எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது" (நீதிமொழிகள் 19:23) என்ற வசனத்தை தியானிப்போம். அன்பானவர்களே, உங்களைக் குறித்து என்ன? தேவனுக்குப் பயப்படும் பயம் உங்களுக்கு இருக்கிறதா? விசேஷமாக வாலிபப் பிள்ளைகளே தேவ பயம் உங்களிடம் இருக்கிறதா? ஆண்டவரின் வழிகளைப் பின்பற்றுகிறீர்களா? வேதம், "கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்," என்று கூறுகிறது (சங்கீதம் 112:1; 128:1; 115:13).
வேதத்தில், தாவீது, யோபு, தானியேல் போன்ற பக்திமான்களின் வாழ்க்கையைக் குறித்து வாசிக்கிறோம். அவர்கள் அனைவரும் தேவனுக்குப் பயந்தவர்கள். அவர்கள் வாழ்க்கை மறுரூபமாக்கப்பட்டது. அவர்கள் கர்த்தரை நெருங்கி ஜீவித்தார்கள்; அதனால், பரிபூரண ஆசீர்வாதம் பெற்றார்கள். அவர்கள் பல பிரச்னைகளிலிருந்து இரட்சிக்கப்பட்டனர். வேதம், "பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது" (சங்கீதம் 103:11) என்று கூறுகிறது. நீங்கள் தேவனுக்குப் பயந்தவராய், அவருடன் பேசுகிறவராய் வாழ்ந்தால், அவரும் நீங்கள் கேட்கிறவற்றையும் உங்களுக்குத் தேவையானவற்றையும் கொடுப்பதில் அக்கறையாயிருப்பார். என்னுடைய வாலிப வயதில் நான் ஆண்டவருடன் நெருங்கி ஜீவிப்பதன் முக்கியத்துவத்தை அறியாதவளாகவே இருந்தேன். தேவனுக்குப் பயப்படும் பயத்தின் வாயிலாக ஆண்டவர் எனக்குக் கற்பித்தவை என் வாழ்க்கையை முற்றிலும் மறுரூபமாக்கின. ஆண்டவர், என் பதினாறாம் வயதில், தாம் எனக்கு நெருக்கமாக இருப்பதை நான் புரிந்துகொள்ளும்வண்ணம் பேசினார். நான் அவரை நேசிக்கத் தொடங்கினேன்; பிறகு தேவனுக்கு பயந்து வாழ ஆரம்பித்தேன்; அதன்பிறகே நான் இப்போது இருப்பதுபோல் மாறினேன்; தேவன் அநேக ஆசீர்வாதங்களை எனக்கு அருளியுள்ளார்.
வேதம், "பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்," (2 கொரிந்தியர் 7:1) என்றும், "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்," (2 தீமோத்தேயு 1:7) என்றும் கூறுகிறது. அன்பானவர்களே, "அவர் (கர்த்தர்) தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்" (சங்கீதம் 145:19) என்ற வசனத்தை பாருங்கள். அன்பானவர்களே, கர்த்தர் நமக்கு எவ்வளவு சிறப்பான வாழ்க்கையை தருவதற்கு விரும்புகிறார்! உங்கள் முழு வாழ்க்கையையும் தேவனுக்குக் கொடுத்திடுங்கள். அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்; ஒவ்வொரு நாளையும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் ஆரம்பியுங்கள்; தேவன் உங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்மிடம் பயபக்தியுடன் நடப்பதற்கு எனக்குப் போதித்தருளும். என் இருதயம், சொல்லிலும் செயலிலும் உம்மை கனம்பண்ணுவதாக அமையட்டும். உம் வழிகளை நான் பின்பற்றுவதால் என் வாழ்க்கை மறுரூபமாகட்டும். உம் இரக்கம் என்மேல் தங்கி என் நடைகளை காக்கட்டும். உம்மை விட்டு என்னை விலகச் செய்யும் எல்லாவற்றையும் தயவாய் அகற்றிப்போடுவீராக. உம்மை நம்பி, முழு மனதுடன் உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். என் இருதயத்தின் விருப்பங்களை உம் சித்தத்திற்கேற்ப நினைவேற்ற வேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


