அன்பானவர்களே, கர்த்தர் உங்களோடிருக்க வாஞ்சிப்பதாக இன்று கூறுகிறார். ஆம், ஆண்டவர் தம் பிள்ளைகளுடன் இருக்க விரும்புகிறார். நாம் வந்து அவரோடு பேசுவதற்காகக் காத்திருக்கிறார். நாம் அவர் பாதத்தில் அமர்ந்து அன்றைய நாளைக் குறித்து கூறவேண்டும் என்று காத்திருக்கிறார். உங்கள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் குறித்து அறிந்துகொள்ள அவர் விரும்புகிறார். உங்கள் எண்ணங்களை அறிந்துகொள்ளவும் விரும்புகிறார். இன்றைக்கு என்ன ஆடையை அணிந்துகொள்ள நினைக்கிறீர்கள் என்று கூட தெரிந்துகொள்ள விரும்புகிறார். ஆம், ஆண்டவர் நமக்கு வெகு சமீபமாக இருப்பதற்கு விரும்புகிறார்.
வேதம், "நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்" (2 நாளாகமம் 15:2) என்று கூறுகிறது. ஆம், அவர் மிகவும் பொறுமையுள்ள தேவனாயிருக்கிறார். அவர், தம்மை நம் வாழ்வுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கமாட்டார். நீங்கள் வந்து அவருடன் அமர்வதற்காகக் காத்திருக்கிறார். இயேசு அமர்ந்து காத்திருக்கும் ஒரு படம் எப்போதும் எனக்கு நினைவில் இருக்கும். ஏனென்றால் அந்தப் படத்தில் இருப்பதுபோன்ற மேசை வீட்டில் எங்கள் அறைக்கு வெளியே இருக்கிறது. ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்போதும், நான் காபி கோப்பையுடன் வந்து அமர்வதற்காக இயேசு காத்திருக்கிறார் என்று எண்ணிக்கொள்வேன். அப்படியே இன்றும் ஆண்டவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்.
அவருடன் அமர்ந்து உரையாடுங்கள். உங்கள் உபத்திரவங்களைக் கூறுங்கள். எந்தக் காரியங்களெல்லாம் உங்கள் கவலைக்குக் காரணமாக இருக்கின்றன என்று கூறுங்கள். "ஆண்டவரே, என்னால் இனிமேல் எதுவும் செய்யமுடியாது," என்று அவரிடம் கூறுங்கள். ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான யாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்வார். அவர், "உன் கவலைகளையெல்லாம் என்மேல் வைத்துவிடு," என்று கூறுகிறார். அவர் உங்களுக்கு இளைப்பாறுதலை அளிப்பார். வேதம், "தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்" (யாக்கோபு 4:8) என்று கூறுகிறது. இன்று நம் வாழ்வை கிறிஸ்துவை நோக்கி திருப்புவோம். குடும்பம், மொபைல் போன், சமூக ஊடகம் போன்ற காரியங்கள் உங்கள் கவனத்தைத் திருப்புகின்றனவா? இவை உங்கள் கவனத்தை திருப்பும்போது, உங்கள் கவனம் தேவனைவிட்டு விலகிவிடும். ஆகவே, இன்று நம் கவனத்தை மீண்டும் தேவனை நோக்கி திருப்புவோம்.
ஜெபம் :
அன்புள்ள ஆண்டவரே, இன்று எங்களை உம் கரங்களில் ஒப்படைக்கிறோம். உம்மை கிட்டிச்சேர்ந்து, அனுதினமும் உம் சமுகத்தை அனுபவித்து மகிழ்ந்திட உதவும். சமூக ஊடகம், மொபைல்போன்கள், வீடியோ கேம், குடும்பம் மற்றும் பிள்ளைகள் என்று எது எங்கள் கவனத்தை சிதறப்பண்ணினாலும், அவற்றால் கவனம் சிதறாமல் இருக்கும்படி காத்துக்கொள்வீராக. எங்கள் உள்ளங்களை உம்மை விட்டு விலக்கும் காரியங்களை ஒருபோதும் அனுமதிக்காமல் இருக்க உதவிடும். உம் அன்பு பிள்ளைகள்மேல் நீர் பெரிதான அன்பு வைத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எங்களை அதிகமாய் நேசிக்கிறீர்; எங்களைப் போகவிடமாட்டீர். உம்மை விட்டு தூரமாய் இருப்பதாக எண்ணும் ஒவ்வொருவரும் உம்மை கிட்டிச்சேர்ந்து, உம் சமுகத்தை அனுபவிக்க உதவும். அவர்களை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பும்; அவர்கள் வாழ்வை பொறுப்பெடுத்துக்கொள்ளும்; அவர்களை பரிபூரணமான ஆசீர்வதிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


