அன்பானவர்களே, ஆண்டின் இறுதிக்கு வந்திருக்கிறோம். தேவன் செய்த எல்லாவற்றையும் நினைத்து, தொடர்ந்து அவரை ஸ்தோத்திரிக்கவேண்டிய நேரம் இது. இந்தத் தருணத்திலும் தேவன், "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (கலாத்தியர் 6:9)என்ற வாக்குத்தத்தத்தைக் கொடுத்து நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நீங்கள் நிறைய நன்மைகளைச் செய்தும், நன்றி கிடைக்காவிட்டால் சோர்ந்துபோகாதீர்கள். அதினால் எந்த ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிடைக்காமல் இருக்கலாம்; அதினால் நீங்கள் உயராமல் இருக்கலாம். அன்பானவர்களே, கவலைப்படாதிருங்கள். தேவன் காண்கிறார்; தேவன் நினைக்கிறார்.

ஒரு ஹோட்டலில் ஒரு பெண்மணி சுத்தம் செய்யும் வேலையைச் செய்து வந்தார்கள். அறைகளையெல்லாம் வெகு நேர்த்தியாக, உண்மையாக சுத்தமாக்குவார்கள். படுக்கை விரிப்புகளின் மூலைகள் நேர்த்தியாக ஒழுங்கு பண்ணப்பட்டிருக்கும்; குளியலறைகள் சுத்தமாக, நறுமணத்துடன் இருக்கும்; தரைகள் தூசியில்லாமல், அழுக்கில்லாமல் சுத்தம்பண்ணப்பட்டிருக்கும். அறைகளைப் பிறருக்காக ஒழுங்குபண்ணுவதை அந்தப் பெண் மகிழ்வுடன் செய்தார்கள். ஆனால், அவர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக, மக்கள் கேலி செய்தனர். உடன் வேலை செய்கிறவர்கள், "ஏன் இவ்வளவு உண்மையாக இருக்கிறாய்? ஏன் சரியாக செய்ய  முயற்சிக்கிறாய்? இதனால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது?" என்று கேட்டுச் சிரித்தனர். இருந்து அவர்கள் ஆண்டுதோறும் தன் வேலையை உண்மையாக தொடர்ந்து செய்தார்கள்.

பல வருடங்கள் கடந்தன. ஒருநாள் மேற்பார்வையாளர் வேலையை விட்டுச் சென்றுவிட்டார். மேலதிகாரி, "யாரை நாம் மேற்பார்வையாளராக நியமிப்பது?" என்று விசாரித்தார். அந்தப் பெண்மணி, நேர்த்தியாய் வேலை செய்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, அவர்களை தெரிந்தெடுத்து, பயிற்சியளித்து, மற்றவர்களுக்கு மேலே மேற்பார்வையாளராக நியமித்தனர். அன்பானவர்களே, யாரும் உங்களை அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி, நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள். ஆண்டவர் கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அந்தரங்கத்தில் செய்கிறவற்றுக்கு அவர் வெளியரங்கமாய் பலன் கொடுப்பார். நீங்கள் விட்டுவிடாதிருந்தால் ஏற்ற நேரத்தில் பெருத்த அறுவடை நிச்சயமாய் வரும். அன்பானவர்களே, உங்களுக்கான பலன் வந்துகொண்டிருக்கிறது.  

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த ஆண்டில் நீர் என்னோடு வருவதற்காய் உமக்கு நன்றி. எப்பொழுதெல்லாம் நான் சோர்ந்துபோகிறேனோ, யாரும் என்னை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் ஒவ்வோர் அசைவையும் நீர் பார்த்துக்கொண்டிருக்கிறீர் என்பதை நினைவுப்படுத்தும். மனந்தளராமல் தொடர்ந்து நன்மை செய்ய எனக்கு உதவும். மக்களிடமிருந்து பாராட்டு வராவிட்டாலும் என் உள்ளத்தை ஸ்திரப்படுத்தும். யாரும் பார்க்காவிட்டாலும் முடிவு வரைக்கும் உண்மையாய் இருக்க எனக்குக் கற்றுத்தாரும். ஏற்றவேளையில் சரியான பலன் கிடைக்கும் என்று உம்மேல் நம்பிக்கையாயிருக்கச் செய்யும். உம் வாக்குத்தத்தத்தின்படியே என் பலனுக்கான நாட்கள் வருவதாக. இன்றைக்கு விசுவாசத்தில் உம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.