அன்பானவர்களே, தேவன் தம் பிள்ளைகளுக்கு சிறந்தவற்றையே தருகிறவர்; ஆகவே, இன்று அவரிடமிருந்து மிகச் சிறப்பானதை எதிர்பாருங்கள். "அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்" (எரேமியா 1:19) என்று கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.

1944ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளுடன் இணைந்து ஜெர்மனிக்கு எதிராக தீவிரமாக யுத்தம் செய்தது. போரின் முடிவை தீர்மானிக்கக்கூடிய இடமாக கருதப்பட்ட ஃப்ரான்சிலுள்ள நார்மண்டி என்ற முக்கியமான பிரதேசத்தில் யுத்தம் நடந்தது. போர் தொடங்குவதற்கு முன்னரே அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபரான ஃப்ராங்க்ளின் D. ரூஸ்வெல்ட் (FDR), வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் மக்களை ஊக்கப்படுத்தும்வண்ணம் உரையாற்றுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். மாறாக, அவர் முழு தேசத்தையும் ஜெபத்தில் வழிநடத்தினார்.

அவர் அனைவரையும் தேவனை நோக்கி, "ஆண்டவரே, இந்த யுத்தத்தில் தைரியமாக போரிடும் எங்கள் குமாரரை நோக்கிப் பாரும். அவர்களுக்கு முன்னே செல்லும். இந்த பலத்த யுத்தத்தை அவர்களுக்காக நீரே செய்திடும். எங்களுக்கு வெற்றியை அருளிச்செய்யும்," என்று ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். உள்ளத்தை உருக்கும் இந்த ஜெபத்தை தன் மகள் அன்னா ரூஸ்வெல்ட்டின் உதவியோடு எழுதினார். அப்படி அனைவரும் இணைந்து அந்த முழு யுத்தத்தையும் தேவனின் கரங்களில் ஒப்படைத்தனர்.

அப்போது ஜெர்மனி வலிமை மிக்கதாகக் காணப்பட்டது. ஆனாலும் தேவன் இடைப்பட்டார். நேச நாடுகள், நார்மண்டியில் நடந்த யுத்தத்தில் வெற்றி பெற்றன; ஃப்ரான்சுக்குள் செல்ல வழி கிடைத்தது. அந்த வெற்றி கிடைக்காதிருந்தால், அவர்களால் அந்த நாட்டுக்குள் நுழைந்திருக்க முடியாது. அந்த முக்கியமான திருப்பம், இரண்டாம் உலகப் போரில் வெற்றிக்கு நேராக வழிநடத்தியது. ஆண்டவர் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

அவ்வண்ணமே, தேவன் இன்று உங்களிடம், "உன் விரோதிகள் உனக்கு எதிராக போரிடலாம். ஆனால், அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள். சிலவேளைகளில் தேவன் போராட்டங்களை, உங்களை அழிப்பதற்காக அல்ல; உங்கள் வாழ்வின் வாயிலாக தம் வல்லமையை வெளிப்படுத்துவதற்காகவே அனுமதிப்பார். நீங்கள் ஜெயம் பெறுவதன் வாயிலாக, மற்றவர்கள் சர்வவல்ல தேவன் உங்களோடிருக்கிறார் என்று அறிந்துகொள்வார்கள். தேவன் பாதுகாப்பவர்களுக்கு எதிராக ஒருவரும் நிற்க முடியாது என்பதை அவர்கள் கண்டுகொள்வார்கள். ஆகவே, பயப்படாதிருங்கள். எல்லா யுத்தத்தையும் இன்று ஆண்டவருக்கு முன்பாக கொண்டு வாருங்கள். அவரே உங்களுக்கான பயங்கரமான பராக்கிரமசாலி. உங்கள் தளகர்த்தர். மக்கள், அதிகாரம், ஸ்தாபனங்கள், இக்கட்டான சூழ்நிலைகள் எவ்வித எதிர்ப்பை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் தேவன் முன்சென்று உங்களுக்காக யுத்தம் செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பயங்கரமான பராக்கிரமசாலியாகவும், என்னை தற்காக்கிறவராகவும் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா யுத்தத்தையும், பாரத்தையும், சவாலையும் இன்று உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். எனக்காக யுத்தம் செய்திடும்; நீர் என்னோடு இருப்பதாகவும், என்னை இரட்சிப்பதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறபடி, எந்தச் சத்துருவும் என்னை மேற்கொள்ளவிடாதிரும். நான் பெலவீனப்படும்போது என்னை பெலப்படுத்தியருளும். என் இருதயத்தை தைரியத்தினால் நிரப்பும். வழியில்லாத இடத்தில் வழியை உண்டாக்கியருளும். எனக்கு முன்னே சென்று, எல்லா எதிர்ப்பு, இக்கட்டு, இயலாத சூழ்நிலையின் நடுவிலும் எனக்கு வெற்றியை அருளிச்செய்திடும். என் வாழ்க்கை உம் மகத்தான வல்லமையை வெளிப்படுத்தி, உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும். உம் பூரண சித்தத்தில் என்னை நிலைநிறுத்தி, எல்லா சூழ்நிலையிலும் உம்மை முழுவதும் நம்புவதற்கு எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.