பிரியமானவர்களே, இன்று உங்களோடு தியானிப்பது மகிழ்ச்சி. இன்றைக்கு, "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்" (தானியேல் 6:22) என்ற வசனத்தைத் தியானிப்போம். இன்று அநேகர் உங்களைப் புண்படுத்திக்கொண்டிருக்கிறார்களா? நீங்கள் தவறு ஒன்றும் செய்யாதபோதும், உங்கள் பெயர் கெட்டுப்போகப்போகிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள், எல்லாவற்றையும் உத்தமமாய் செய்திருக்கலாம்; உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் எல்லோரிடமும் கனிவுடன் இருந்திருக்கலாம்; பிறருக்கு உதவியிருக்கலாம்; எல்லாவற்றையும் நல்ல நோக்கத்துடனேயே செய்திருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு எதிராய் யோசனை செய்யும் மக்கள் இருப்பார்கள்; உங்களுக்கு விரோதமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள்; நீதிமன்றத்தில் உங்கள்மேல் பொய் வழக்குக்கூட பதிவு செய்யப்படலாம். ஒருவேளை நீங்கள் பணிபுரியும் இடத்தில், உங்களைக் கீழே தள்ளவேண்டும் என்றோ அல்லது உங்களைக் குறி வைத்து புதிய விதிகளை நடைமுறைப்படுத்தவோ முயற்சிக்கலாம். ஆனாலும் அன்பானவர்களே, இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறபடி, மக்கள் உங்களை புண்படுத்துவதற்கு முயற்சித்தாலும், அவை எதுவும் உங்களைச் சேதப்படுத்தாது. ஆண்டவரின் பார்வையில் நீங்கள் குற்றமற்றவராகக் காணப்படுவீர்கள்.

தானியேலின் வாழ்விலும் இதுவே நடந்தது. அவன் ஜெபிக்கிற மனிதனாக, தன் கடமைகளை பக்தியுடன் செய்கிறவனாக இருந்தான். ஆனாலும் அவனைச் சுற்றியிருந்தவர்கள் அவனை கீழே தள்ள முயற்சித்தார்கள். தானியேலை அழிக்கும்படிக்கு ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கு அவர்கள் ராஜாவை இணங்க வைத்தார்கள். அவன் அந்தச் சட்டத்தை அறிந்திருந்தாலும், தொடர்ந்து ஜெபித்தான். ஒரு நாளுக்கு மூன்று வேளை ஜெபித்தான். கர்த்தருக்கு மாத்திரமே அவன் விசுவாசமாயிருந்தான். ஆனால், சட்டத்தின்படி ராஜாவுக்கு வேறு வழியில்லாததால், பின்விளைவுகளைச் சந்திக்கும்படி ராஜா, தானியேலை சிங்கங்களின் கெபிக்குள் போட்டான். ஆனால், கர்த்தர் தானியேலின் பக்கம் நின்றார். சிங்கங்களின் வாய்களை அடைக்கும்படி தம் தூதர்களுக்கு உத்தரவிட்டார். வேதத்தில், "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்" (தானியேல் 6:22) என்று வாசிக்கிறோம்.

இந்தச் சம்பவம், மக்கள் நம்மை எதிர்க்கும்போது, தவறாய் புரிந்துகொள்ளும்போது, தள்ளிவிட முயற்சிக்கும்போது, பொய்யான குற்றச்சாட்டுகளை நமக்கு விரோதமாய் பதியும்போது, அவற்றால் நம்மை புண்படுத்த முடியாது என்பதை நினைவுப்படுத்துகிறது. தேவனின் பார்வையில் நீங்கள் குற்றமற்றவராய் காணப்படுவீர்கள். "நான் எந்தத் தவற்றையும் செய்யவில்லை. நான் செய்த எல்லாவற்றையும் பாருங்கள். இவற்றில் எதையும் நான் செய்யவில்லை," என்று சொல்லி நியாயப்படுத்த தானியேல் முயற்சிக்கவில்லை. மாறாக, அவன் விரோதிகள் நடுவில், தானியேல் சேவிக்கிற தேவனே மெய்யான தேவன் என்று கர்த்தரே காண்பித்து அவனை கனப்படுத்தினார். இன்று அவ்விதமே, தேவன் உங்கள் விரோதிகள் நடுவில் உங்களைக் கனப்படுத்துவார். உங்கள் வாழ்வில் சிங்கங்களைக் காணும்போது, முறைகேடுகளை, குற்றச்சாட்டுகளை, நீதிமன்ற வழக்குகளை, இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது பயப்படலாம். ஆனால் ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த முடியாது. ஒன்றும் உங்களைப் புண்படுத்தாது. உங்கள் பெயரை ஒன்றும் கெடுக்காது; வாழ்க்கையை அழித்துப்போடாது. கர்த்தரின் பார்வையில் நீங்கள் குற்றமற்றவராய் இருப்பதால், உங்களுக்கு விரோதமாக வரும் சிங்கங்களின் வாயை அவர் மூடிப்போடுவார். கர்த்தரே உங்களுக்காக யுத்தம்செய்வார். ஆகவே, தைரியமாயிருங்கள்; பயப்படாதிருங்கள்; தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார்.

ஜெபம்:
ஆண்டவரே, உம் பிள்ளைகள் இன்றைக்கு தங்களைச் சுற்றிலும் நடக்கும் யாவற்றையும் பார்த்து பயப்படலாம். அவர்கள், "நான் நீதியாய் வாழ்கிறேனே, ஏன் எனக்கு இது நேரிட்டது? விசுவாசத்தையும், நீர் எனக்குக் கூறிய யாவற்றையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருந்தேனே; ஏன் எல்லாம் எனக்கு எதிராக வருகிறது?" என்று கேட்கலாம். ஆனால், ஆண்டவரே, இன்று அவர்களை பாதுகாத்தருளும். அவர்களைக் காக்கும்படியும், அவர்களுக்கு விரோதமாய் எழும்பியிருக்கும் சிங்கங்களின் வாய்களை மூடிப்போடும்படியும் உம் தூதர்களை அனுப்பியருளும். ஒரு சிறு கீறல் கூட அவர்கள்மேல் விழாமல், பத்திரமாய் காத்தருளும். ஜீவனுள்ள தேவனாகிய உமக்கு ஊழியம் செய்யும் உம் பிள்ளைகளுக்கு நற்பெயரை அளித்தருளும். அவர்கள் பட்சத்தில் நின்று அவர்களுக்காக யுத்தம் செய்திடும். குற்றமில்லாதவர்கள் என்று அவர்களை நிரூபிப்பதாக நீர் கொடுத்திருக்கும் அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அவர்களை ஆசீர்வதியும்; உம்மையே பற்றிக்கொள்ள உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.