எனக்கு அருமையான தேவ பிள்ளையே, உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவர் தமது வார்த்தையின்படியே இப்போது ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கு நாம் தியானிக்கும்படி, "உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே" (கலாத்தியர் 3:27) என்ற வசனத்தை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். அடுத்த வசனம், "நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்," என்று கூறுகிறது. ஞானஸ்நானம் பெறும்போது என்ன நடக்கும் என்பதை வேதம் விளக்குகிறது (ரோமர் 6ம் அதிகாரம்). நம்முடைய பழைய மனுஷன் அவருடனே கூட சிலுவையில் அறையப்படுகிறான். நாம் இனிமேல் பாவத்திற்கு அடிமைகளாக இல்லாதிருக்கும்படி பாவ சரீரம் அழிக்கப்படும் என்று வேதம் கூறுகிறது (வசனம் 6). ஞானஸ்நானத்தில் நாம் அவருடனே அடக்கம்பண்ணப்பட்டோம். அதேபோன்று நாம் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள், தேவனுக்குள் பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளவேண்டும். நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது இது நடக்கிறது (வசனம் 11).
பவுல், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்" (கலாத்தியர் 2:20)என்று கூறுகிறான். அவன் பாவியான மனுஷனாக இருந்தான். எல்லா தவறான காரியங்களையும் செய்தான். ஆனால், அவன் இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்," என்று கூற முடிந்தது. ஆம், நாம் ஞானஸ்நானம் பெறும்போது, தண்ணீருக்குள் மூழ்கும்போது, நம் பாவங்கள், பாவ பழக்கங்கள் அனைத்தும் அதனோடு சென்று விடும். தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது, நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்ட புதிய மனுஷனாகிறோம் / மனுஷியாகிறோம். நாம் புதிதாக்கப்படுகிறோம். சவுல், பவுலாகி, தேவ ஊழியனாகி, தேவ வல்லமையினால் நிரப்பப்பட்டான். இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றார். ஆம், அன்பானவர்களே, நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது, தண்ணீரிலிருந்து வெளியே வந்த பிறகு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற முடியும்.
வேதத்தின்படி ஞானஸ்நானம் மிக முக்கியமானது. இயேசுதாமே அதற்குக் கீழ்ப்படிந்தார்; அப்போது உங்களையும் என்னையும் குறித்து என்ன? நாம் எளிய, சாதாரண மனிதர்கள். வேண்டாத காரியங்களைக் குறித்து நாம் விவாதம் பண்ணாமல், தேவ வார்த்தையை நம்பி கீழ்ப்படிவோம். இயேசு செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள். தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாய் இருக்கும். இது ஓர் உபதேசமல்ல; தாம் செய்ததை நாமும் பின்பற்றவேண்டும் என்று ஆண்டவர் கூறியுள்ளார். இப்போதே நம் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்போம். அவரது வழிகளுக்குக் கீழ்ப்படிவோம். தேவ வல்லமையை பெற்றுக்கொள்வோம். அவருடைய மகிமைக்காக பிரகாசிப்போம்.
ஜெபம்:
ஆண்டவர் இயேசுவே, எனக்காக சிலுவையில் மரித்ததற்காகவும், எனக்கு பரிபூரண ஜீவனை தரும்படி மறுபடியும் எழுந்ததற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய பாவ வாழ்க்கைக்கு மரிப்பதையும், உமக்கு பிழைத்திருப்பதையும், உமக்குள் வாழ்வதையும் தெரிந்துகொள்கிறேன். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை முற்றிலும் கழுவியருளும். வாதம் பண்ணாமலும் பயப்படாமலும் உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். நீர் பரலோக பிதாவுக்குக் கீழ்ப்படிந்ததுபோல, உம் வழியைப் பின்பற்ற எனக்கு உதவும். உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் என்னை நிரப்பி, என் வாழ்க்கையை புதிதானதாகவும் உமக்குப் பிரியமானதாகவும் மாற்றும். என் வாழ்க்கை உம்முடைய மகிமைக்காக மாத்திரம் பிரகாசிப்பதாக, ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


