அன்பானவர்களே, "முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்" (எபேசியர் 2:13) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். வேதம், நாம் எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களானோம் என்று கூறுகிறது.பாவம், நம்மை அன்பான தகப்பனிடமிருந்து பிரித்தது. ஆனால், இயேசுவின் இரத்தத்தினால் நாம் கிட்டிச்சேர்க்கப்பட்டோம். பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள், பாவங்களுக்கு தற்காலிக பலியாக மிருகங்களின் இரத்தத்தைச் சிந்தினர். ஆனால் ஆண்டவராகிய இயேசு, அனைவருக்காகவும் பூரண பலியானார். நம் பாவங்கள் அனைத்தையும் கழுவுவதற்காக, தம் விலையேறப்பெற்ற இரத்தத்தை சிலுவையில் சிந்தி தேவனோடு நம்மை ஒப்புரவாக்கினார். பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கான நம்பிக்கையை இயேசுவின் இரத்தத்தின் மூலம் நாம் பெற்றிருக்கிறோம் (எபிரெயர் 10:19). அந்த இரத்தத்தின் மூலமாக, தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையே சமாதானம் உண்டாக்கப்பட்டது. பிரிவின் சுவர் தகர்க்கப்பட்டது; நாம் அவரது கிருபையின் பிள்ளைகளானோம்.
ஒருமுறை எங்கள் குடும்பத்திலே இந்த மறுரூபமாக்கும் வல்லமையை நாங்கள் அனுபவித்தோம். என் தாயார் புற்றுநோயால் அவதிப்பட்டபோது நாங்கள் உள்ளமுடைந்துபோனோம். என் அப்பா, பாரப்பட்டவராய், உதவியற்ற நிலையில் அவர்களோடு மருத்துவமனையில் ஆண்டுகளை கழித்தார். ஒருநாள் அவர், அங்கிருந்த சிற்றாலயத்திற்குச் சென்று தன் இருதயத்தை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர் முழங்காற்படியிட்டு, "ஆண்டவரே, என்னை மன்னியும். என் மனைவியை குணமாக்கும்," என்று அழுதார். அவருடைய இரட்சிப்புக்காக வருடக்கணக்கில் ஜெபித்து வந்த என் அம்மா, அவர் தேவனுக்கு முன்பாக அழுவதைக் கண்டார்கள். இருதயம் துதியினால் நிறைந்தவர்களாய், "என் வாழ்க்கையில் இதுதான் மிகவும் மகிழ்ச்சியான நாள்," என்று கூறினார்கள். என் வீடு பரலோக அனுபவத்தைப் பெற்றது. இயேசுவின் இரத்தம் இருதயங்களை குணப்படுத்தியதோடு அல்லாமல், எங்கள் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதிக்கத் தொடங்கியது. ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றாய் எங்கள்மேல் பொழிந்தன. நாங்கள், "நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்," என்று தைரியமாய் சொல்ல முடிந்தது. மெய்யாகவே, இயேசுவின் இரத்தம் குடும்பங்களை ஒற்றுமைப்படுத்துகிறது; குணப்படுத்துகிறது; மறுரூபமாக்குகிறது.
அன்பானவர்களே, இயேசுவின் இரத்தம் இன்றும் வல்லமையுள்ளதாயிருக்கிறது. இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது(எபிரெயர் 9:22). அநேகர் கடந்த கால அக்கிரமத்தோடு, வேதனையோடு, வெட்கத்தோடு வாழ்கின்றனர். வேதம், "இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7) என்று கூறுகிறது. என்னுடைய உறவினர், யாராவது ஜெபிப்பதற்காக வந்தால், அடிக்கடி மிகுந்த விசுவாசத்தோடு, "இயேசுவின் இரத்தம், இயேசுவின் இரத்தம்" என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள், அவரது இரத்தத்தினால் வந்தவரை அபிஷேகித்து, சுகத்தை உரைப்பார்கள். இந்த வல்லமை உங்களுக்கும் கிடைக்கும். இன்று உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுப்பீர்களா? இந்த மகா பெரிதான கிருபையை புறக்கணிக்காதீர்கள். என் தந்தை தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததுபோல் நீங்களும் தைரியமாக தேவனிடம் வரலாம்.அவர் உங்களை நேசிக்கிறார்; உங்களை மன்னிப்பதற்குக் காத்திருக்கிறார். இயேசுவின் இரத்தம் உங்கள் தோல்விகளைக் காட்டிலும் நன்மையானவற்றைப் பேசும். அவரண்டை வாருங்கள்; சமாதானம் உங்கள் இருதயத்தை நிரப்பும்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய எல்லா பாவத்தையும் கழுவி, எல்லா அக்கிரமத்தையும் அகற்றும். என்னை கழுவி, புதிய மனுஷனாக்கும். உம் இரத்தத்தின் வல்லமை என் வாழ்வில் சுகத்தையும் விடுதலையையும் அளிக்கட்டும். வேதனையிலிருக்கும் என்னை தொட்டு, தேற்றும். உம் மன்னிப்பு இன்று என் இருதயத்தை நிரப்புவதாக. ஆண்டவரே, பாவத்தின், பயத்தின் சங்கிலிகள் எல்லாவற்றையும் உடைத்துப்போடும். மறுபடியும் என்னை உம்மிடம் கிட்டிச் சேர்த்திடும்.என்னை பரிசுத்தமாக்கி, சந்தோஷமாக்கி, உம் சமாதானத்தால் நிரப்பியருளவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


