எனக்கு அருமையானவர்களே, "தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை" (யோபு 24:22) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் பயத்தினால் நிறைந்திருக்கிறீர்களா? "நான் எல்லாவற்றையும் இழந்துபோனேன்," என்றும், "நான் ஒருபோதும் எழும்ப முடியாது," என்றும் கூறுகிறீர்களா? வேதம், "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்" என்று சொல்லுகிறது (1 கொரிந்தியர் 1:27). ஆம், இன்று நீங்கள், "எல்லோரும் என்னை முட்டாள்; பெலவீனமான பெண் என்று சொல்லுகிறார்கள்" என கூறுகிறீர்கள் என்கிறீர்களா? நீங்கள் தேவன் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறீர்கள். இந்த உலகத்தில் அனைவரும், "நான் பெலவான் / பெலமுள்ள பெண். ஞானத்தினால் நிறைந்தவன்(ள்). எனக்கு தேவன் தேவையில்லை. எனக்கு எல்லா அதிகாரமும் உள்ளது," என்று கூறுகிறவர்கள் அனைவரும், தங்கள் பெலத்தினால் உயரலாம் என்று நம்புகிறார்கள். தங்கள் சுய ஞானத்தினால் உயரத்திற்கு எழும்பியோர் பலர்; ஆனால், பொல்லாப்பு வரும்போது எல்லாமும் விழுந்துபோகும்.

பெரிய வணிகத்தில் பொருளாதார பிரச்னை ஏற்படும்போது, ஒன்றுமில்லாமையிலிருந்து அதை வலிமையானதாய் கட்டியெழுப்பிய முதலாளியே பெலவீனப்பட்டு, தாங்க இயலாத நிலையை அடைவார். அரசின் அதிரடி சோதனையால் பெயர் கெட்டுப்போன ஒருவர், வெட்கம் தாளமாட்டால் தன் குடும்பத்தை விட்டுப்போய், வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அன்பானவர்களே, இதுதான் உலகம். இந்த உலகத்தின் ஞானமும் வலிமையும் அதுதான். நாம் அதை நம்பினால், கொஞ்சகாலமே அது இருக்கும். அதற்காகவே நமக்கு தேவன் தேவை. நாம் கடந்துசெல்லும் பாதையை அறிந்துகொண்டு நம்மை பலவானாய் உயர்த்துவதற்காகவே இயேசு பலவீனரானார். அவர்தான் சிலுவையில், "மற்றவர்களை இரட்சித்தாயே, இப்போது உன்னையே இரட்சித்துக்கொள்," என்று இகழப்பட்டார்; அவமானப்படுத்தப்பட்டார். அவர்கள் அவரை ஞானமற்றவர் என்று எண்ணினார்கள். ஆனால், அவர் உங்களை, மற்றவர்கள் முட்டாள் அல்லது பெலவீனமானவன் என்று அழைப்பதை புரிந்துகொள்ளும்படி அதைச் சகித்தார்.

அவர் உங்களுக்கு தம் ஞானத்தையும் முழு சமாதானத்தையும், முழு பொறுமையையும் தந்து, பெரிய காரியங்களைச் சாதிக்கும்படி செய்வார். அந்த ஞானத்தைக் கொண்டு, பலவான்களை வியக்கப்பண்ணக்கூடிய கிருபையும் தருவார். நீங்கள் உயருவீர்கள்; உங்கள் வாயிலாக அவரது நாமமும் உயரும். வேதம், "அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்" என்று கூறுகிறது (ஏசாயா 9:6). அவர் உங்கள்மேல் இரக்கம் கொண்டு உயரே எழும்புவதற்கான ஞானத்தையும் பலத்தையும் அளித்து உதவுவார். இன்றைய வாக்குத்தத்தம் கூறுவதுபோல, உங்களுக்கு நீடித்த ஆயுளைக் கொடுத்து, உங்களை வலுப்படுத்தி, பயத்திலிருந்து உயர்த்துவார். நீங்கள் பலவானாகவும் திடமானவராகவும் மாறுவீர்கள். ஞானவானாகவும் கனமுள்ளவராகவும் மாறுவீர்கள். இந்த ஆசீர்வாதத்தினால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் பலவீனத்தோடும் பயத்தோடும் உம்மிடம் வருகிறேன். தயவாய் நான் மறுபடியும் எழும்பும்வண்ணம் என்னை பலப்படுத்தும். நாம் உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம் என்பதை நினைவுப்படுத்தும். என்னை உம் தெய்வீக ஞானம், சமாதானம், பொறுமை ஆகியவற்றால் நிரப்பும். எல்லா அதைரியத்திலிருந்தும் பயத்திலிருந்தும் என்னை உயர்த்தும். உலக பலத்தின்மேல் நாம் நம்பிக்கை வைக்காதிருக்க எனக்கு உதவும். என்னை உம் பலத்தினால் திடமானவனா(ளா)கவும் வல்லமையானவனா(ளா)கவும் மாற்றும். என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமை கொண்டுவரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.