அன்பானவர்களே, நம்மை பத்திரமாகக் காத்து, தமது மகிமையுள்ள பிரசன்னத்தின் முன்பாக நிற்க வைக்க தேவனுடைய இருதயம் விரும்புகிறது. வேதம், "வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்" (யூதா 24) என்று கூறுகிறது. இந்த உலகம், சோதனைகளும் நம்மை இடறச் செய்யும் சூழ்நிலைகளும் நிறைந்ததாயிருக்கிறது. ஆனாலும் இயேசு நம் அடிகளைக் காக்கிறவராயிருக்கிறார். அவர் நம் பாதங்களை அழகானவையாக்குகிறார் என்றும், தம் சீஷர்கள் இடறாதபடி காப்பதற்காக அவர்கள் பாதங்களை இயேசு எவ்வாறு கழுவினார் என்றும் வேதம் கூறுகிறது (ஏசாயா 52:7; யோவான் 13:1). எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றியவர்களுள், பிசாசுக்கு செவிகொடுத்த யூதாஸை தவிர அனைவரும் பாதுகாக்கப்பட்டனர். எப்போதும் அவருடைய மகிமையுள்ள பிரசன்னத்தில் நிலைத்திருக்கும்படி நாமும் நம் இருதயங்களை இயேசுவின் மேலான அன்பினால் சுத்தமாக காக்கவேண்டும்.
இடறச் செய்யும் காரணிகளிடமிருந்து நம் இருதயங்களை நாம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பொல்லாத சிந்தனைகள், கொலைபாதகம், விபசாரம், வேசித்தனம், களவு, பொய்ச்சாட்சி, தூஷணம் ஆகியவை இடறச் செய்கிறவை என்றும், இருதயத்திலிருந்து புறப்படுகிறவையே நமக்குப் பாவம் உண்டாக்கும் என்றும் வேதம் எச்சரிக்கிறது (மத்தேயு 15:19; நீதிமொழிகள் 4:23). "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்" (சங்கீதம் 51:12) என்று தாவீது ஜெபித்ததுபோல, நாமும் ஜெபிக்கவேண்டும். நம்முடைய செயல்களும் மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கக்கூடும். பெற்றோரின் அநியாயமான நடத்தை, பிள்ளைகளை அவபக்திக்குள்ளாக தள்ளிவிடும். நீதியான உறவுகள், தாழ்மை, பக்தியுள்ள மாதிரி ஆகியவை மற்றவர்களை விழவிடாமல் பாதுகாக்க அவசியமாகும் (லூக்கா 17:1,2).
இறுதியாக, மற்றவர்களுடனான நம் பேச்சும் நடத்தையும் பரிசுத்தமானதாகவும் தாழ்மையானதாகவும் இருக்கவேண்டும். பொய்யாக மற்றவர்களை நியாயந்தீர்ப்பதும், பேசுவதும் இடறலுக்கு காரணமாகும் என்று வேதம் எச்சரிக்கிறது (ரோமர் 14:13). இயேசுவை பின்பற்றுவதற்கு பரிசுத்தம் தேவை. பரிசுத்தமில்லாவிட்டால் நாம் கன்மலையின்மேல் இடறுவோம்; பரிசுத்தமிருந்தால் கன்மலையின்மேல் ஸ்திரமாக நிற்போம். வேதம், நாம் பரிசுத்தத்தில், தேவனுடைய மகிமையுள்ள பிரசன்னத்தில் வாசம்பண்ணுவதோடு, கிருபையாலும் சத்தியத்தாலும் நிறைந்தவர்களாய், ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமுமாவோம் என்று நினைவுப்படுத்துகிறது (யோவான் 1:14). நாம் எல்லா மக்களையும் நேசிப்போம்; அவர்களுக்காக ஜெபிப்போம்; சமாதானத்தில் நடப்போம் (எபிரெயர் 12:14). தேவன் நம்மை தம் ஆவியினாலும் மகிமையினாலும் தாங்கி இடறாமல் காத்து, தம்முடைய மகிமையுள்ள பிரசன்னத்தில் நிறுத்துவாராக.
ஜெபம்:
அன்பின் தகப்பனே, இடறாமல் என்னை காப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா சோதனைகளுக்கும் என் பாதத்தையும் இருதயத்தையும் காத்துக்கொள்ளும். இரட்சணியத்தின் சந்தோஷத்தை எனக்கு திரும்ப தருவீராக. பரிசுத்தத்தில் நடக்கவும் அனைவரோடும் சமாதானமாய் இருக்கவும் எனக்கு உதவி செய்யும். என் குடும்பத்தை பாதுகாத்து, எங்கள் உறவுகளை வழிநடத்தும். மற்றவர்களை நியாயந்தீர்த்து புண்படுத்துவதிலிருந்து என்னை காத்துக்கொள்ளும். உம் நீதிக்கு நான் மாதிரியாக விளங்கும்படி செய்யும். உம்முடைய மகிமையுள்ள பிரசன்னத்தில் வாசம்பண்ணும்படி என்னை வழிநடத்தும். என் வாழ்க்கையை உம் கிருபையாலும் சத்தியத்தாலும் மகிமையாலும் நிரப்பியருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


