அருமையானவர்களே, புத்தியுள்ள சிற்பாசாரியாக இருக்கும்படி ஆண்டவர் உங்களை அழைத்திருக்கிறார். பவுல், "எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்" (1 கொரிந்தியர் 3:10) என்று கூறுகிறார்.
ஒவ்வொரு வாழ்க்கைக்கும் உறுதியான அஸ்திபாரம் தேவை. அசையாத கன்மலையான இயேசு கிறிஸ்துவே அந்த அஸ்திபாரமாயிருக்கிறார். வேதம், "போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது" (1 கொரிந்தியர் 3:11) என்று குறிப்பிடுகிறது. தமது சிங்காசனம் நிலைப்படுத்தப்பட்டிருக்கும், தம் மகிமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் அரண்மனையாக உங்கள் வாழ்க்கையைக் கட்டுவதற்கு ஆண்டவர் விரும்புகிறார். தமக்கு உண்மையாக இருக்கிறவர்களை அவர் நோக்கிப்பார்க்கிறார் (1 கொரிந்தியர் 4:2); உலகின் பார்வையில் திறமையுள்ளவர்கள், செல்வாக்குள்ளவர்கள், வெற்றிகரமானவர்களை ஆண்டவர் நோக்கவில்லை.
ஆண்டவர், நம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தை முதலாவது விசுவாசத்தின் வாயிலாக பெலப்படுத்துகிறார். வேதம், "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17) என்று கூறுகிறது.
இந்த உலகத்தில் நாம் அனைவரும் உபத்திரவங்களை, நிச்சயமின்மையை சந்திக்கிறோம். ஆண்டவர், தன் வார்த்தையின் வாயிலாக பேசுகிறபடி, விசுவாசம் நமக்குள் பிறக்கிறது. இந்த உலகத்தை வெல்லும்படி அசைக்கமுடியாத விசுவாசமே நம் அஸ்திபாரமாகிறது.
ஆண்டவர் சோதனைகள், உபத்திரவங்கள் வாயிலாக உங்கள் வாழ்க்கையின் அஸ்திபாரத்தை பெலப்படுத்துகிறார். நீங்கள் அவற்றின் வாயிலாக கடந்துசெல்லும்போது, அவர் உங்களை பரிசோதிக்கப்பட்ட விலையேறப்பெற்ற மூலைக்கல்லாகிய இயேசுவின்மேல் ஸ்திரமாக நிலைப்படுத்துவார். வேதம், " இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்" (ஏசாயா 28:16) என்று கூறுகிறது.
தங்கம், நெருப்பினால் சுத்திகரிக்கப்படுகிறது. வெள்ளி, அதிக வெப்பத்தினால் சுத்திகரிக்கப்படுகிறது. அதேவண்ணமாக, உங்கள் வாழ்க்கையும் புடமிடும் அக்கினி வழியாக கடந்து செல்லும் தருணங்கள் ஏற்படலாம்.
அன்பானவர்களே, இந்தத் தீவிர உபத்திரவங்களே பெரும்பாலும், உயர்ந்த ஸ்தானத்துக்கு தேவன் உங்களை உயர்த்துவதற்கு ஆயத்தப்படுகிறவையாயிருக்கும். அவரது நோக்கத்தின் அடுத்த நிலைக்கு உங்களை வழிநடத்தும் படிகளாயிருக்கும்.
யோபு, ஆபிரகாம், யோசேப்பு, தானியேல் ஆகியோர் சோதிக்கப்பட்டபோது, ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆண்டவர் அவர்களோடு நின்றார். அவரே, அவர்களைக் கனத்துடன் வெளியே கொண்டு வந்தார். முன்பைக் காட்டிலும் அதிக கனத்துக்குரிய ஸ்தானங்களுக்கு அவரே அவர்களை உயர்த்தினார். ராஜாக்களுக்கும் ஆளுகை செய்கிறவர்களுக்கு முன்பாக அவர்களை அமர்த்தினார்; அவர்கள் வாழ்வின் வாயிலாக தம் மகிமை விளங்கும்படி செய்தார். உங்களுக்கும் அதையே ஆண்டவர் செய்வார்.
