அன்பானவர்களே, தேவன் உங்களை விசாலமான இடத்துக்குக் கொண்டு வருவதற்கு விரும்புகிறார். ஒருவேளை, நீங்கள் எப்பக்கமும் நெருக்கப்பட்டிருக்கலாம்; பொல்லாத மனுஷர், பாவம், வாழ்வின் பிரச்னைகள் ஆகியவை உங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கலாம். வஞ்சகங்கள் உங்களை நெருக்கலாம்; ஆனால், தேவன் உங்களுக்கு விடுதலை அருளப்போகிறார். இயேசு உங்களில் பிரியமாயிருப்பதால் அவர் உங்களை விடுவித்து, விசாலமான இடத்துக்குக் கொண்டு வரப்போகிறார். அவர் உங்கள்பேரில் கெம்பீரமாய் களிகூருவார்; உங்களை மீட்டுக்கொள்வார். தேவனுடைய வாக்குத்தத்தம், "அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்" (சங்கீதம் 18:19) என்று கூறுகிறது. அவர் எந்த விசாலமான இடத்துக்கு உங்களைக் கொண்டு வருவார்? வேதத்தில் சங்கீதக்காரன், "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்" (சங்கீதம் 118:5) என்று கூறுகிறான். தோல்வி, இழப்புகள், ஆவியில் வேதனை, பாடு, பொல்லாத, இரட்டை நாவுள்ள மக்களின் வஞ்சகங்கள், மனச்சோர்வின் ஆவி ஆகியவை நெருக்கும்போது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் என்னை விசாலமான இடத்தில் கொண்டு வந்து விட்டார்.
இரண்டாவதாக, வேதம், "சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்," (சங்கீதம் 31:8) என்று கூறுகிறது. ஆம், மக்கள் பொறாமைப்படலாம். மக்கள் நம்மை பயன்படுத்திவிட்டு, நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பிழிந்துவிட்டு ஓடிப்போகலாம். தாங்கள் நம்மோடிருந்தாலும் நம்மை நம்பாதிருக்கலாம். தேவன் நமக்கு தந்திருக்கும் கிருபையை விசுவாசியாதிருக்கலாம். ஆனால் தேவன் சத்துருக்களிடமிருந்து நம்மை விடுவித்து, விசாலமான இடத்துக்குக் கொண்டு வருகிறார். உங்கள் சத்துருக்களின் கண்களுக்கு முன்பாக அவர் உங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகித்து, உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணுகிறார். நீங்கள், "இப்போது என்னைச் சுற்றிலும் எங்கும் சமாதானமாயிருக்கிறது," என்று சொல்லுவீர்கள். சாலொமோன், "என் தகப்பன் வாழ்நாள் முழுவதும் சத்துருக்களுடன் போரிட்டுக் கொண்டே இருந்தார். இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை," என்றான். ஆகவே அவன் பெரிய ராஜ்யத்தை உருவாக்கினான். தேவன் உங்களுக்காக அப்படிச் செய்வார். நீங்கள் சமாதானத்தில் கட்டப்படுவீர்கள்; நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்.
சத்துருக்களிடமிருந்து நெருக்கப்படுகிற சூழ்நிலைகளிலிருந்து அவர் உங்களை விடுவிப்பார். பணத்திற்காக, வாழ்வில் வெற்றிக்காக, ஊழியத்தில் அற்புதங்களுக்காக, குடும்பத்தில் பிரச்னைகளால் மிகவும் நெருக்கப்படுகிறீர்களா? ஆண்டவர் வருகிறார். அவர் எப்பக்கமும் கட்டப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டாலும், மரணத்தை ஜெயித்தார். அவர், "உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்," என்று கூறினார். ஆண்டவரே, என் ஆவி மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறது. அதை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். தேவ ஆவி வந்து, அவரை உயிர்த்தெழப்பண்ணினார்; அவர் எழுந்தார். நீங்கள் உயரே எழும்புவீர்கள். "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" (சங்கீதம் 34:19). கர்த்தர் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறபடியினால் அவர் உங்களை மீட்பார்; உங்களை விடுவிப்பார்; உங்களை உயரத்திலே வைத்து கனப்படுத்துவார் (சங்கீதம் 91:14,15). மேலும் வேதம், "இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்" (கொலோசெயர் 1:13) என்றும், "கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்" (2 தீமோத்தேயு 4:18) என்றும் கூறுகிறது. தேவன் உங்களை விடுவிப்பார். இப்போது அவர் விசாலமான இடத்துக்கு உங்களைக் கொண்டு வருகிறார். விசுவாசித்து அந்த ஆசீர்வாதத்திற்குள் நடந்திடுங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, என்னுடைய தேவையின் மத்தியிலும், மிகுந்த நெருக்கடியின் நேரத்திலும் உம்மிடம் வருகிறேன். நான் கடந்துசெல்லும் எல்லா போராட்டத்தையும் நான் சுமக்கும் எல்லா பாரங்களையும் நீர் காண்கிறீர். ஆண்டவரே, என்னை விடுவித்து விசாலமான இடத்துக்குக் கொண்டு வாரும். எல்லா விரோதிகளிடமிருந்து ஒடுக்குதலிலிருந்தும் என்னை விடுவித்தருளும். என் வாழ்வை உம் பரிபூரண சமாதானமும் விடுதலையும் சூழ்ந்துகொள்வதாக. உம்மில் நம்பிக்கை கொள்ளவும் உம் வாக்குத்தத்தங்களில் உண்மையாய் நடக்கவும் எனக்கு உதவிசெய்யும். மூடிய கதவுகள் உம் வல்லமையால் திறக்கப்படட்டும். உம் பரிபூரணத்தில் உம் ஆசீர்வாதங்களை படிப்படியாக பெற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


