அன்பானவர்களே, ஜெயத்தை தரும் தேவனை நாம் சேவிக்கிறோம். அவருடைய வாக்குத்தத்தங்களை, அவருடைய வார்த்தை மூலமாக நாம் பெற்றுக்கொள்ளும்போது அந்த ஜெயம் கிடைக்கிறது. வேதம், "சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக" (2 தெசலோனிக்கேயர் 3:16) என்று கூறுகிறது. இந்த சமாதானம், உலகம் தரக்கூடிய சமாதானம் அல்ல. இந்த உலகத்தில் ஒரு பிரச்னை தீர்க்கப்படும்போது, ஒரு காரியம் நன்றாக முடியும்போது, ஒரு பாரம் அகலும்போது சமாதானம் வருகிறது. அது எவ்வளவு நேரம் நிலைத்திருக்கும்? அடுத்த சவால் வரும் வரைக்கும்தான் இருக்கும். தேவனுடைய சமாதானம் வித்தியாசமானது. அவரது சமாதானம் உங்கள் இருதயத்தை எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு போர்ச்சேவகனைபோல காக்கிறது (பிலிப்பியர் 4ம் அதிகாரம்).
இயேசுவில் இந்த சமாதானத்தை காண்கிறோம். அவரும் அவரது சீஷர்களும் புயலின் நடுவே சிக்கிக்கொண்டபோது, அலைகள் படகின்மேல் மோதின. ஆனால், இயேசு சமாதானமாக உறங்கிக்கொண்டிருந்தார். சீஷர்கள் பயந்துபோய் அவரை எழுப்பியபோது, அவர், "ஏன் பயப்பட்டீர்கள்?" என்று கேட்டார். நாம் அவரை நம்பும்போது அதே சமாதானத்தை நமக்குள் வைக்கிறார். வேலைக்கான நேர்முக தேர்வில் நிராகரிக்கப்படும்போது, மருத்துவ அறிக்கை அதிர்ச்சியை அளிக்கக்கூடியதாய் வரும்போது, மக்கள் நம்மை அச்சுறுத்தும்போது தேவ சமாதானம் நம்மை திடமாய் இருக்கும்படி செய்யும். "பயப்படாதே, ஆண்டவர் இதிலிருந்து உன்னை வெளியே கொண்டுவருவார்," என்று அது சொல்லும். இது, அவர் மட்டுமே தரக்கூடிய நித்திய சமாதானமாகும்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்த ஒரு மனிதர் என் நினைவுக்கு வருகிறார். அவநம்பிக்கையின் காரணமாக, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர் விரும்பினார். ஆனால், ஒரு நாள் எங்கள் கூட்டம் ஒன்றுக்கு அவர் வந்தார். என் அம்மா, "தேவன் உங்கள் வாழ்வை மறுபடியும் கட்டுவார்," என்று கூறியதைக் கேட்டபோது, பெரிய சமாதானம் அவர் உள்ளத்தை நிறைத்தது. அவர் மனதின் எண்ணங்கள் முற்றிலும் மாறின. அடிமைத்தனம் அகன்றது. தேவன், அவர் உயிரையும் வேலையையும் திரும்ப கொடுத்து, வாழ்க்கையையே தலைகீழாக மாற்றினார். தேவ சமாதானத்தின் ஆற்றல் அது. அன்பானவர்களே, இன்றைக்கும் அந்த சமாதானம் இருக்கிறது. உங்கள் இருதயத்தை திறந்து, ஆண்டவரிடம் கேளுங்கள்; ஒருபோதும் மங்காத அவரது சமாதானத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையில் எல்லா புயல்களையும் அமைதிப்படுத்துகிறவராக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உலகம் தரக்கூடாத, எடுக்கமுடியாத நித்திய சமாதானத்தை தந்து என் இருதயத்தைக் காத்துக்கொள்ளுகிறபடியினால் நன்றி செலுத்துகிறேன். உபத்திரவங்கள் எழும்போது, நிராகரிக்கப்படும்போது, பயம் மேற்கொள்ள முயலும்போது, உம்முடைய பெலத்தை சார்ந்துகொள்ள எனக்கு உதவும். அனுதினமும் உம்முடைய சமாதானம் எனக்குக் கேடகமாகவும், ஆறுதலாகவும், திடநம்பிக்கையாகவும் இருப்பதாக. ஆண்டவரே, என் இருதயத்தை உம் கரங்களில் தருகிறேன்; என்னை உம் சமுகத்தால் நிரப்பி, உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகள் மூலமாக ஜெயத்தினுள் நடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.