விலையேறப்பெற்றவர்களே, இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன். இன்று நாம் தியானிக்கப்போகிற வசனம், ஏசாயா 62:12. "அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்". ஒருவேளை நீங்கள் தேவனைவிட்டு தூரமாயிருப்பதாக உணரலாம். நீங்கள் அவசியமற்ற, பாவமான பழக்கங்களால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கலாம். அன்பானவர்களே, 1 கொரிந்தியர் 1:9, "தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்" என்று கூறுகிறது.
நீங்கள் முழுமனதோடு தேவனை தேடினால், என்ன நடக்கிறது?, தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டும் (1 தெசலோனிக்கேயர் 2:11) என்று கூறுகிறது. 2 தீமோத்தேயு 1:9 என்ற வேத வசனம் “அவர் நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்’’ என்பதை நினைவூட்டுகிறது. ஆண்டவராகிய இயேசு நமக்காக சிலுவையிலே தம் ஜீவனை தந்தார். உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மீட்பதற்காக, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினார். ஆம், இவ்வுலகம் தீமையால் நிறைந்தது. ஆனால் நண்பர்களே, நீங்கள் இயேசுவை நோக்கி பாருங்கள். அவரே இவ்வுலகத்தின் ஒளியாயிருக்கிறார்.
நீங்கள் அவரது முகத்தைப் பார்த்து அவருடைய பிரசன்னத்தை தேடும்போது, அவரது மகிமையின் ஒளியால் உங்களை நிரப்புவார். உங்கள் வாழ்விலுள்ள அத்தனை இருளையும் நீக்குவார். உங்கள் குடிப்பழக்கம் மாறிப்போகும். உங்கள் இதயத்திலுள்ள வெறுமை தேவ சமாதானத்தால் நிறையும். ஒருவேளை நீங்கள், என் வாழ்வில் சமாதானமே இல்லை என்று கூறலாம். தேவன் நிச்சயமாக அவரது சமாதானத்தை உங்களுக்கு கொடுப்பார். இப்போதும், இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் உங்களுக்கு கொடுக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் கைவிடப்படுவதில்லை. அவரை பற்றிக்கொள்ளுங்கள்.
Prayer:
அன்பான தேவனே, கிறிஸ்துவுக்குள் நீர் என்னை பரிசுத்த ஜனமாக மீட்டுக்கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உம்மைவிட்டு தூரமாய் உணர்ந்தாலும், உம் அன்பு என்னை தேடி வரும். என் பாவத்தையெல்லாம் கழுவி, என்னை உம்மிடமாக இழுத்துக்கொள்ளும். உம்முடைய வெளிச்சத்தால் என்னை நிறைத்து, என்னிலுள்ள இருளை நீக்கும். தீமையான பாவங்களை என்னைவிட்டு நீக்கி, உம்முடைய சமாதானத்தால் என்னை நிரப்பும். என் குடும்பம், என் சிந்தனை, உம்முடனான என் உறவு எல்லாவற்றையும் சீர்ப்படுத்தும். உம்முடைய பரிசுத்த அழைப்பிற்கேற்றபடி நடக்க எனக்கு உதவி செய்யும். நான் விழுந்தாலும் நீர் என்னை கைவிடாமல் இருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.