தேவன் பரிபூரண நன்மையை உங்களுக்கு வைத்திருக்கிறார். அவர், "அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி..." (எரேமியா 32:40) என்று கூறுகிறார். 1985ம் ஆண்டு, ஆண்டவர், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தை ஆரம்பிக்கும்படி என் தந்தையிடம் பேசியபோது, அவரது ஊழியத்தின் வாயிலாக ஆசீர்வதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் தேவனுடைய திட்டத்தைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், தாங்கள் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறோம் என்று கூறிக்கொண்ட ஒரு சிலர், அவருக்கு எதிராக பேசவும் எழுதவும் ஆரம்பித்தனர். அந்தக் காலத்தில் என் தந்தையின் சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் கிட்டத்தட்ட மரிக்கும் தறுவாயில் இருந்தார். எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாமல் நாங்கள் மிகவும் பாடுபட்டோம். ஆனாலும், என் தந்தையின் பிறந்தநாளின்போது, அவர் மிகவும் பெலவீனப்பட்டிருந்தபோது, நாங்கள் குடும்பமாய் ஜெபித்தவேளையில் பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் இறங்கினார். இயேசு, மிகவும் மனதுருக்கமும் நம்பிக்கையும் உள்ளவராக அவர் முன் தோன்றினார்.
இயேசு, "என் பிள்ளையே, லட்சக்கணக்கானோர் உன்னை நேசிக்கிறார்கள். நானும் உன்னை நேசிக்கிறேன். ஆனால் உன் கண்களோ, உனக்கு விரோதமாக பொய்களை, பிசாசின் வார்த்தைகளைப் பேசும் ஒன்றிரண்டு பேர் மேலேயே உள்ளது. அந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுத்ததால் உன் சிறுநீரகங்களை சாத்தான் அழிக்கும்படி அனுமதி கிடைத்தது. இன்று என்னிடமாய் திரும்பு. என்னிடமாய் திரும்பி, உன்மேலான என் அன்பை, லட்சக்கணக்கானோர் உன்மீது வைத்திருக்கும் அன்பை சந்தோஷமாய் அனுபவி. எந்த அளவு பொல்லாத மக்கள் உன்னை சபிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக நான் உன்னை ஆசீர்வதிப்பேன்," என்று கூறினார். அவருக்கு புது சிறுநீரகத்தைக் கொடுத்து அவரை எழுப்பினார். மேலும் 28 ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். இன்று இந்திய நாட்டிலே தேவ மகிமைக்கு சாட்சியாக காருண்யா பல்கலைக்கழகம் விளங்குகிறது. அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். பிசாசும் பொல்லாத மக்களும் உங்களுக்கு விரோதமாக தீமைக்குமேல் தீமையை கொண்டு வந்தாலும் தேவன் உங்களுக்கு நன்மைக்குமேல் நன்மை செய்வார். அவர் துக்கத்தை சந்தோஷமாகவும், சாபங்களை ஆசீர்வாதமாகவும், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் மிகுந்த பலனாகவும் மாற்றுவார். நீங்கள் பரிபூரணமடைவீர்கள். இதுவே உங்களுக்கான தேவ வாக்குத்தத்தமாகும்.
வேதம், உங்களுக்குள் இருக்கும் இயேசுவின் பரிபூரணத்தினால் நீங்கள் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெறுவீர்கள் என்று கூறுகிறது (யோவான் 1:16). சங்கீதம், "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்," என்று அறிவிக்கிறது (சங்கீதம் 23:6). தேவனின் இந்த நன்மை, எல்லா சாபத்தையும், துக்கத்தையும், பொல்லாத மக்களின், பிசாசின் எல்லா கிரியையையும் அழித்துப்போடும். தேவனின் நன்மை வரும்போது, ஞானம் வரும். நன்மையான எந்த ஈவும் பரத்திலிருந்து வருகிறது (யாக்கோபு 1:17). இரண்டாவதாக, தேவனுடைய நன்மை அடைக்கலமாக வருகிறது. வேதம், "கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை," என்று கூறுகிறது (நாகூம் 1:7). மூன்றாவதாக, சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்றும் வேதம் கூறுகிறது (ரோமர் 8:28). உங்களுக்கு எதிராக தீமை வந்தாலும், தேவனால் அது நன்மையாக மாற்றப்படும். நான்காவதாக, தேவன் தம் பிள்ளைகளுக்கு நன்மையான ஈவுகளை கொடுக்கிறார் என்றும், எல்லாவற்றிலும் அதிக நன்மையான பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார் என்றும் வேதம் கூறுகிறது (மத்தேயு 7:11; லூக்கா 11:13). நன்மையின்மேல் நன்மை உங்களுக்கு வருவதாக. உங்கள் கண்களை இயேசுவை நோக்கித் திருப்புங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, எனக்கு நன்மை செய்வதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்ற உம் நித்திய உடன்படிக்கைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு எதிராக எதிர்ப்பு, துக்கம், அதைரியம் எழும்போது, என் கண்களை உம்மேலே வைத்திருக்க உதவும். எனக்கு விரோதமாக உரைக்கப்பட்ட எல்லா சாபத்தையும் உம் மகத்தான வல்லமையால் ஆசீர்வாதமாக மாற்றுவீராக. எல்லா வேதனையும், இழப்பும், போராட்டமும் என் வாழ்க்கையில் உம் நன்மைக்குச் சாட்சியாக மாறுவதாக. என்னை உம் ஞானத்தினால், சமாதானத்தினால், பரிசுத்த ஆவியின் ஆனந்தத்தினால் நிரப்பும். உம் நன்மையும் கிருபையும் என் வாழ்நாளெல்லாம் என்னை தொடருவதாக. உம் திட்டத்தை நம்புவதற்கும், எப்போதும் உம் கிருபையில் சந்தோஷப்படவும் எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


