அன்பானவர்களே, இன்று, "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்" (யோவான் 14:16) என்ற வசனத்தைத் தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, உலகத்தில் நாம் வழக்கறிஞரின் பணியினை பார்க்கிறோம். நீதிமன்ற வழக்கு இருக்குமானால், நமக்காக வாதாடவும், நம்மை தற்காக்கவும் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக்கொள்கிறோம். அவர்கள் வழக்கை முழுமையாக அறிந்திருப்பார்கள்; நம் சார்பில் நின்று, நீதிபதிக்கு முன்பு நம் தரப்பை தெரிவிப்பார்கள். ஆம், நீதிபதியே இறுதியான தீர்ப்பை வழங்குவார்.
ஆனாலும், உலகப் பிரகாரமான வழக்கறிஞர், நெருக்குதல், பண விஷயம், மிரட்டல் போன்ற தருணங்களில் நம்மைவிட்டு விலகிச் செல்வதும் உண்டு. அப்போது நாம் இன்னொரு வழக்கறிஞரை தேட வேண்டிய கட்டாயம் உருவாகும். ஆனால், இன்றைய வாக்குத்தத்தம், ஒருபோதும் நம்மை விட்டு விலகாத தேற்றரவாளனை குறித்துக் கூறுகிறது. அவர் எப்போதும் நம்மோடு இருப்பார்.
ஒருநாள், நாம் நித்திய நியாயாதிபதியின் முன்பு நிற்போம். வாழ்வில் நாம் செய்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருப்பார். அப்போது இந்தத் தேற்றரவாளன் நம்மோடு நின்று நம்மை தற்காப்பார். இந்தத் தேற்றரவாளன் யார்? அவர் பரிசுத்த ஆவியானவர். நம் அனுதின வாழ்வில், பாவம் செய்யும்படி நாம் சோதிக்கப்படும்போது, தவறான இச்சைகள் நம்மை இழுக்கும்போது, நாம் பெலவீனமாக உணரும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்துவார்; எச்சரிப்பார். அவர், "இதைச் செய்யாதே. அங்கே போகாதே. இதைச் சொல்லாதே," என்று சாந்தமாக கூறுவார். சோதனைகளை மேற்கொள்ள நமக்கு உதவிசெய்து, பாவத்தில் விழாதபடி நம்மை காப்பார்.
பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து நமக்கு நினைவுப்படுத்தி, ஆண்டவருடைய காரியங்களுக்கு நேராக நம் இருதயங்களை நடத்துகிறார். எப்படி ஜெபிக்கவேண்டும் என்றும் நமக்குத் தெரியாவிட்டாலும், அவர்தாமே நமக்காக வேண்டுதல் செய்கிறார். அவர் நம்மை வழிநடத்துகிறார்; எப்படி பரிசுத்தமாக வாழவேண்டும் என்று நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்; நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்று தொடர்ந்து நமக்கு நினைவுப்படுத்துகிறார். அவர் எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கிறார்; நீதியில் நடப்பதற்கு உதவுகிறார்; நாம் பிதாவைக் கிட்டிச் சேரப்பண்ணுகிறார்.
அன்பானவர்களே, இன்று பரிசுத்த ஆவியானவரே உங்கள் தேற்றரவாளனாயிருக்கிறார். அவர் உங்களோடிருப்பதற்கும், வழிநடத்துவதற்கும், பெலப்படுத்துவதற்கும், அனுதின வாழ்க்கையில் உங்களுக்கு உதவி செய்யவும் விரும்புகிறார். மாறாத அவரது சமுகத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க உதவும்படியும் உங்களை வழிநடத்தும்படியும் அவரை அழைத்திடுங்கள்.
ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, எப்போதும் எங்களோடிருக்கும்படியாக தேற்றரவாளனாக, துணைவனாக நீர் அருமையான ஈவாக பரிசுத்த ஆவியானவரை அருளியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் எங்களுக்கு அருகிலேயே நின்று, ஒருபோதும் எங்களை தனியே விட்டுவிடாமலிருப்பதற்காகவும் உமக்கு ஸ்தோத்திரம். அவர் வழிநடத்தும்போது, உணர்த்துவிக்கும்போது, நீதியின் பாதைகளில் நடத்தும்போது அவரது சத்தத்திற்குச் செவிகொடுக்க எங்களுக்கு உதவும். சோதனைகளை மேற்கொள்ளவும், உமக்குப் பிரியமானபடி பரிசுத்தமாக வாழவும் எங்களைப் பெலப்படுத்தியருளும். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள் என்று அனுதினமும் எங்களுக்கு நினைவுப்படுத்தும்; எங்கள் இருதயங்களை உம் சமாதானத்தாலும் சமுகத்தாலும் நிரப்பிடும். உம் பரிசுத்த ஆவியானவர், உம் பிள்ளைகளை எல்லா முடிவுகளையும் எடுக்கும்போதும் வழிநடத்தி பாதுகாக்கட்டும். அனுதினமும் அவர்கள் உம்மை கிட்டிச்சேரும்படி இழுத்து, உம் கிருபையை அவர்கள் அனுபவிக்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


