அன்பானவர்களே, தேவனே எல்லாவற்றையும் கட்டியெழுப்புகிறார். எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன் என்று வேதம் கூறுகிறது (எபிரெயர் 3:4). இன்றைக்கு  "கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்," என்று வேதம் கூறுகிறது (1 நாளாகமம் 17:10). ஆகவே, அதைரியப்படாதீர்கள். தேவனால் கட்டப்படும் வீடு என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

தேவன், எந்த வீட்டை கட்டப்போகிறார்? அவர் உங்களைக் கட்டுகிறார். வேதம், "உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு..." என்று கூறுகிறது (யூதா 1:20). இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட விசுவாசத்தில், மகா பரிசுத்த விசுவாசத்தில் தேவன் உங்களைப் பெலப்படுத்துகிறார். இயேசுவே உங்கள் இரட்சகர்; உங்கள் பரம தகப்பன்; உங்கள் மீட்பர். தம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் உங்களைக் கிரயத்துக்குக்கொண்டு, தமக்குச் சொந்தமானவராக்கியிருக்கிறார்.

இந்த விசுவாசம் ஒருபோதும் தவறிப்போகாது. எந்தப் போராட்டங்கள், சிரமங்கள், பயங்கள், நிச்சயமில்லாத நிலை எழும்பினாலும், "இயேசு தம் இரத்தத்தை எனக்காக சிந்தி, என்னை மீட்டுக்கொண்டார்," என்று நீங்கள் தைரியமாக அறிக்கையிடலாம். இதுவே உங்களைப் பெலப்படுத்தி, நிலைப்படுத்தும் மகா பரிசுத்த விசுவாசமாயிருக்கிறது. நீங்கள் விசுவாசத்தில் வளரும்போது, தேவ பிள்ளையாக பெலப்படுகிறீர்கள். இந்த விசுவாசம் உங்கள் உள்ளத்தை நிரப்பும்போது, நீங்கள் பரிசுத்த ஆவியில் ஜெபிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் ஜெபங்கள் சாதாரணமானவையாக இருக்காது. அவை ஆவியில் நிறைந்தவையாய், சாத்தானின் அதிகாரத்தை நொறுக்குகிறவையாய், எதிர்ப்பை மேற்கொள்கிறவையாய், கவலைகளையும் பாரங்களையும் அகற்றுகிறவையுமாய், தேவ ஆசீர்வாதத்திற்கான வாசலை திறக்கிறவைகளுமாய் இருக்கும்.

நீங்கள் தொடர்ந்து ஆண்டவரைத் தேடும்போது, அவரது அன்பு உங்கள் உள்ளத்தை நிரப்பும். எந்தப் போராட்டம், பயம், சிரமம், அழிவு, கடினமான வார்த்தைகள், பொய்யான குற்றச்சாட்டுகள், தவறான தீர்ப்புகள் உங்களுக்கு விரோதமாக வந்தாலும் தேவ அன்பு உங்களைத் தாங்கும். எல்லா சூழ்நிலைக்கும் மேலாக எழும்பும்படியும், உங்களைப் புண்படுத்தியவர்களையும் நேசிக்கும்படியும் அவரது அன்பு உங்களைப் பெலப்படுத்தும். துக்கம், அவமானம், வேதனை இவற்றின் நடுவிலும் பரிசுத்த ஆவியானவர் உங்களை ஜெப ஆவியால் நிரப்புவார். இயேசுவைப்போல, "தகப்பனே, தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால் இவர்களை மன்னியும்," என்று உங்களால் ஜெபிக்க முடியும். தேவ அன்பு உங்கள் உள்ளத்தை மறுரூபப்படுத்தி, ஜெயத்தைத் தரும். பிறகு ஆண்டவர் உங்களை உயர்த்தி, கனப்படுத்துவார். அவர் உங்கள் வார்த்தையை நிலைப்படுத்தி, உங்களுக்கு தைரியத்தை அருளுவார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் தேவன் உங்களைக் கட்டியெழுப்புகிறதால் தைரியமாயிருங்கள். உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாயிருக்கிறது. அந்த விசுவாச ஜெயத்தை தேவன்தாமே உங்களுக்கு இன்று அருளிச்செய்வாராக.

