அன்பு சகோதர, சகோதரிகளே, தேவனுடைய ஆலயம் என்று அழைக்கப்படுவது எவ்வளவு சிலாக்கியம்! வேதத்தில், பவுல், தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருக்கிறார் என்று நினைவுப்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 3:16). ஆசரிப்புக் கூடாரத்தையும் சாலொமோனின் ஆலயத்தையும் நிரப்பிய தேவன், இப்போது அவருடைய பிள்ளைகளுக்குள் வாசம்பண்ணுகிறார். நாம் அவருக்குச் சொந்தமானவர்களாயும், இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்களுமாயிருக்கிறபடியால் பரிசுத்தமாய் வாழ்ந்து அவரைக் கனப்படுத்தவேண்டும். அனுதினமும், "ஆண்டவரே, என் எண்ணம், வார்த்தைகள், செயல்கள் அனைத்தும் உம் பார்வைக்கு உகந்தவையாக இருப்பதாக," என்று ஜெபிக்கவேண்டும்.
கிறிஸ்துவின் ஆவியுடையவன் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 8:9). நம்முடைய சுயபெலத்தினால் நம்மால் பக்திக்குரியவண்ணம் வாழ முடியாது. பரிசுத்த ஆவியானவர், மாம்ச இச்சைகளை மேற்கொள்ள நமக்கு உதவி செய்து, தேவ சித்தத்தின்படி நம்மை வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியினால் தேவ அன்பு நம் இருதயங்களுக்குள் ஊற்றப்பட்டிருக்கிறது (ரோமர் 5:5). ஆகவே, அவரை துக்கப்படுத்தாதபடி கவனமாயிருக்கவேண்டும்; வாழ்வின் எப்பக்கத்திலும் நம்மை வழிநடத்த அவருக்கு இடங்கொடுக்கவேண்டும்.
சாலொமோன் தேவாலயத்தை பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தரின் மகிமை அதை நிறைத்தது (1 இராஜாக்கள் 8:10,11). அவ்வண்ணமே, நாம் நம்மை தேவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்தால், தேவ சமுகம் நம் வாழ்வை நிரப்பும். உலக ஞானத்தால் நம்மை வழிநடத்த முடியாது; ஆனால், பரிசுத்த ஆவியானவர் தேவ ஞானத்தாலும், அன்பாலும், வல்லமையாலும் நம்மை நடத்துகிறார்.
இயேசு, "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்," (யோவான் 2:19) என்று தம் சரீரத்தைப் பற்றி கூறியுள்ளார். தம் மரணத்தாலும், உயிர்த்தெழுதலாலும் இயேசு, பாவத்தையும் மரணத்தையும் மேற்கொண்டார். அவர் ஜீவிக்கிறபடியால், நமக்கு நித்திய ஜீவனைக் குறித்த நம்பிக்கை இருக்கிறது; தம் மகிமையுள்ள வருகைக்காக தேவன் நம்மை ஆயத்தம்பண்ணுகிறார் என்ற நிச்சயமும் உள்ளது. தினம் தினம் அவர் நம்மை கிறிஸ்துவைப்போல இன்னும் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமாக்குகிறார்.
தம் மகிமைக்காக நம்மை பயன்படுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மக்கள், தங்களை அவருக்கு அர்ப்பணிக்கும்போது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, அவர்களைப் பெலப்படுத்துகிறார்; மாற்றுகிறார்; தம் சேவைக்கென அவர்களைப் பயிற்றுவிக்கிறார். வேதாகமத்தில், மக்களை தேவனை மாற்றியதுபோல, இன்று நம்மையும் அவரால் மாற்ற முடியும். நம் சரீரங்களை ஜீவபலியாக அர்ப்பணிப்போம்; அவரது ஆவியினால் நிறைந்திருப்போம்; அவரது வல்லமையாலும் அன்பாலும் நிரம்பிய பாத்திரங்களாய் இவ்வுலகில் பிரகாசிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம் பரிசுத்த ஆவியால் என்னை உம் ஆலயமாக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்குப் பிடிக்காதவற்றை அகற்றி என் உள்ளத்தை, சிந்தையை, சரீரத்தை சுத்திகரிப்பீராக. உம் பரிசுத்தத்தால், உம் வல்லமையால், உம் பரிபூரண கிருபையால் என்னை நிரப்பும். மாம்சத்தின்படி வாழாமல், உம் ஆவியால் எந்நாளும் நடத்தப்பட உதவி செய்யும். என் வாழ்க்கை, என் வார்த்தைகள், என் செயல்கள் அனைத்தும் உம்மை மகிமைப்படுத்தட்டும். ஆண்டவரே, உம் ராஜ்யத்தில் என்னை பயன்படுத்தி, உம் மகிமையுள்ள வருகைக்கு ஆயத்தமாக்கும். எனக்குள் வாசம்பண்ணி என்னை உம் பரிசுத்த ஆலயமாக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


