அன்பானவர்களே, 22 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினம்தான் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. காருண்யாவுக்கு ஆண்டவர் அளித்திருக்கும் ஆசீர்வாதம் எவ்வளவு ஆச்சரியமானது! அநேகர் காருண்யா வளாகத்திற்கு வந்திருப்பீர்கள்; பெதஸ்தாவின் அமைதியான சூழலை அனுபவித்திருப்பீர்கள்.

எங்களுக்குத் திருமணமாகி, கேட்டி பிறந்த பிறகு கிட்டத்தட்ட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தோம். எப்பொழுதெல்லாம் அங்கே ஜெபிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் கண்ணீர் வந்துவிடும். "இங்கே இருப்பது எவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கிறது. வல்லமையான தேவ பிரசன்னத்தை உங்களால் உணர முடியும்," என்று என் கணவரிடம் சொல்லுவேன். காருண்யாவில் படித்திருந்தால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் நினைப்பேன்.

படிப்பில் சிறந்து விளங்குவது, அங்கீகாரம் இவற்றில் மட்டுமல்ல, ஆவிக்குரிய வளர்ச்சியிலும் ஆண்டவர் காருண்யாவை அதிகமாய் ஆசீர்வதித்துள்ளார். அங்கு படிக்கும் அநேக மாணவ மாணவியர் படிப்பில் சிறந்து விளங்கும்போது, தேவனுடனான அவர்கள் உறவும் ஆழமாகிறது என்பது எனக்குத் தெரியும். இத்தனை ஆண்டுகளாய் ஆண்டவர் தம் ஆசீர்வாதத்தை காருண்யா மேலும் அங்கு படிக்கும் மாணவ மாணவியர் மேலும் பொழிந்து வருகிறார்.

இன்றைய வாக்குத்தத்தம், "அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்" (யோபு 36:11) என்று கூறுகிறது. இதே ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இன்றைக்கு உரித்தாகும். ஒருவேளை நீங்கள் இழப்புகளை சந்தித்திருக்கலாம். அன்பானோரை இழக்கக்கொடுத்திருக்கலாம்; தொழிலில் பின்னடைவை சந்தித்திருக்கலாம்; ஏமாற்றத்தின் நாட்களை கடந்து வந்திருக்கலாம். ஆனாலும், இன்றிலிருந்து தேவன் செழிப்பையும் திருப்தியையும் வாக்குப்பண்ணுகிறார். அவர் உங்கள் கையின் கிரியைகளை ஆசீர்வதித்து, உங்கள் வாழ்வை சீர்ப்படுத்தப்போகிறார்.

இன்று வேலையை தொடங்கும் முன்னர் இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசியுங்கள். வீட்டைவிட்டு கிளம்பும் முன்னரே விசுவாசத்தில் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவரால் உங்கள் சூழ்நிலையை தலைகீழாக மாற்றி உங்கள் நாட்களை நன்மையானவையாக்க முடியும். யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை தேவன் ஆசீர்வதித்ததுபோல, உங்களுக்கும் செய்வார். அவரை நம்புங்கள்; உங்கள் வாழ்வில் அவரது கிருபையை எதிர்பாருங்கள்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, இத்தனை ஆண்டுகளாய் காருண்யாவின்மேல் உம் பரிபூரண ஆசீர்வாதங்களை பொழிந்தருள்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். முன்னாள் மாணவ மாணவியர் அனைவரையும், இப்போது படித்துக்கொண்டிருக்கிறவர்களையும் இந்த கல்வி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து குடும்பங்களையும் ஆசீர்வதித்தருளும். அவர்கள் ஞானத்தில், சாமர்த்தியத்தில், ஆவிக்குரிய பெலனில் வளர்வார்களாக. தகப்பனே, இன்றைக்கு இதை வாசிக்கும் உம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறேன். அவர்கள் தங்கள் வாழ்வில் தெய்வீக மாற்றத்தை அனுபவிக்கட்டும். அவர்கள் கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதியும்; முயற்சிகளை வாய்க்கப்பண்ணும். இழந்தவை எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். எல்லா காயங்களையும் குணமாக்கும். அவர்கள் உள்ளங்களை திருப்திப்படுத்தும். யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை ஆசீர்வதித்ததுபோல, இரட்டிப்பான ஆசீர்வாதத்தையும், பரிபூரண கிருபையையும் இவர்களுக்கு அருளிச் செய்தருளும். அற்புதங்கள் இவர்களைப் பின்தொடரட்டும்; இவர்கள் வாழ்வில் உம் நாமம் மகிமைப்படவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.