பரீட்சிக்கப்படும் கல்லாக இருக்க உங்களை அனுமதிக்கும்போது, அவர் விலையேறப்பெற்ற கல்லாகவும் உங்களை வடிவமைக்கிறார். மற்றவர்கள் முன்பு உங்களைக் கனப்படுத்தி, அவரது மகிமையை வெளிப்படுத்தும் ராஜரீக மாளிகையாக உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவார்.
ஆண்டவர் தம் தீர்க்கதரிசன வார்த்தையின் வாயிலாக நம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தை பெலப்படுத்துகிறார். வேதாகமம் முழுவதும், ஆண்டவர் தம் ஊழியர்களின் வாயிலாக, தம் ஜனங்களை தம் காரியங்களுக்காக ஆயத்தப்படும்படி தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். ஆண்டவர் தம் காரியங்களைச் செய்துமுடிப்பதற்கு முன்னாக, தம் ஜனங்கள் விழித்திருந்து ஜெபிக்கும்படி தம் இருதயத்தை வெளிப்படுத்துகிறார். ஆண்டவர், ஒரு நபருக்கு கனம் உண்டாகும்படியோ, ஒரு தீர்க்கதரிசியை பிரபலப்படுத்தும்படியே தீர்க்கதரிசனத்தைக் கொடுப்பதில்லை. நம் விசுவாசத்தைப் பெலப்படுத்தவும், எதிர் வருகிறவற்றுக்கு நம்மை ஆயத்தம்பண்ணுவதற்கும், தம்மிடம் நம்மை கிட்டிச்சேர்ப்பதற்குமே தீர்க்கதரிசனத்தைக் கொடுக்கிறார். தீர்க்கதரிசனம் தேவனிடமிருந்து வருகிறபடியால், அது அவரது வேளையில்தான் நிறைவேறும்; நம் வேளையில் அல்ல. சிலவேளைகளில் தீர்க்கதரிசனம் கொடுக்கப்படுவதற்கும் அது நிறைவேறுவதற்கும் இடையே தாமதம் காணப்படலாம். ஆகவேதான் வேதம், "குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; ...அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை" என்று கூறுகிறது (ஆபகூக் 2:3). கடைசியாக, எல்லா தீர்க்கதரிசனங்களும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்ப வருவார் என்ற மகிமையான சத்தியத்தை குறிக்கின்றன.
அன்பானவர்களே, ஆண்டவர் வரும் முன்னதாக, உங்கள் முழுவதுமாக அவருக்கு அர்ப்பணித்திடுங்கள். நித்திய அஸ்திபாரமான இயேசு கிறிஸ்துவின்மேல் உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புங்கள். அப்போது, ஆண்டவர் உங்களை தமது ராஜரீக வாசஸ்தலமான அரண்மனையாக கட்டியெழுப்புவார்; உங்களை கனத்தில் எழுப்புவார்; தம் நோக்கத்திற்கென நிலைப்படுத்துவார்; உலகம் பார்க்கும்வண்ணம் தம் மகிமையை உங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையை முழுவதுமாக உம் கரங்களில் ஒப்படைத்து, நீரே திட அஸ்திபாரமாக இருக்கும்படி கேட்கிறேன். எப்போதும் உமக்கு உண்மையாக இருக்கவும், விசுவாசத்தில் வளரவும், உபத்திரவங்களின் வழியாக நடந்தாலும் உம் வார்த்தையை நம்பவும் உதவி செய்யும். உம் வாக்குத்தத்தங்களுக்காக பொறுமையோடு காத்திருக்கவும், அவை தாமதித்தாலும் உறுதியாயிருக்கவும் எனக்குப் போதித்தருளும். உம் வருகைக்கென்று என் இருதயத்தை ஆயத்தப்படுத்தும்; என் வாழ்க்கை உமக்குச் சாட்சியாக விளங்குவதற்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


