அன்பானவர்களே, நீங்கள் இன்று களிகூரவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். "என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது" (1 சாமுவேல் 2:1). கர்த்தர், "நீ புலம்பியதுபோதும். பயந்ததுபோதும்," என்று கூறுகிறார். இஸ்ரவேலர் நுழைய முடியாதபடி எரிகோ இறுகப் பூட்டப்பட்டிருந்தது (யோசுவா 6:1). எலிசாவிடம், அவன் திக்கற்றவனாகவிடப்படுவான் என்று தீர்க்கதரிசிகள் கூறினர் (2 இராஜாக்கள் 2ம் அதிகாரம்). எதிர்மறை குரல்கள், மூடப்பட்ட கதவுகள், நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் நம்மை சூழ்ந்திருக்கலாம். யோசுவாவையும் அவன் ஜனங்களையும் எரிகோவை விசுவாசத்துடன் சுற்றி வந்து, ஏழாம் நாளில் களிகூர்ந்து வெற்றியோடு ஆர்ப்பரிக்குமாறு தேவன் கூறினார். அவர்கள் கீழ்ப்படிந்தபோது, எரிகோவின் மதில்கள் விழுந்தன. அதேவண்ணம், உங்களை முன்னேறவிடாமல் தடுக்கும் எல்லா மதில்களும் நீங்கள் கர்த்தருக்குள் களிகூரும்போது விழுந்துபோகும். வேதம், "என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது" (1 சாமுவேல் 2:1) என்று கூறுகிறது. 'நீங்கள் களிகூர முடிவு செய்திருக்கிறபடியால், உங்கள் தலை உயர்த்தப்படும்'. இது உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தமாகும்.

நாம் ஏன் களிகூரவேண்டும்? தேவனே உங்கள்பேரில் களிகூருகிறார். வேதம், "உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்... அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17) என்று கூறுகிறது. பிதா, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" (மத்தேயு 3:17) என்று கூறினார். தேவன் உங்கள்பேரில் பிரியமாயிருந்தால், நீங்கள் ஏன் பயத்தில் அல்லது துக்கத்தில் வாழவேண்டும்? "நான் தேவனுடைய பிள்ளை" என்று சந்தோஷமாக கூறுங்கள் (யோவான் 1:12). "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" (யோவான் 14:14) என்று இயேசு கூறியிருப்பதால் மகிழுங்கள். வேதம், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:4) என்று கூறுகிறது. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்றும் வேதம் கூறுகிறது (1 தெசலோனிக்கேயர் 5:16). உபத்திரவங்களின் மத்தியிலும் நீங்கள் கர்த்தருக்குள் களிகூர்ந்தால், உங்கள் வாழ்வில் அவரது ஜெயத்தை காண்பீர்கள்.

நீங்கள் களிகூரும்போது, உங்களுக்கு விரோதமாக எழும்பும் எதிரிகள் விழுந்துபோவார்கள். இஸ்ரவேலருக்கு எதிராக நின்ற மக்கள் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டார்கள். தேவ ஜனங்கள், "கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளது," என்று பாடினார்கள் (2 நாளாகமம் 20:21,22). உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக உத்தமமாயிருந்தால், நீங்கள் களிகூருவீர்கள்; சந்தோஷப்படுவீர்கள் (சங்கீதம் 32:11). தேவன் உங்கள் பட்சத்திலிருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துகொள்வீர்கள். பின்பு, வேதம் கூறுவதுபோல உங்கள் கொம்பு உயர்த்தப்படும்; நீங்கள் ஆண்டவரின் பெலத்தோடு நடப்பீர்கள் (லூக்கா 1:75). தேவன், தம் சொந்த பிள்ளையென்று உங்களை அழைப்பதை அறிவது எவ்வளவு சந்தோஷம்! அவர் ஒருபோதும் உங்களை விட்டுவிலகமாட்டார். உங்கள் இருதயத்தை இந்த சந்தோஷத்தால் அவர் நிரப்புவாராக; அவருடைய சமுகத்திற்கு முன்பாக உங்கள் வாழ்க்கையில் காணப்படும் எரிகோவின் மதில்கள் யாவும் விழுந்துபோவதாக.

ஜெபம்:
அன்பின் தகப்பனே, என்னை உம்முடைய பிள்ளையென்று அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் உள்ளத்திலிருந்து எல்லா பயத்தையும் துக்கத்தையும் எடுத்துப்போடும். பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தால் என்னை நிரப்பும். என் வாழ்வில் காணப்படும் எரிகோவின் மதில்கள் யாவும் விழுந்துபோவதாக. ஆண்டவரே, என் கொம்பை உயர்த்தி என்னை கனப்படுத்தும். எனக்கு விரோதமாக எழும்பும் சத்துருக்களுக்கு எதிராக போரிடும். எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்து, உம் சித்தத்தின்படி என்னை செழிக்கச் செய்வீராக. உமக்குள் நான் எந்நேரமும் களிகூர உதவும். மற்றவர்களுக்கு நான் சந்தோஷத்தை தருகிறவனா(ளா)க இருக்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.