எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" (மத்தேயு 2:10) என்ற வசனத்தை நாம் தியானிக்கப்போகிறோம். நட்சத்திரத்தை பார்த்தவர் யார்? அந்த நட்சத்திரம் எப்படிப்பட்டது? வேதத்தில், "ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்," (மத்தேயு 2:1,2) என்று வாசிக்கிறோம். தேவனாகிய கர்த்தரால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்திற்கு அவர்கள் நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டார்கள். அவ்வாறே, அருமையான தேவ பிள்ளையே, மக்களுக்கு தம்மை எவ்விதத்திலாவது கொடுக்கும்படி தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார். நட்சத்திரமாக மற்றவர்களை தமது சமுகத்திற்கு வழிநடத்துமாறு ஆண்டவர் உங்களை நடத்துவார். நட்சத்திரம், தெய்வீக வழிகாட்டுதலுக்கும் சந்தோஷத்திற்கும் அழகிய அடையாளமாக விளங்குகிறது.
ஆபிரகாம், நட்சத்திரங்களை தேவ வாக்குத்தத்தத்தின் அடையாளமாக பார்த்தான். நெடுங்காலமாக அவனுக்கும் அவன் மனைவிக்கும் பிள்ளையில்லாதிருந்தது. முதிர்வயதானபோதும் குழந்தை பிறக்கவில்லை. அப்போதுதான் கர்த்தர் அவனுடன், "நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்," (ஆதியாகமம் 15:5) என்று பேசினார். ஆபிரகாம், தேவனின் வார்த்தையை விசுவாசித்தான். வேதத்தில் ஆபிரகாமின் சந்ததியார் அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியதை வாசிக்கலாம் (மத்தேயு 1:1-17). அவ்வண்ணமே, சாஸ்திரிகள் நட்சத்திரத்தை நம்பினர். விசேஷித்த ஓரிடத்துக்கு தாங்கள் நடத்தப்படுகிறோம் என்று அறிந்திருந்தனர். நட்சத்திரத்தை அவர்கள் பின்தொடர்ந்தனர்; கடைசியாக, இயேசு கிறிஸ்து பிறந்திருந்த இடத்தைக் கண்டு, பெரும் மகிழ்ச்சியோடு அவரை பணிந்துகொண்டனர்.
எனக்கு அன்பானவர்களே, வேதம், "ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" (தானியேல் 12:3) என்று கூறுகிறது. இந்த உலகத்தில் நீங்களும் நட்சத்திரம்போல பிரகாசிக்கலாம். அநேகரை இயேசுவினிடத்திற்கு வழிநடத்தலாம். இருளில் வசிக்கிறவர்கள், பாவத்தில் அமிழ்ந்துபோனவர்கள் உங்கள் வாழ்க்கையின் மூலமும், சாட்சியின் மூலமும் விடுவிக்கப்படுவார்கள். இந்த உலகத்தில் தொடர்ந்து சுடர்களைப்போல ஒளிவீசும்படி வேதம் நம்மை அழைக்கிறது (பிலிப்பியர் 2:14, 15). இன்று நம்மை அர்ப்பணித்து, கிறிஸ்துவினண்டைக்கும் அவரது சந்தோஷத்திற்கும் அநேகரை வழிநடத்தக்கூடிய நட்சத்திரங்களாக பிரகாசிக்கப்பண்ணவேண்டும் ஆண்டவரிடம் கேட்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை நித்திய சந்தோஷத்திற்கு வழிநடத்துகிற, பிரகாசமுள்ள விடிவெள்ளியாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். சாஸ்திரிகளை உம் சமுகத்திற்குள் நடத்தியதுபோல, மற்றவர்களை உம்மிடம் வழிநடத்துவதாக என் வாழ்க்கை அமையட்டும். இருண்ட இந்த உலகில் உம் வெளிச்சத்தினால் பிரகாசிப்பதற்கும் செல்லுமிடமெங்கும் உம் அன்பை காட்டவும் எனக்கு உதவி செய்யும். ஆண்டவரே, உம் தெய்வீக பிரசன்னத்தின் பாத்திரமாக நான் விளங்கும்படி செய்யும்; எல்லா சந்தேகத்தின் நிழலையும் என்னை விட்டு அகற்றும். உம் சமுகத்தின் சந்தோஷத்தினால் என்னை நிரப்பும்; என் வாழ்க்கை மற்றவர்களை உம் இருதயத்திடம் கிட்டிச்சேர்க்கும் நட்சத்திரமாக விளங்கட்டும். ஆபிரகாமை போல விசுவாசம் கொண்டிருக்கவும், நீதியில் நடக்கவும் எனக்குப் போதித்தருளும். ஆண்டவரே, உம்முடைய மகிமைக்காக என்னை பிரகாசிக்கப்பண்ணும், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


