இது புத்தாண்டு. உண்மையிலேயே எத்தனை பேர் இந்தப் புத்தாண்டில் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? உங்களில் அநேகர், அன்பானோரை இழந்திருக்கலாம்; அது உங்கள் உள்ளத்தை உடைத்திருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு அன்பானோரை இழந்திருந்தால் கூட அது நம்மை அதிகமாய் புண்படுத்தும். நீங்கள் இழக்கக்கொடுத்த அன்பானோரைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் உள்ளம் உடைந்திருக்கும். ஆனால், இன்று ஆண்டவர், "நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்." (யோவான் 16:22) என்று வாக்குக் கொடுக்கிறார். ஆம், இனி வரும் நாட்கள் மகிழ்ச்சியாய் இருக்கப்போகின்றன.

உங்கள் வாழ்க்கையில் அந்த அன்பானவர்கள் பெற்றிருந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், அவர்களில்லாத நிலையில் வாழ்வதற்கு வேண்டிய சமாதானத்தை தேவன் உங்களுக்குத் தருவார். ஆம், அந்த சமாதானம் உங்களுக்கு பெருத்த சந்தோஷத்தை, பரலோகத்தில் அவர்களை மீண்டும் சந்திப்போம் என்ற சந்தோஷத்தை கொடுக்கும். ஆகவே, அன்பானவர்களே, உள்ளமுடைந்து போகாதிருங்கள். கவலைப்படாதிருங்கள். இன்று உங்களை சந்தோஷத்தால் நிரப்புவதாக ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். வேதம், "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5) என்று கூறுகிறது. ஆம், இரவில் நீங்கள் கண்ணீர் வடிக்கலாம். ஆனால், தேவன் உங்களை தமது சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்புகிறபடியினால் இன்று அந்தக் கண்ணீர் நின்றுபோகும்.

மக்கள் எப்போதும், "ஓ, எனக்கு எல்லாமே நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே கெட்டது நடக்கும் என்று நினைக்கிறேன்," என்று சொல்வார்கள். ஆனால், தேவன் உங்களுக்குக் கொடுக்கும் இந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒருவேளை, மோசமான நாட்கள் வந்தாலும், தேவ சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். யாராலும் அந்த சந்தோஷத்தை எடுத்துப்போட முடியாது. எவ்வளவு ஆச்சரியமான வாக்குத்தத்தம்!

ஜெபம்:
பரம தகப்பனே, உடைந்த என் உள்ளத்தையும் நான் அந்தரங்கத்தில் வடிக்கும் கண்ணீரையும் நீர் காண்கிறீர். என் சந்தோஷத்தை திரும்ப தருவதாக நீர் அன்புடன் கொடுக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வேதனையான நினைவுகள் என்னை நிறைக்கும்போது, தயவாய் உம் சமாதானத்தினால் நிரப்பும். உம்முடைய தெய்வீக பெலனோடு வாழ்க்கையைத் தொடர எனக்கு உதவும். உம்மை நம்புகிறதால் வரும் பூரண சந்தோஷத்தால் என் துக்கத்தை மாற்றுவீராக. கடினமான எல்லா நாட்களிலும் உம் சமாதானம் என்னை சூழ்ந்துகொள்ளச் செய்வீராக. ஆண்டவரே, நீர் என்னை முற்றிலும் குணப்படுத்துவீர் என்று நம்பி இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.