எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்" (ஆதியாகமம் 13:16) என்று கூறுகிறது.

ஆபிரகாம், தேவ மனுஷனாயிருந்தான். கர்த்தருடைய வழிகளை கவனமுடன் பின்பற்றினான்; ஆனால் அவனுக்குக் குழந்தையில்லை. பல ஆண்டுகளாக அவனும் அவன் மனைவியும் குழந்தையில்லாமல் இருந்தார்கள். கர்த்தர் ஆபிரகாமுக்கு, "நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்" (ஆதியாகமம் 22:17) என்று வாக்குப்பண்ணினார். ஆபிரகாம் கர்த்தரை உண்மையுடன் தேடியும், பல ஆண்டுகள் அவனால் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவன் எப்போதும் பிதாவாகிய கர்த்தரை பற்றிக்கொண்டிருந்தான். ஆகவேதான் ஆண்டவர் ஆபிரகாமுக்கு, "நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போல பெருகச் செய்து ஆசீர்வதிப்பேன்," என்று வாக்குப்பண்ணினார்.

பிரியமானவர்களே, வேதத்தில் ஆபிரகாமின் வம்ச வரலாற்றை வாசிக்கலாம் (மத்தேயு 1:1-17). இயேசு கிறிஸ்து பிறக்கும் வரைக்கும், அவனுக்கு அநேக பக்தியுள்ள சந்ததியினர் பிறந்தனர். நெடுங்காலத்திற்குப் பிறகு அவன் சந்ததி மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது. நீங்களும் கர்த்தரின் பாதையில் நடந்தால் தேவன், மிகப்பெரிய தேவ மனுஷனான ஆபிரகாமுக்கு எல்லாவற்றையும் அருளிச்செய்ததுபோல உங்களுக்கும் கொடுப்பார். தேவன் இன்றிலிருந்து உங்களை ஆசீர்வதிக்கப்போகிறார். ஆபிரகாம் அவரை உண்மையாய் தேடியதுபோல், நீங்களும் முழு இருதயத்தோடும், இரவும் பகலும் அவரைத் தேடுங்கள். தேவனுடைய வார்த்தையை வாசித்து அவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையானது நேர்த்தியாகக் கொடுக்கப்படும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு வேண்டியவற்றை உண்மையாய் அருளுகிறவராய் இருப்பதற்காகவும், ஆச்சரியமான உம் வாக்குத்தத்தங்களுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை உண்மையாய் தேடவும், உம் வழிகளில் முழு இருதயத்துடனும் நடக்கவும் எனக்கு உதவி செய்யும். உம் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்காக காத்திருக்கும்போதே உம்மை பற்றிக்கொள்ள என்னை பெலப்படுத்தும். உம் பரிபூரண சித்தத்தின்படி எனக்கு தேவையான யாவற்றையும் அருளிச்செய்யும். குழந்தை பாக்கியம் இல்லாதிருக்கிறவர்களை விசேஷமாக நினைவுகூர்ந்து உம் வல்ல கரத்தினால் தொடுவீராக. ஆபிரகாமைபோல அவர்களை ஆசீர்வதித்து, பக்திக்கேதுவான அவர்கள் வாஞ்சைகளை நிறைவேற்றிடும். அவர்கள் வாழ்விலும் சந்ததிகளிலும் உம் ஆசீர்வாதம் பலுகிப்பெருகுவதாக. அவர்கள் உமக்காகக் காத்திருக்கும்போது விசுவாசத்தை, நம்பிக்கையை, பெலனை, சமாதானத்தை அருளிச்செய்யும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.