எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம், "நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்" (ஏசாயா 62:3) என்ற வசனத்தை தியானிப்போம். எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! கர்த்தர், தம் பிள்ளைகள், தம் கரங்களில் மகிமையின் கிரீடமாக பிரகாசிப்பார்கள் என்று கூறுகிறார். எப்போது இந்த ஆசீர்வாதம் வரும்? இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவருக்காக வாழ ஆரம்பிக்கும்போது, நம் சாட்சியினாலும் ஊழியத்தினாலும் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்போது வரும். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆலயத்தில் ஊழியம் செய்யும்போது ஆசாரியர்கள் பரிசுத்த கிரீடத்தை தரித்திருந்ததுபோல, கர்த்தர், தமக்கு உண்மையுடன் ஊழியம் செய்யும்போது தம் பிள்ளைகளுக்கு தம் பரிசுத்த கிரீடத்தை அணிவிப்பார் (லேவியராகமம் 8:9). அது பூமிக்குரிய கிரீடமல்ல; கனமும் நீதியும் நித்திய மகிமையும் நிறைந்த தெய்வீக கிரீடமாகும்.

வேதம், தேவனுடைய வேலையை செய்கிறவர்களுக்காக கிரீடங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று நிச்சயமாய் கூறுகிறது. "நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்" (2 தீமோத்தேயு 4:8). அவ்வண்ணமாகவே, பிரதான மேய்ப்பர் வரும்போது, மகிமையின் வாடாத கிரீடத்தை நமக்குச் சூட்டுவார் என் வேதம் கூறுகிறது (1 பேதுரு 5:4). ஆமாம், எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நீங்கள் தேவனுடைய பணியைச் செய்வதற்காக எழும்பும்போது, மக்கள் உங்களை குறைசொல்வார்கள்; கேலி செய்வார்கள்; உங்களுக்கு விரோதமாய் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். ஆனால், அதைரியப்படாதீர்கள். கர்த்தர் கண்ணீர் யாவற்றையும், எல்லா முயற்சிகளையும், தியாகங்களையும் காண்கிறார். நியமிக்கப்பட்ட நேரத்தில் அவர் தமது மகிமையின் கிரீடத்தை உங்களுக்குத் தந்து உங்களைக் கனப்படுத்துவார். அவரது மகிமை உங்கள்மேல் பிரகாசிக்கும் வரைக்கும் உறுதியாக நில்லுங்கள்; அவரது வார்த்தையை தியானியுங்கள்; அவரது வழிகளில் நடந்திடுங்கள்.

ஆகவே, எழுப்பிப் பிரகாசியுங்கள். வேதம், "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது" (ஏசாயா 60:1) என்று கூறுகிறது. தனியாகவோ, குடும்பமாகவோ, ஆண்டவருக்காக எதையாவது செய்வதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். ஜெபிக்கிறதாக, சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்வதாக, ஆலயத்தில் உதவி செய்வதாக, தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதாக இருக்கலாம். எதைச் செய்தாலும் உங்கள் முழு இருதயத்தோடும் செய்யுங்கள். கர்த்தர் அதில் பிரியமாயிருப்பார். அவரது வாக்குத்தத்தத்திற்கேற்றபடி, ஏற்றநேரத்தில் மகிமையின் கிரீடத்தை உங்களுக்குச் சூட்டுவார். இன்று நம்மை நாமே தாழ்த்தி, "ஆண்டவரே, என்னை உம் வழியில் நடத்தும். உம் சித்தத்தை நான் செய்யட்டும்; என் வாழ்க்கை உம்மை மகிமைப்படுத்தட்டும்," என்று அவர் கரங்களில் நம் வாழ்க்கையை புதிதாய் அர்ப்பணிப்போமாக.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னை உம்முடைய பிள்ளை என்று அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எப்போதும் உம்மை மகிமைப்படுத்தும்வண்ணம் வாழ எனக்கு உதவி செய்யும். சவால்களின் மத்தியிலும் உண்மையாய் உம்மை சேவிக்கும்படி என்னை பெலப்படுத்தும். நீதியின், மகிமையின் கிரீடத்தை எனக்குச் சூட்டுவீராக. உம்முடைய வருகை மட்டும் அனுதினமும் உம்முடைய சித்தத்தின்படி என்னை நடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.