இரண்டாவதாக, தேவன் உங்களை தம் ஆலயமாக கட்டுகிறார். இயேசு, பேதுருவிடம், "என் சபையைக்கட்டுவேன்," என்று கூறினார் (மத்தேயு 16:18). பாதாளத்தின் வாசல்கள் தம் ஜனங்களை ஒருபோதும் மேற்கொள்ளாதபடிக்கு கர்த்தர் பெலப்படுத்துகிறார். எந்த எதிர்ப்பு வந்தாலும், கிறிஸ்து உங்களுக்குள் வாசமாயிருப்பதால் நீங்கள் தைரியமாய் நிற்பீர்கள். நீங்கள் தேவனுடைய மாளிகையும் அவருடைய ஆலயமுமாயிருக்கிறீர்கள் என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 3:9,16). எவ்வளவு பெரிய சிலாக்கியம்! அவரது சமுகம் உங்கள் வாயிலாக பிரகாசிக்கும்படி தேவன், தம் நேர்த்தியான வாசஸ்தலமாக உங்களை உருவாக்குகிறார்.

நிறைவாக, மற்றவர்களைப் பெலப்படுத்தும்படியாய் ஆண்டவர் உங்களை உருவாக்குகிறார். வேதம், நம்மை கேட்டுக்கொள்கிறபடி ஒருவர் மற்றவரை கட்டியெழுப்பவேண்டும் (ரோமர் 15:2). ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியுண்டாகும்படி செய்யவேண்டும் (1 தெசலோனிக்கேயர் 5:11). தீமையான வார்த்தை எதுவும் நம் வாயிலிருந்து வரக்கூடாது. கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமான, அவர்களின் தேவைக்கேற்ற வார்த்தைகளையே பேசவேண்டும் என்று வேதம் வழிகாட்டுகிறது (எபேசியர் 4:29). மற்றவர்களை ஊக்கப்படுத்தும்படியும், அவர்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தும்படியும், இன்னும் பரிசுத்தமாக்கும்படியும், நீதியில் வளர உதவும்படியும், தேவன் தம் கிருபையால் உங்களை நிரப்பியிருக்கிறார். சுற்றிலுமிருக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதமாக விளங்கும்படி தம் ஆலயமாக உங்களை உருவாக்கியிருக்கிறார்.

தேவன் உங்களைக் கட்டியெழுப்பும்போது, நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் காரணமாக விளங்குவீர்கள். அவர் உங்களைக் குடும்பத்திலும், வேலையிலும், ஆவிக்குரியவிதத்திலும், சரீரபிரகாரமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், பொருளாதாரத்திலும் நிலைப்படுத்துவார். அவர் உங்களைச் சுகமாகக் காப்பதோடு, உயர்த்தி, நீங்கள் செல்லுமிடமெங்கும் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையை உருவாக்குகிறவராக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மகா பரிசுத்த விசுவாசத்தில் என்னை கட்டியெழுப்பும்; இயேசுவின் இரட்சிப்பின் வல்லமையை அனுதினமும் நம்புவதற்கு உதவி செய்யும். என் ஜெபங்கள் வல்லமையாக இருப்பதற்கும், உமக்குப் பிரியமாக இருப்பதற்கும் என்னை பரிசுத்த ஆவியால் நிரப்பிடும். எனக்கு இருக்கும் எல்லா பயம், துக்கம், குற்றச்சாட்டு, சிரமங்களையெல்லாம் உம் அன்பு மேற்கொள்ளட்டும். என்னை உம் பரிசுத்த ஆலயமாக்கும்; உம் சித்தத்தின்படி என் சுபாவத்தை வனைந்திடும். கிருபையுள்ள வார்த்தைகளால் மற்றவர்களை ஊக்கப்படுத்தவும், என்னை சுற்றிலுமிருக்கிறவர்களைப் பெலப்படுத்தவும், நான் செல்லுமிடமெங்கும் ஆசீர்வாதமாக விளங்கவும் எனக்கு உதவும். என் குடும்பத்தை, என் வேலையை, என் ஊழியத்தை, என் உடல்நலத்தை, என் வாழ்க்கையை உம் மகிமைக்கென்று உறுதிப்படுத்தும். முடிவு வரைக்கும் உண்மையுள்ளவனாக என்னை காத்துக்கொள்ளும்; என் வாழ்க்கையில் உம் நன்மை வெளிப்படவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.