அன்பானவர்களே, இன்று கிறிஸ்துமஸ். Dr. பால் தினகரன் குடும்பத்தினர் அனைவர் சார்பிலும், இயேசு அழைக்கிறார் குடும்பத்தின் சார்பிலும் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:11)என்ற வசனத்தின்படி இந்த கிறிஸ்துமஸில் தேவனின் மகத்தான ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழுங்கள். இந்தச் செய்தி பெரிய சந்தோஷத்தை கொண்டு வருகிறது. இரட்சகர் உலகத்திற்கு மட்டுமல்ல, உங்களுக்கு பிறந்திருக்கிறார். அவர் மேசியா. அவர் கர்த்தர்.
என் மகள் கேட்லினின் முதலாவது பிறந்தநாள், கோவிட் காலத்தின் முடிவில் வந்தது. நாங்கள் வாத்தை கருப்பொருளாகக் கொண்ட பிறந்தநாள் விருந்தை ஆயத்தம் பண்ணினோம். வாத்தைப் போன்ற கேக் வாங்கினோம். உயிருள்ள வாத்துக்களே சுற்றிலும் ஓடிக்கொண்டும் இருந்தன. பொம்மலாட்டம் ஏற்பாடு செய்திருந்தோம்; விளையாட்டுகள், உணவுகள் எல்லாம் ஏற்பாடு செய்து, அநேக உறவினர்களை அழைத்திருந்தோம். அவர்கள் அனைவரும் சிறுகுழந்தையைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் ஆவலுடன் இருந்தனர்; எங்கள் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, விலையுயர்ந்த வெகுமதிகளை கொண்டு வந்தனர். பூமியில் பிறந்த ஒரு சிறுகுழந்தைக்காக இவை அனைத்தும் நடந்தன.
உங்களுக்காகவும் எனக்காகவும் உலக இரட்சகர் பிறந்திருக்கும்போது நாம் எவ்வளவாய் மகிழவேண்டும்? அவர் நமக்காக பிறந்தார். தனிப்பட்ட விதத்தில் வல்லமையுள்ள தேவன், பெலமுள்ள தேவன். உங்கள் உள்ளத்திற்கு எவ்வளவு சந்தோஷத்தை அது தரவேண்டும்! இந்த கிறிஸ்துமஸின்போது அவர் ஒரே ஒரு வெகுமதியையே கேட்கிறார். உங்கள் உள்ளத்தை சந்தோஷத்தால் நிரப்பி உங்களுடன் வாழும்படி அதைக் கேட்கிறார். இயேசு வரும்போது காயங்கள் மறையும்; வேதனைகள் மறையும்; பெரிய சுகத்தையும் விடுதலையையும் நாம் பெறுவோம். நாம் அவர்மேல் முழு அன்பை வைத்து அதிக சந்தோஷத்தோடு இதைக் கொண்டாட வேண்டாமா? இப்போது, 'இயேசுவே, எனக்காக பிறந்ததற்காக உமக்கு நன்றி,' என்ற சொல்வோமா?
ஜெபம்:
ஆண்டவர் இயேசுவே, எனக்காக பிறந்தமையால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும் வந்ததற்காக உமக்கு நன்றி. என் வாழ்வினுள் அடியெடுத்து வைத்த வல்லமையான தேவன் நீர். இந்த கிறிஸ்துமஸின்போது நான் என் உள்ளத்தை முழுவதுமாக தருகிறேன். தயவாய் வந்து எனக்குள் வாசம்பண்ணும். ஆண்டவரே, என்னை உம் சந்தோஷத்தால் நிரப்பும். என் வாழ்வில் காணப்படும் எல்லா காயங்களும் குணமாக்கப்படுவதாக; எல்லா வேதனையும் மறைந்துபோவதாக. இன்று உம் சுகத்தையும் விடுதலையையும் என் வாழ்வில் தருவீராக. நீர் எனக்காக பிறந்ததற்காக உமக்குள் மகிழ்கிறேன். உம் மூலம் நான் பெறுகிற மிகப்பெரிய ஈவாகிய இரட்சிப்புக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


