அருமையான தேவ பிள்ளையே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்" (சங்கீதம் 119:114) என்று கூறுகிறது. தேவ பிள்ளைகளாகிய நாம், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். வேதம், "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்" (யோவான் 14:23) என்று கூறுகிறது. நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து, காத்துக்கொள்வோமானால், பிதாவாகிய தேவன் வருவார்; நம்மோடு தங்குவார்; இயேசு கிறிஸ்துவும் நம்மோடு வாசம்பண்ணுவார்.

வேதத்தில், மரியாளையும் அவள் சகோதரி மார்த்தாளையும் குறித்து வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மரியாள் நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்று கூறியதாக வாசிக்கிறோம் (லூக்கா 10:42). இயேசுவின் பாதத்தினருகே அமர்ந்து அவரது வார்த்தையைக் கேட்டதால் மரியாள் நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள். இயேசுவும் அவள் நல்ல பங்கைத் தெரிந்துகொண்டதாகக் கூறியுள்ளார். அவ்வண்ணமே, அருமையானவர்களே, உங்களால் இயன்ற வரையில் தேவனுடைய வார்த்தையை வாசிக்கவேண்டும். அவ்வாறு தேவனுடைய வார்த்தையை வாசித்தால், ஆண்டவர்தாமே, உங்களோடு தங்கியிருப்பார். அவரது சமுகத்தையும் பரிபூரண ஆசீர்வாதத்தையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆகவே, உங்கள் அனுதின வாழ்வில் தேவனுடைய வார்த்தைக்கு முக்கிய இடத்தைக் கொடுங்கள்.

என் தாயார், தன் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் ஒரு காரியத்தைச் செய்வது வழக்கம். பிள்ளைகளின் சிறிய வயதிலேயே ஒரு வேதாகமத்தை வாங்கி, அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுப்பார்கள். அப்படிச் செய்வதோடல்லாமல், அதை வாசித்து, வசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் வைப்பார்கள். ஆகவேதான் அவர்களுடைய நான்கு பிள்ளைகளான நாங்கள் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் வேதத்தை வாசிக்க எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம் என்று ஆராய்ந்து பார்ப்போம். தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒழுங்காக அதை வாசிப்போமானால், நாமும் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப்படுவோம். நாம் வாசிக்கவேண்டியவிதமாய் தேவனுடைய வார்த்தையை வாசிப்போம். அதை வாசிக்கவும், தியானிக்கவும், அர்த்தத்தை புரிந்துகொள்ளவும் போதுமான நேரத்தை செலவழிப்போம். தேவனுடைய வார்த்தையே நமக்கு மறைவிடமாகவும், கேடகமாகவும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையை நாம் நம்பும்போது, ஆண்டவர்தாமே நம்மோடிருப்பார்; நம்மை வழிநடத்துவார். அவரது வாக்குத்தத்தத்தின்படியே, அவர் நிச்சயமாய் நம் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார். ஆகவே, அருமையானவர்களே, தினமும் வேதத்தை வாசிக்கும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுவோம். வேதத்தை வாங்கிக்கொள்ளுவது மட்டுமல்லாமல், அதை வாசிப்போம்; புரிந்துகொள்ளுவோம்; தியானிப்போம்; அதன்படி வாழ்வோம்.

ஜெபம்:
அன்புள்ள பரம பிதாவே, உம் வார்த்தையை வாசிக்கவும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும், அதன்படி நடக்கவும் வேண்டிய கிருபையை உம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் அருளுவீராக. உம் வார்த்தையே அவர்களுக்கு மறைவிடமும் கேடகமாகவும் இருப்பதாக. மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரது வார்த்தையைக் கேட்கும் நல்ல பங்கைத் தெரிந்துகொண்டதுபோல, அனுதினமும் இவர்கள் நல்ல பங்கைத் தெரிந்து கொள்ள உதவி செய்யும். உம் வார்த்தையினால் அவர்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்தருளும். சகோதரியின் தாயார் தன் நான்கு பிள்ளைகளுக்கு வேதத்தை வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுத்ததுபோல, உம் வார்த்தையின்படி நடப்பதற்கு பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பெற்றோருக்கு உதவி செய்யும். ஒவ்வொரு குடும்பமும் உம் சமுகத்தை, வழிநடத்துதலை, பாதுகாப்பை, பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவிக்கட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.