அன்பானவர்களே, "பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார்" (யோவான் 12:14) என்று ஆண்டவர் கூறியதை இன்று தியானிப்போம். இயேசு, சாந்தமும் மனத்தாழ்மையுள்ளவருமாயிருந்தார் என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 11:29). அவர் ராஜா. ஆனால், அவர் உலகத்தில் இருந்த நாட்களில் கழுதையின்மேல் சென்றார். அவர் தாழ்மையாயிருந்தார். ஆனாலும் இஸ்ரவேலின் ராஜா என்று அழைக்கப்பட்டார். ஆண்டவர் நாத்தான்வேலை பார்த்தபோது, இயேசுவின் குணத்தை அறிந்துகொண்ட அவன் இயேசுவை இஸ்ரவேலின் ராஜா என்று கூறினான் (யோவான் 1:49). இயேசுவுக்கு பூமியிலும், பூமிக்கு மேலும் பூமிக்குக் கீழும் சகல அதிகாரமும் வல்லமையும் உள்ளது. அவர் கூறுவது அப்படியே ஆகும்.
வேதம், "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்" (சகரியா 9:9) என்று கூறுகிறது. அவர் ராஜாவாக இருப்பதால் நாம் இன்னும் அதிகமாய் களிகூரவேண்டும். ஆம், இயேசு இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். அவர் எருசலேமுக்குள் கழுதையின்மேல் ஒரு ராஜாவாக பிரவேசித்தார். அவர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருவார். அவர் ராஜா மட்டுமல்ல; ராஜாதி ராஜாவாகவும் இருக்கிறார். வேதம், "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா," என்றும், "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது," என்றும் கூறுகிறது (வெளிப்படுத்தல் 19:16; 22:12). இயேசு சீக்கிரமாக வருகிறார். அவர் வெள்ளை குதிரையின்மேல் வருவார். அவரது அங்கி இரத்தத்தில் தோய்க்கப்பட்டதாய் இருக்கும். அவர் சீக்கிரமாக வருகிறார். ராஜா உங்களிடத்தில் வருகிறார்.
2008ம் ஆண்டு, அந்த ஆண்டுக்காக புதிதான ஒரு வாக்குத்தத்தத்தை தரும்படி ஆண்டவரிடம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, "இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்," என்ற வசனத்தை கர்த்தர் காண்பித்தார் (செப்பனியா 3:15). அந்த வசனத்தை வாசித்தபோது எனக்கு மிகுந்த தைரியம் ஏற்பட்டது. இயேசுவே ராஜா. நீங்கள் செய்தவற்றுக்கு பலன் அளிக்கும்படி அவர் மீண்டும் வருகிறார். அவரை வரவேற்க நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? நாம் நம்மை எவ்வளவு பரிசுத்தமாக வைத்திருக்கிறோம்? பரிசுத்தமாயிருக்கிறவர்கள் இன்னும் பரிசுத்தமாகட்டும்; நீதியாயிருக்கிறவர்கள் இன்னும் நீதியாகட்டும். அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். உங்கள் ராஜா வந்துகொண்டிருக்கிறார். இந்த முறை அவர் வெள்ளை குதிரையில் வருகிறார். அவரை வரவேற்கும்படி உங்களை கண்கள் திறந்திருக்கட்டும். நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது, கர்த்தர் நீங்கள் செய்தவற்றுக்கான பலனை அளிப்பார். ராஜா உங்களிடத்தில் வருவதை காணும்படி ஆண்டவர்தாமே உங்கள் கண்களைத் திறப்பாராக.
ஜெபம்:
பரம தகப்பனே, இயேசுவை என் ராஜாவாகவும் என் இரட்சகராகவும் அனுப்பியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்குப் பிரியமானபடி வாழ்வதற்கு எனக்கு உதவி செய்யும். என் இருதயத்தை பரிசுத்தமாக்கி உம் வருகைக்கு ஆயத்தப்படுத்துவீராக. எல்லா பயத்தையும் அகற்றி உம் சமாதானத்தினால் நிரப்புவீராக. எப்போதும் உம்மேல் கண்களை வைத்து தினமும் நீதியாய் நடக்க எனக்குக் கற்பித்தருளும். ஆண்டவரே, நீர் வரும்போது நான் ஆயத்தமாயிருக்க உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


