அன்பானவர்களே, இன்றைக்கு, "தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்" (சங்கீதம் 104:4) என்ற வசனத்தைத் தியானிக்க இருக்கிறோம். இங்கே பரலோகம் முழுமையும் கர்த்தருடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் காண்கிறோம். இதைக் கொண்டு தேவனுடைய மகிமையை தியானிக்கலாம். இங்கே தேவனுடைய கையின் கிரியைகளை தியானிக்கிறோம். தேவதூதர்கள், தேவனுக்காய் வேலை செய்ய மின்னலைப்போல துரிதமாய் செயல்படுகிறார்கள். தேவதூதர்கள் மிகவும் வேகமாக இயங்குகிறார்கள்; தேவனுடைய செய்தியை எடுத்துச் செல்வார்கள். ஆகவேதான், வேதம், பணிவிடை ஆவிகள் என்று அவர்களை அழைக்கிறது (எபிரெயர் 1:14). இயேசு, இந்த பூமியில் ஊழியம் செய்தபோது, தேவதூதர்கள், அவர் அழைத்ததும் அவருக்கு ஊழியம் செய்ய எப்போதும் ஆயத்தமாயிருந்தார்கள். ஆகவேதான் இயேசு, "நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?" (மத்தேயு 26:53) என்று கூறினார். ஆம், தேவதூதர்கள், பணிவிடை ஆவிகளாயிருந்தார்கள்.
இயேசு கைது செய்யப்படும் முன்பு, ஒலிவமலையில் அவர் ஜெபித்தபோது, வானத்திலிருந்து தூதன் ஒருவன் தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான் (லூக்கா 22:43). சில தூதர்கள் சொப்பனத்தில் தோன்றி, செய்திகளைக் கொண்டு வருவார்கள்; சில தூதர்களை, அவர்கள், தேவ ஜனங்களை பாதுகாப்பதை நம் கண்களினால் காண முடியும். பல வழிகளில் தூதர்கள் தேவ ஜனங்களுக்கு பணிவிடை செய்கிறார்கள்; அவர்கள் வேகமாக செய்கிறார்கள். ஆகவேதான் வேதம், கர்த்தர் தம் தூதர்களை காற்றுகளாக்குகிறார் என்று கூறுகிறது. இரண்டாவதாக, கர்த்தர், தம் ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாக்குகிறார். தேவன், பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (எபிரெயர் 12:29). இது தேவனுடைய வல்லமையைக் காட்டுகிறது. அவர் தம் ஜனங்களை நெருப்பினால் சுத்திகரித்து, அவர்களுடைய பாவங்களிலிருந்து விடுதலையாக்குகிறார். தேவ சமுகம் தங்குகிற இடத்தில் பாவம் இருக்க முடியாது. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலைபோல் இருந்ததாக வேதம் கூறுகிறது. அக்கினி தேவ சமுகத்தை குறிக்கிறது (வெளிப்படுத்தல் 19:12).
உங்களை உற்சாகப்படுத்துவதற்காக, இதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கூட்டம் முடிந்த பிறகு நாங்கள் மக்களுக்கு தனித்தனியாக ஜெபிப்பது வழக்கம். ஜெபத்திற்காக வரிசையில் நின்றபோது, அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு சகோதரி, "எரிகிறது, எரிகிறது, எரிகிறது," என்று அலறினார்கள். அவர்கள் என்னை நெருங்கி வந்தபோது, இன்னும் சத்தமாய் அலறினார்கள். நான் அவர்கள்மேல் கைவைத்த உடன்தானே பிசாசு அவர்களை விட்டு விலகியது. கர்த்தர், அசுத்த ஆவியையும் பட்சிக்கிறார். மெய்யாகவே, கர்த்தர் தம் ஊழியக்காரரை அக்கினி ஜுவாலையாக்குகிறார். ஆகவேதான் தேவ ஊழியர்கள் அனைவரும் தேவ சமுகத்தினால் நிரம்பியிருக்கவேண்டும்.இன்றைக்கும் தேவ அக்கினி உங்கள்மேல் வருவதாக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் பரம சேனைகளுக்கு கட்டளையிடுவதற்காகவும், உம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உம் தூதர்களை காற்றுகளாக அனுப்புவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம் கரங்களில் என்னை அக்கினி ஜுவாலையாக்கி, உம்முடை ய சமுகத்தால் என்னை பரிசுத்தப்படுத்துவீராக. இயேசு, இந்த பூமியில் இருந்தபோது தேவதூதர்கள் அவருக்கு பணிவிடை செய்ததுபோல, பலவீன நேரங்களில் என்னையும் சூழ்ந்துகொண்டு பலப்படுத்துவார்களாக. ஆண்டவரே, தயவாய் எனக்குள் இருக்கும் எல்லா பாவத்தையும், பயத்தையும் இருளையும் உம்முடைய பரிசுத்த அக்கினியால் பட்சித்து, என் வாழ்க்கை உம்முடைய மகிமைக்காக பிரகாசிக்கும்படி செய்வீராக. அனுதினமும் உம்முடைய பலனோடு நடக்கவும், உம்முடைய வெளிச்சத்தை மற்றவர்களுக்குக் கொண்டு செல்லவும் உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.