன்றவற்றின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு சீஷா சேவை செய்து வருகிறது.


இந்த ஆண்டு, இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் மூலம் 25 கோடி மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், சீஷா மூலம் பொருளாதாரக் குறைவால் பலவித வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு கனிவுடன்கூடிய சமூக சேவை செய்வதையும்; இயேசு அழைக்கிறார் பயிற்சி திட்டங்கள் மூலம் மக்களுக்காக ஜெபிக்கவும், புதிய ஸ்தானாபதிகள், இளம் தலைவர்கள் மற்றும் மன்றாட்டு ஜெப பங்காளர்களை உருவாக்கவும், ஒவ்வொரு மாநிலத்திலும் 1000 மன்றாட்டு ஜெபவீரர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்த ஆண்டு 25 கோடி ஆத்துமாக்களுக்கு நாம் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்து, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அற்புதங்களையும் கொண்டு வருவோம். இவைகள் அனைத்திற்காகவும் ஜெபம்பண்ணுங்கள், மேலும் https://www.jesuscalls.org கிளிக் செய்து ஆதரவளிப்பதன் மூலமாக இந்த அனைத்துச் சேவைகளிலும் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.