அருமையானவர்களே, கர்த்தர் உங்களுக்குச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அருளுவார். தைரியமாயிருங்கள். இன்றைய வாக்குத்தத்த வசனம், "என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை" (எரேமியா 46:27) என்று கூறுகிறது. உங்களோடு இருப்பதாக ஆண்டவர் நிச்சயமாய் கூறுகிறார். பயப்படவும் கலங்கவும் வேண்டாம். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் விடுவித்து, உங்களை தம் சமாதானத்தாலும் தெய்வீக பாதுகாப்பாலும் நிரப்புவார்.
இயேசு, "என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்" (யோவான் 14:27) என்று கூறுகிறார். உலகம் தரும் தற்காலிக சமாதானமல்ல; எல்லா பயத்தையும் கலக்கத்தையும் அமைதிப்படுத்தும் அவரது நித்திய சமாதானமாகும். கர்த்தர் உங்கள் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்குகிறார் (சங்கீதம் 147:14). நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் உங்களுக்குச் சொந்தமான யாவற்றிலும் அவர் சமாதானத்தைக் கொண்டு வருகிறார். அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை யாரும் களவாடிவிடாதபடி உங்கள் வாழ்க்கைக்கு சமாதான வேலி அடைக்கிறார். நீங்கள் கவலைப்படாமல், எல்லா விண்ணப்பங்களையும் தேவனுக்கு ஜெபத்தின் வாயிலாக தெரியப்படுத்தும்போது, எல்லாப் புத்திக்கும் மேலான அவரது சமாதானம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4:6,7). உங்கள் பிள்ளைகள் அனைவரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்கள் சமாதானம் பெரிதாயிருக்கும் என்றும் வேதம் வாக்குப்பண்ணுகிறது (ஏசாயா 54:13). ஆண்டவர்தாமே இன்றைக்கு இந்த ஆச்சரியமான ஆசீர்வாதங்களை உங்கள் குடும்பத்துக்கு அருளிச் செய்வாராக.
கர்த்தர், உங்கள் சமாதானமாக இருப்பதோடு, உங்களுக்கு அடைக்கலமாகவும் இருப்பார். "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்" (சங்கீதம் 46:1) என்று வேதம் கூறுகிறது. அன்பாய் உங்களை அரவணைப்பார்; உங்களை உயர்த்துவார்; ஒருவனும் பறிக்கக்கூடாதபடி உங்களை பத்திரமாய் வைத்துக்கொள்வார். வேதம், "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10) என்று கூறுகிறது. இயேசுவின் நாமத்திற்குள் ஓடி, அவரது தெய்வீக பாதுகாப்பை அனுபவியுங்கள். "தகப்பனே, நான் உம்மிடம் ஓடி வந்திருக்கிறேன். என்னை உம் கரங்களில் சுமந்து செல்லும்," என்று அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஆண்டவர், சிறுபிள்ளைகளை அன்புடன் சுமந்ததுபோல, உங்களையும் எல்லா சவால்களின் வழியாகவும், இக்கட்டுகளின் வழியாகவும் சுமந்து செல்வார்.
"சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்," (ரோமர் 16:20) என்று வேதம் கூறுகிறது. ஒரு மனுஷனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமானவையாயிருந்தால், அவன் சத்துருக்களும் அவனுடன் சமாதானம் பண்ணும்படி செய்வார் (நீதிமொழிகள் 16:7). கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; உங்களை எதிர்ப்பவர்கள், உங்களோடு சமாதானம் செய்துகொள்வார்கள்.
ஈசாக்கின் வாழ்வு இதை அழகாக விவரிப்பதைக் காண்கிறோம். ஈசாக்கு தோண்டிய கிணற்றை மட்டுமல்ல; அவன் தகப்பன் வெட்டிய கிணற்றையும் பெலிஸ்தர் தடுத்தார்கள். ஆனாலும் ஈசாக்கு வாக்குவாதம் செய்யவோ, சண்டையிடவோ இல்லை. மாறாக, அவன் பொறுமையோடு புதிய துரவுகளைத் தோண்டினான். இறுதியாக அபிமெலேக்கு, ஈசாக்கிடம் வந்து தேவ கரம் அவனோடிருப்பதையும், கர்த்தர் அவனோடிருப்பதால் அவன் விதைப்பவை நூறு மடங்கு பலனளிப்பதையும், அவன் தோண்டும் ஒவ்வொரு கிணறும் தண்ணீர் கொடுப்பதையும் ஒப்புக்கொண்டான். தேவ கிருபை அவனோடிருப்பதால் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளுமாறு ஈசாக்கிடம் வேண்டினான். அதே ஆசீர்வாதம் உங்களுக்கும் சொந்தமாயிருக்கிறது. நீங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தரித்திருக்கிறீர்கள்; அவர் தொடர்ந்து உங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார். ஒடுக்குதலின் நடுவிலும் இஸ்ரவேல் புத்திரர் பெருகியவண்ணம், எதிர்ப்பு இருந்தாலும் நீங்கள் வர்த்திப்பீர்கள். ஆகவே, தைரியமாயிருங்கள். வேதம் கூறுகிறவண்ணம், கர்த்தர் உங்கள் சத்துருக்கள் முன்னிலையில் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தம் பண்ணுவார் (சங்கீதம் 23:5). உங்களை தலையை அவர் எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுவார்; உங்கள் பாத்திரம் நிரம்பி வழிந்திடும். அவர் உங்களை செழிக்கப்பண்ணுவார்; பாதுகாப்பார்; நித்தியமாய் உங்களுக்கு அடைக்கலமாவார். அவரது பாதுகாப்பின் கீழ் நீங்கள் செழிப்பீர்கள்; அவரது பரிபூரண சமாதானத்தை அனுபவிப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் சமாதானமே எனக்கு அடைக்கலமாகும் என்று நீர் அருளியுள்ள அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயமோ கலக்கமோ இன்றி உம்மை நம்பவும், உம் அன்பின் சமுகத்தில் சுகமாய் இளைப்பாறவும் எனக்கு உதவும். என்னையும் என் குடும்பத்தையும் உம் தெய்வீக சமாதானம் சூழ்ந்துகொள்ளும்படி செய்து, எல்லா ஆபத்திலிருந்தும் எங்களைப் பாதுகாத்து, உம் பலத்த செட்டைகளின் கீழே பத்திரமாகக் காத்தருளும். எங்கள் இருதயங்களை, எங்கள் வீட்டை, எங்கள் வாழ்வை உம் சமாதானம் ஆண்டுகொள்ளட்டும். என் பிள்ளைகளுக்கு உம் ஞானத்தை தந்து ஆசீர்வதித்து, உம் பாதைகளில் அவர்களை நடத்திடும். எங்களுக்காக எல்லா யுத்தங்களையும் நடப்பித்து, முரண்பாடுகள் காணப்படும் இடங்களில் ஒப்புரவாக்கி, சத்துருவின் சகல கிரியையையும் எங்கள் கால்களின் கீழ் நசுக்கிப்போடும். உம் தயவு, பாதுகாப்பு, நிரம்பி வழியும் ஆசீர்வாதங்கள் எப்போதும் எங்களோடு இருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


