அன்பானவர்களே, "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" (யாத்திராகமம் 14:14) என்று வேதம் கூறுகிறது. இன்னொரு மொழிபெயர்ப்பில் நாம் மௌனமாகவும் அமைதியாகவும் இருக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. "அமைதியாயிரு" என்று டி-ஷர்டுகளில் எழுதப்பட்டுள்ளதை பார்க்கிறேன். உலக மக்களே நம்மை அமைதியாயிருக்கும்படி கூறும்போது, தேவனுடைய வார்த்தை  எவ்வளவு நிச்சயமாய் அதைக் கூறுகிறது! தேவன்மேல் நாம் வைத்திருக்கும் திடநம்பிக்கையே நம்மை அமைதியாக அமர்ந்திருக்கப்பண்ணுகிறது. மக்கள் நமக்கு விரோதமாக போரிடும்போது அல்லது எதிர்பாராத உபத்திரவங்கள் நம்மை சூழ்ந்துகொள்ளும்போது நாம் அதைரியமடையவோ, கலங்கவோ அவசியமில்லை. வருத்தமடையவோ, சினங்கொள்ளவோ தேவையில்லை. மாறாக, வேதம், "நீங்கள் சும்மாயிருங்கள்," என்று கூறுகிறது. அமர்ந்திருந்து அவரே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள்.

தேவன் உங்களுக்காக யுத்தஞ்செய்வார். யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துக்கு விரோதமாக மகா சேனை வந்தபோது, அவன் தேவனிடம் எப்படி வேண்டிக்கொண்டான்? "எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது," என்று தேவ வல்லமையையும் பராக்கிரமத்தையும் ஒத்துக்கொண்டு, சகாயம் செய்யும்படி வேண்டினான் (2 நாளாகமம் 20:12).

கர்த்தர் அவனுக்கு, "இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல," என்று பதில் கூறியதாக வேதத்தில் வாசிக்கிறோம் (2 நாளாகமம் 20:17). அவர், "நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்," என்றும் கூறியதாக வாசிக்கிறோம். ஆம், அன்பானவர்களே, கர்த்தர் உங்கள் யுத்தங்களை நடத்துவார். திடமாக நிற்கவேண்டும். அமர்ந்திருந்து கர்த்தர் அருளும் விடுதலையை காணவேண்டும்.

யோசபாத் ராஜாவுக்காக யுத்தம் செய்துகொண்டிருந்தபோது கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். அம்மோனியரும் மோவாபியரும் சேயீர் மலைத்தேசத்தாருக்கு விரோதமாக எழும்பி, ஒருவரையொருவர் அழித்துக்கொண்டனர். யுத்தம் யோசபாத்துடையதாய் அல்ல; கர்த்தருடையதாய் இருந்தது. இந்த வசனத்திற்கு உண்மையாய், கர்த்தர், யோசபாத்துக்காய் யுத்தம் செய்தார். ராஜாவும் அவன் மக்களும் ஒன்றாய் உபவாசித்து ஜெபித்தார்கள். அவர்கள் கர்த்தரின் வல்லமைமேல் நம்பிக்கை வைத்து, அவரை துதித்து தொழுதுகொண்டார்கள். அவர்கள் திடநம்பிக்கையோடும், தேவனை துதித்துப் பாடிக்கொண்டும் தங்கள் விரோதிகளை எதிர்கொள்ளச் சென்றார்கள்.

இதன் காரணமாக, அவர்கள் விரோதிகள் ஒருவர் பின் ஒருவராக அழிக்கப்பட்டனர். யுத்த களத்தைப் பார்க்கும்படி ஜனங்கள் சென்றபோது, தங்கள் விரோதிகள் தோற்கடிக்கப்பட்டிருப்பதை கண்டார்கள். அவர்கள் கொள்ளையைச் சேகரித்து, களிகூர்ந்து, தேவனை துதித்தார்கள். நடந்தவற்றை சுற்றிலுமிருந்த ராஜ்யங்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் கர்த்தருக்குப் பயந்தார்கள். அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது என்று வாசிக்கிறோம் (29ம் வசனம்). ஆம், அன்பானவர்களே, உங்களுடன் போராடுகிறவர்களோடு கர்த்தரே போரிடுவார். உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பார். நம் தேவன் எவ்வளவு அன்புள்ளவர்! நாம் மனுஷீக பெலனை நம்பக் கூடாது. "சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்," என்று தாவீது கூறுவதுபோல, தேவனால் மாத்திரமே நம்மை யுத்தங்களில் ஜெயம்பெறச் செய்ய முடியும் என்று திடமாக நம்ப வேண்டும் (சங்கீதம் 20:7). ஆம், தேவனை நம்புவதினாலும், அவர்மேல் மாத்திரம் திடநம்பிக்கையாயிருந்தால் எல்லா யுத்தங்களையும் மேற்கொள்வதற்கு நமக்கு உதவுவார். கர்த்தர்தாமே எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்வார். இன்றும், உங்களுக்காக அவர் பின்னணியில் கிரியை செய்துகொண்டிருப்பார் என்று அறிந்திருக்கிறேன்.

விரோதிகள், தனக்கு எதிராக வந்தபோது யோசபாத் ராஜா என்ன நடக்கும் என்று அறியாதிருந்தான். அதேபோல், இஸ்ரவேலர் செங்கடலின் முன்னே நின்றபோது, எகிப்து இராணுவம் பின்தொடர்ந்து வந்தபோது, கர்த்தர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறியாதிருந்தார்கள். அகப்பட்டுக்கொண்ட அவர்களால், தேவனால் தங்களுக்கு வழியை உண்டுபண்ண முடியும் என்று கற்பனைகூட செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தர், பெரிய செங்கடலை பிறந்து, இஸ்ரவேலரை வெட்டாந்தரையில் நடப்பதைப்போல கடக்கப்பண்ணினார். அவ்வண்ணமே, தேவன், உங்களுக்கும் வழி ஒன்றும் தெரியாதபோதும், ஒரு வழியை உண்டாக்குவார். அவரை நம்புங்கள்; அமைதியாயிருங்கள்; அவர் அருளும் பலத்த விடுதலையைக் காணுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, நீர் என் பராக்கிரமசாலியும் சகாயருமாயிருக்கிறீர். என் எல்லா யுத்தங்களையும் செய்து, எல்லா உபத்திரவம், வியாதி, வழக்கு, சத்துருக்களிடமிருந்தும் என்னை விடுவித்தருளும். என்னோடு போராடுகிறவர்களோடு நீரே போராடும்; எல்லா வெட்கத்தையும் நிந்தையையும் அகற்றும். எல்லா சூழ்நிலையிலும் எனக்கு ஜெயத்தை தந்து, எனக்குச் சாதகமாகவே எல்லா தீர்ப்பும் வரும்படி செய்வீராக. எல்லா துன்புறுத்தலிலிருந்தும் என்னை பாதுகாத்துக்கொள்ளும்; எனக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகப்பண்ணும். எனக்கு விரோதமாக செய்யப்படும் எல்லா ஆலோசனையும் அவமாய் போகட்டும்; என் வாழ்வில் உம் பலத்த வல்லமையை விளங்கப்பண்ணவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.