அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" (நீதிமொழிகள் 11:30) என்று கூறுகிறது.

ஏன் வேதம் இப்படி கூறுகிறது? என் தாத்தா Dr.டி.ஜி.எஸ். தினகரனின் வாழ்க்கையைப் பார்த்தால் இதற்கான விடை கிடைக்கும். தன் இறுதி மூச்சு வரை அவர் மற்றவர்களுக்கு சேவை செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். ஜெப விண்ணப்பங்களை அனுப்புகிறவர்களுக்காக ஜெபிக்கிறதை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. அவர்கள் அனுப்பும் கடிதங்களுக்கும் மின்னஞ்சல்களுக்கும் அவர் உண்மையாய் பதில் எழுதினார். வியாதிப்பட்டோரை பார்த்து அவர்களுக்காக ஜெபித்தார். தேவன் வாசல்களைத் திறந்த இடங்களில் பிரசங்கித்தார். தொலைக்காட்சி வாயிலாக ஊழியம் செய்தார். தலைவர்கள், அறிவார்ந்தவர்கள், தேவ ஊழியர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். பெரிய தேவைகளுடன் மக்கள் அவரிடம் வரும்போதெல்லாம், அவர் முதலாவது ஆண்டவரின் சமுகத்தில் காத்திருப்பார்; தேவனுடைய வழிகாட்டுதலை தேடி, பிறகு தேவனுடைய வார்த்தையை அவர்களுக்குக் கூறுவார். வாழ்வின் இறுதி வரையே இதுவே அவர் பாதையாக இருந்தது. அவர் கொஞ்சமும் தாமதிக்கவில்லை; ஆறுதலை தேடவில்லை. மாறாக, தேவன் அவருக்குக் கொடுத்த அழைப்பில் உண்மையாயிருந்தார். அநேகர், "ஏன் இன்னும் இவர் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்? இதுவரை செய்தவற்றைக் கொண்டு இறுதி காலத்தில் ஓய்வெடுத்து, வாழ்க்கையை இன்பமாய் அனுபவிக்கலாமே?" என்று கேட்டனர். ஆனாலும், அவர் இன்னொரு பாதையை தெரிந்துகொண்டார். மக்களின் வாழ்வுக்காக உழைப்பதன் நித்திய பெறுமதியை புரிந்திருந்ததால் அவர் தம் பெலனை மற்றவர்களின் நலனுக்காக செலவழித்தார்.

அவர் உண்மையுடன் விதைத்ததால், இன்று பல லட்சம் பேர் உலகெங்கும் நற்செய்தியை பிரசங்கிக்கின்றனர்; சமுதாயங்களை ஆசீர்வதிக்கின்றனர்; தேசங்களைப் பெலப்படுத்துகின்றனர்; ஆண்டவருக்கு ஊழியம் செய்கின்றனர். அவர் வாழ்க்கை உண்மையிலேயே ஜீவவிருட்சமாகியது. பல லட்சக்கணக்கானோர் நன்றியுடன் அவரை நினைவுகூர்ந்தாலும், அவரது ஊழியத்தின் பலனாக, அவர் வழிநடத்திய, தைரியப்படுத்திய, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும்படி தூண்டிய சந்ததியினர் தொடர்ந்து பெருகி வருகின்றனர். இன்றைய வாக்குத்தத்தம், "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" என்று அதையே கூறுகிறது.
உலகம், நமக்காக வாழ்வதற்கான, செல்வத்தைச் சேர்ப்பதற்கான, தனிப்பட்ட வசதியை அனுபவிப்பதற்கான ஞானத்தை போதிக்கிறது. மற்றவர்களுக்காக நம் வாழ்வை தியாகம் செய்வது முட்டாள்தனம் என்கிறது. ஆனால், தேவ ஞானம் முற்றிலும் வேறானது. அவரது பார்வையில், மற்றவர்களுக்காக உழைப்பவர்கள், மக்களை ஜீவனுக்கேதுவாக நடத்துகிறவர்கள் மெய்யான ஞானவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஆசீர்வாதம் அளிக்கும் ஜீவவிருட்சமாக கனி கொடுக்கிறது. நம்மையும் அப்படிப்பட்டவர்களாக்கும்படி ஆண்டவரிடம் கேட்போம். நம் வாழ்க்கை, மற்றவர்களுக்கு நம்பிக்கையை, சுகத்தை, இரட்சிப்பை அளிக்கும் கனியை கொடுக்கட்டும். நாம் உண்மையாய் அவருக்கு சேவை செய்யும்போது, நம் செல்வாக்கு, வரும் தலைமுறையிலும் அநேகருக்கு ஆசீர்வாதத்தை அளிக்கட்டும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நித்தியமான கனியை தரும்படி வாழ்வதற்காக என்னை அழைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீதியில் நடக்கவும், முழு இருதயத்தோடும் உமக்கு உண்மையாய் ஊழியம் செய்யவும் எனக்கு உதவும். என்னைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி என்னை உம் மனதுருக்கத்தால் நிறைத்திடும். நீர் எனக்கு தந்திருக்கும் எல்லா வரமும், தாலந்தும், வாய்ப்பும் மற்றவர்களுக்கு நம்பிக்கையை, சுகத்தை, இரட்சிப்பை அளிக்க பயன்படட்டும். என் வசதியையோ, ஆதாயத்தையோ தேடாமல் உத்தமமாய் விதைக்க எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். சந்ததிகளை ஆசீர்வதித்து, அநேகரை தொடர்ந்து உம்மண்டை வழிநடத்தும்படி என் வாழ்க்கை ஜீவ விருட்சமாய் விளங்குவதாக. அற்புதங்களைச் செய்யும் வல்லமை என் வாயிலாக பாய்ந்து செல்லட்டும். என் வாழ்க்கையில் நீர் செய்து முடிக்கிறவை உம் பரிசுத்த நாமத்திற்கு மகிமையாய் விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.