அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31) என்று கூறுகிறது. இன்று, யாருக்காவது இயேசுவைக் குறித்துக் கூறி, நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா?
வேதத்தில், அப்போஸ்தருடைய நடபடிகளில், பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் இருப்பதைக் காண்கிறோம். சிறைச்சாலையிலும் அவர்கள் தேவனை துதித்துப் பாடினர். நடு ராத்திரியிலே திடீரென்று சிறைச்சாலையின் கதவுகள் திறவுண்டன. பலத்த பூமியதிர்ச்சி சிறைச்சாலையை அசைத்தது. அதனால் சங்கிலிகள் கழன்று போயின; அனைவரும் தப்பிக்க வாய்ப்பு உருவானது. சிறைச்சாலைக்காரன் இந்தச் சத்தத்தை கேட்டபோது, எல்லோரும் தப்பி விட்டனர் என்று எண்ணினான். அவன், "என் வேலை போய்விடும்," என்று நினைத்தான். ஆனால், பவுலும் சீலாவும், "நாங்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கிறோம். கவலைப்படாதே," என்றனர். நடந்தவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சிறைச்சாலைக்காரன், பவுலையும் சீலாவையும் நோக்கி, "இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். பவுலிடமும் சீலாவிடமும் நற்செய்தியை கேட்கும்வண்ணம் தன் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வந்தான். அவர்கள் அனைவரும் விசுவாசித்தனர்; ஞானஸ்நானமும் பெற்றனர்.
அவ்வண்ணமே, அன்பானவர்களே, நம் வாழ்வில் தத்தளிப்புகளும் பிரச்னைகளும் நேரும்போது, நாம் தேவனில் விசுவாசம் வைத்திருப்பதால் அவர் அற்புதம் செய்வார். அதைக் கண்டு நாம் ஜீவனுள்ள தேவனுக்கு சாட்சிகளாக மாறுவோம். அந்நிகழ்வின் வாயிலாக, ஜனங்கள் நீங்கள் சேவிக்கும் இயேசுவைக் குறித்து அறிந்துகொள்வார்கள். உங்கள் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் இன்று எண்ணிப்பாருங்கள். உங்கள் விசுவாசம் எவ்வளவு உறுதியானது? உங்களுக்கு நடந்த அற்புதத்தின் வாயிலாக ஜனங்கள் நீங்கள் ஜீவிக்கிற தேவனை தொழுதுகொள்வதை அறிந்துகொள்வார்கள். அப்படியே பவுல் சீலாவும் சிறைச்சாலைக்காரனுக்குச் சாட்சியாக விளங்கினார்கள். சிறைச்சாலையில் ஓர் அற்புதம் நடந்தது; அவனும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டனர். யாராவது ஒருவரை ஆண்டவர் இயேசுவிடம் வழிநடத்தி இயேசுவை விசுவாசிக்க நீங்கள் உதவினால், அவர் வீட்டாரும் இரட்சிக்கப்படுவார்கள். இன்று அப்படிப்பட்ட விசுவாசத்தை தேவனிடம், "என் விசுவாசம் அற்புதங்களை நடப்பிக்கட்டும். நான் பெற்றுக்கொள்ளும் அற்புதம் இந்த உலகத்திற்கு உம் வல்லமைக்கான சாட்சியாக விளங்கட்டும்," என்று கேட்போம். ஆம், உங்கள் வாழ்க்கையில் தேவன் அதையே செய்யப் போகிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் வல்லமைக்கு உம் பிள்ளைகள் சாட்சியாக விளங்கட்டும். சிறைச்சாலையில் பவுலுக்கும் சீலாவுக்கும் நடந்ததுபோல, நாங்கள் உம்மில் வைத்திருக்கும் விசுவாசத்தினால் அற்புதங்கள் நடக்கட்டும். கடினமான, இக்கட்டான சூழ்நிலையிலும் நீர் இடைப்படும்போது, பூமியதிர்ந்து, உம் வல்லமையை நிரூபிக்கட்டும். ஜனங்கள் உம் மகத்துவமான கிரியைகளைக் கண்டு இரட்சிக்கப்படுவார்களாக. ஆண்டவராகிய இயேசுவில் அவர்கள் விசுவாசம் வைக்கட்டும்; அவர்கள் வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்படுவார்களாக. ஆண்டவரே, உம் பிள்ளைகளின் விசுவாசத்தை பெலப்படுத்தும்; அவர்கள் வாயிலாக கிரியை செய்திடும். உம் மகிமைக்கென்று அவர்களைப் பயன்படுத்தும். அவர்கள் இக்கட்டான சூழ்நிலையின் நடுவில் உம் மகிமை வெளிப்படட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


