அன்பானவர்களே, தேவன் எப்போதும் நம்மோடு பேசுகிறார். அவர் பேசும்போது, நமக்குள் சந்தோஷ ஊற்று உண்டாகிறது. இன்று, "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்" (ஏசாயா 41:15) என்று அவர் நம்மோடு பேசுகிறார். தேவன் நம்மை அப்படி உருவாக்குவதற்கு விரும்புகிறார். இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களை நாம் வாசித்தால், விரோதிகள் நம்மை விழுங்கிப்போடும்படியும், நமக்குத் தீங்கு செய்யும்படியும் வரலாம். ஆம், அவர்கள் நமக்கு விரோதமாக கண்ணிகளை வைக்கலாம். நமக்கு ஆபத்து ஏற்படுத்தும்படி வரலாம். ஆனால் கர்த்தர் உடனடியாக, "பயப்படாதே, பயப்படாதே" என்று கூறுகிறார். உங்களைத் தொடுகிறவன் தன் கண்ணின் மணியைத் தொடுவதாக அவர் சகரியாவில் கூறியிருக்கிறார். அன்பானவர்களே, அவர்கள் உங்கள் விரோதிகள் மட்டுமல்லர்; அவர்கள் தேவனுக்கும் விரோதிகளாயிருக்கிறார்கள். நாம் அவர்கள்மேல் பரிதாபம் கொள்ளவேண்டும். தேவனுடைய விரோதிகளுக்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியவேண்டும்.
ஆனால் இவற்றின் நடுவில், தேவன், "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்" என்று கூறுகிறார். விரோதத்தின் மத்தியிலும் தேவன் நம்மை வலிமைப்படுத்துகிறார். ஈசாக்கு, கேரார் என்ற ஊருக்கு வந்து, தன் தகப்பனாகிய ஆபிரகாமின் கிணற்றைத் தோண்டியபோது, அந்தத் துரவில் தண்ணீர் வந்தது. விரோதிகள், அது தங்களுக்குரிய இடம் என்று சொல்லி, "போங்கள். இது எங்களுக்குரியது," என்று கூறினார்கள். அவர்கள் அதற்கு முன்பு ஒருபோதும் கிணறு வெட்டவில்லை. ஆனாலும் தண்ணீர் வந்ததும், அதைத் திருடிக்கொள்ள வந்தார்கள். ஈசாக்கு சண்டையிடவில்லை. அவன் அடுத்தக் கிணற்றைத் தோண்டுவதற்காக சென்றான். விரோதிகள் திரும்பவும் வந்தார்கள். ஈசாக்கு, அடுத்தது அடுத்தது என்று ஒவ்வொரு கிணறாக சென்றுகொண்டே இருந்தான்.
இறுதியாக அவர்கள், "நாம் எங்கு சென்றாலும் இவரை நிறுத்த முடியவில்லை. அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் துரவுகளிலிருந்து தண்ணீர் புரண்டு வருகிறது," என்று கூறினார்கள். அதன்பின் தேவன் ஈசாக்கை மிகுதியாய் பெருகப்பண்ணினார். அபிமெலேக்கு ராஜாவும் வந்து, "நீர் யார்? எங்களுக்கு தீங்கு செய்யாதிரும். நீர் மிகவும் பெலத்திருக்கிறீர். செழித்திருக்கிறீர்," என்று கூறினான். இப்படி உங்கள் விரோதிகளும் கூறும்படி ஆண்டவர் செய்வார். ராஜாக்களும் உங்களைக் குறித்து பேசிக்கொள்வார்கள். நீங்கள் போரடிக்கும் பலத்த யந்தரமாவீர்கள். அன்பானவர்களே, உங்களைச் செழிக்கப்பண்ணுவதற்கு, உங்களை ஆசீர்வதித்து வலுப்படுத்த தேவனின் ஆச்சரியமான வழிகள் வருகின்றன. நாம் இதற்காக தேவனை ஸ்தோத்திரிப்போமாக.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னை உம் வல்லமையுள்ள ஆயுதமாக உருவாக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எதிரிகளாலோ, ஒடுக்குகிறவர்களாலோ நான் மனமடிவடையாமல் தொடர்ந்து உமது சித்தத்தை செய்துகொண்டே இருப்பேன். நீர் என்னை வலிமையான போரடிக்கும் யந்தரமாக்குகிறீர். என்னை புதிதாக்குகிறீர். ஆண்டவரே, நீர் என்னை கூர்மையாக்குகிறீர். இதைச் செய்யும்படி என்னை பெலப்படுத்தும். எனக்கு புதிய ஆவியைத் தாரும். துயரத்தின் ஆவியை, புலம்பலின், சண்டையிடுதலின் ஆவியை எடுத்துப்போடும். பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, பரிசுத்த ஆவியால் பயன்படுத்தும். நான் செய்வதெல்லாம் வாய்ப்பதாக. என் ஊற்றிலிருந்து தண்ணீர் பொங்கி வரட்டும். ராஜாக்களும், சமுதாயமும் பயப்படும்படி ஏராளமானவற்றை நான் உற்பத்தி செய்யட்டும். என்னை வளரப்பண்ணும்; செழிப்பாக்கும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


