அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். இன்று, என் தங்கை ஷேரன் ஏஞ்சலின் பிறந்தநாளை உங்களோடு இணைந்து கொண்டாடுவதில் சந்தோஷமடைகிறேன். எங்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் அன்போடும் அக்கறையோடும் கவனித்து குடும்பத்தை அவள் பேணி வருகிறாள். இந்த விசேஷித்த நாளிலும் தொடர்ந்து அவளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். "தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்," (சங்கீதம் 60:12) என்று வேதம் கூறுகிறது. அவர் ஜெய கர்த்தராக நமக்கு முன்னே செல்கிறார். நாம் செய்கிற யாவற்றிலும் நமக்கு வெற்றியை தர அவர் நம்மிலும் அதிக வாஞ்சையாயிருக்கிறார்.

ஒரு பெரிய திட்டம், தீர்க்கப்படவேண்டிய பெரிய வழக்கு, நீங்கள் தீர்மானம் எடுக்கவேண்டிய சிக்கலான சூழ்நிலை போன்று ஏதாவது ஒரு மிகப்பெரிய சவால் உங்கள் முன்னே இருக்கலாம். நீங்கள் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கலாம். அன்பானவர்களே, தேவனால் நீங்கள் வெற்றி பெற முடியும். அவர் ஏற்கனவே நமக்கு முன்னே சென்று, நமக்காக யுத்தஞ்செய்துகொண்டிருக்கிறபடியால் அந்தச் சூழ்நிலையை தகர்த்துப்போட்டு நமக்கு வெற்றியை தருவார்.

ஆப்பிரிக்க பையன்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்கு பிடித்துச் செல்லப்பட்ட காலத்தில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் இருந்தான். ஓரிரவில் அவன் தன் அறையில் தன் நிலையை எண்ணி மனமுடைந்திருந்தபோது, "கடவுளே, இந்தச் சூழ்நிலையிலும், இந்த வாழ்க்கையிலும் என்னை சிறந்த மனிதனாக உருவாக்க உம்மால் முடியுமா? என்னை உயர்த்த முடியுமா? இனிமேலும் நான் அடிமையாக இருக்க விரும்பவில்லை," என்று ஜெபித்தான். அன்று இரவு, தேவன் அவனுக்குக் கனவில், சிறு வேர்க்கடலைக்குள் இருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தினார். தாவரங்கள் மத்தியில் வேலை செய்ய அவன் விரும்பினான். தேவன் தனக்குக் காண்பித்த சொப்பனத்தை செயல்படுத்தினான். பிறகு, அறிவியல் கருத்தரங்கம் ஒன்றில் தன் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தான். அமெரிக்கர்கள் ஆச்சரியமுற்றனர். வேர்க்கடலை ராஜா என்று அவனை அழைத்தனர். தேவனால் நம்மை பிரமாண்டமாய் உயர்த்த முடியும். 'கொஞ்சம்', 'குறைவு' என்பவற்றைக் கொண்டு மகத்துவமானவற்றை உருவாக்க தேவனால் கூடும். அப்படிப்பட்ட ஞானத்தை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவாராக.

ஜெபம்:
அன்பின் தகப்பனே, எனக்கு முன்னே வெற்றி தரும் ஆண்டவராக செல்லுகிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் சந்திக்கிற எல்லா சவால்களையும், எடுக்கிற எல்லா முடிவுகளையும் உம் பலத்த கரங்களில் சமர்ப்பிக்கிறேன். கூடாத சூழ்நிலைகளிலெல்லாம் உம் ஜெயம் எழும்புவதாக. ஆண்டவரே, எனக்கு முன்னே காணப்படும் எல்லா தடைகளையும் நீர் வாக்குப்பண்ணியுள்ளபடியே தகர்த்துப்போடும். என் குறைவுகளுக்கும் மேலாக என்னை உயர்த்தும். என்னிடமிருக்கும் கொஞ்சமானவற்றை மகத்துவமான காரியங்களுக்குப் பயன்படுத்தும். நான் உம்மை முற்றிலும் நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.