அன்பானவர்களே, இன்றைக்கு இரட்சகர் நம்மோடு இருக்கிறார். இந்த நம்பிக்கையே நமக்கு சந்தோஷத்தை தருகிறது. அவர் உங்களை கைவிடமாட்டார். "நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்" (ஏசாயா 51:11) என்று கர்த்தர் நம்மைக் குறித்துக் கூறுகிறார். நெடுங்காலம் அடிமைத்தனத்திற்குள் இருந்து திரும்பும், தம் இஸ்ரவேல் மக்களைக் குறித்து கர்த்தர் இவ்விதம் கூறுகிறார். அவர்கள் ஒடுக்கப்பட்டு துன்பத்தை அனுபவித்தனர். ஆனால், கர்த்தர் அவர்களை மீட்டு, பாடிக்கொண்டு சீயோனுக்கு திரும்பும்படி செய்தார். தேவன் தங்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு திரும்பும்போது அவர்கள் முகங்களில், உள்ளங்களில் எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும் என்பதை எண்ணி பாருங்கள். அன்பானவர்களே, இன்றைக்கு நமக்கும் அதே சந்தோஷம் உண்டாயிருக்கும்.
உங்களை ஒடுக்குகிற மக்களால் நீங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் இருக்கும் பொறுப்புக்காக, பதவிக்காக உங்களை ஒடுக்கலாம். மக்கள் உங்களை வெட்கப்படுத்தியிருக்கலாம். ஒரு தரப்பு மக்கள் தொடர்ந்து உங்களை துன்புறுத்திக்கொண்டிருக்கலாம்; வேறு வழியின்றி நீங்கள் அதை சகித்துக்கொண்டிருக்கலாம். நிலத்துக்குச் சொந்தக்காரரால், அண்டைவீட்டாரால், தலைவர்களால் நீங்கள் ஒடுக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் ஆண்டவரின் நாமத்திற்காக அவற்றைச் சகித்துக்கொண்டதால், இதுவே அவர் உங்களை மீட்கும் நேரமாகும். ஆண்டவர் உங்கள் உண்மையை கண்டிருக்கிறார்; நீங்கள் அவரை நம்பி பொறுமையாயிருந்தீர்கள். அன்பானவர்களே, இப்போது அவர் உங்களுக்கு விடுதலையை அளிக்கிறார்.
ஒரு பெண்மணி பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தார்கள். எங்கள் பிரார்த்தனை திருவிழா மேலாளர், என் தந்தையை தொடர்புகொண்டு, "உடனே வாருங்கள். இங்கே பிசாசு பிடித்த ஒரு பெண் உங்கள் பெயரைக் கூறுகிறார். என்னை எரிப்பதற்கு பால் தினகரன் வருகிறார்," என்று சொல்கிறார் என்று கூறினார். என் தந்தை அப்போது தொண்டையில் பிரச்னையினால் கூட்டத்தில் கூட பேச முடியாத நிலையில் இருந்ததால் வியப்படைந்தார். ஆனாலும், மேடைக்குப் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்குள் சென்றார். அந்தப் பெண்ணையும், அவர்கள் இரு பிள்ளைகளும் அருகில் நின்று தங்கள் தாய் படும் வேதனையை கண்டுகொண்டிருப்பதையும் பார்த்ததும் மனதுருகினார். குரல் சரியாக வராதிருந்தும், "ஆண்டவரே, இந்தப் பிசாசு இவர்களை விட்டு விலகட்டும். இரக்கம் காட்டி இவர்களை விடுவித்தருளும்," என்று ஜெபித்தார்கள். உடன்தானே பிசாசு அவர்களை விட்டு ஓடியது. அவர்கள் தரையில் விழுந்தார்கள். அந்தத் தருணமே என் தந்தையின் குரல் திரும்பி வந்தது. அந்தத் தாய் விடுதலை பெற்றதால் மகிழ்ச்சியடைந்தார்கள். முன்பிருந்தவண்ணமே, தங்கள் தாய் கிடைத்ததால் பிள்ளைகளும் சந்தோஷமடைந்தார்கள். குடும்பமே ஒன்றாய் இணைந்து ஆனந்தமடைந்தார்கள். அன்பானவர்களே, இதுவே நமக்கான நேரம். இப்போது தேவனிடம் அதுபோன்ற விடுதலையை கேட்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வில் காணப்படும் எல்லா பாரத்தையும் ஒடுக்குதலையும் நீர் பார்க்கிறீர். வேதனை, வெட்கம், உதவியற்ற நிலைமையின் நடுவில் நான் உமக்காக காத்திருக்கிறேன். இன்று, நீர் அருளும் விடுதலை என் வாழ்வில் வருவதாக. நெடுங்காலமாய் என்னை சிறைப்படுத்தி வைத்திருக்கும் எல்லா சங்கிலியையும் உடைத்தருளும். மறுபடியும் என் உள்ளத்தை நித்திய சந்தோஷத்தாலும் மகிழ்ச்சியாலும் நிறைத்தருளும். என் சமாதானத்தை, கௌரவத்தை, நம்பிக்கை திரும்ப தருவீராக. உம் ஜனங்களை மீட்டுக்கொண்டு, ஒடுக்கப்பட்டோரை விடுவித்ததுபோல என்னையும் மீட்டுக்கொள்ளும். நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர் என்று விசுவாசித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


