எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்" (2 தெசலோனிக்கேயர் 3:3) என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம். இந்த உலகம் முழுவதும் பொல்லாங்கினுள் கிடக்கிறது. பொல்லாத மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது அவர்கள் பொறாமை கொண்டு, தீங்கான காரியங்களை நமக்கு விரோதமாக செய்ய முயற்சிக்கின்றனர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைத்து பக்திமான்களும் ஆண்டவரை உண்மையாய் தேடினர்; ஆனாலும் எல்லாவித தீமைகளையும் தங்கள் வாழ்வில் கடந்துசென்றனர். யோசேப்பு தன் சொந்த சகோதரர்களால் பல பிரச்னைகளை எதிர்கொண்டான். தன்னுடைய தகப்பனோடு இணைந்து கர்த்தரை கவனமாய் அவன் பின்பற்றியதால் அவர்கள் அவன் வாழ்க்கையையே அழித்துப்போட நினைத்தார்கள். அவன் வாழ்க்கையைக் குறித்து நாம் வேதத்தில் வாசிக்கும்போது, கர்த்தருடைய வழிகளை கருத்தாய் பின்பற்றிய காரணத்தால் அவர் அவனை எப்படிப் பாதுகாத்தார் என்று கண்டுகொள்கிறோம்.

அன்பானவர்களே, ஆண்டவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். சொந்த குடும்பத்திலுள்ளவர்களே உங்களுக்கு உபத்திரவம் கொடுத்தாலும், உங்கள் வாழ்க்கையை அழிப்பதற்கு எண்ணினாலும் கவலைப்படாதீர்கள். ஆண்டவரையே ஏறெடுத்துப் பாருங்கள். யோசேப்பு எப்போதும் ஆண்டவரையே நோக்கிப் பார்த்தான். அவருக்கு பிரியமானவற்றையே எப்போதும் செய்ய பிரயாசப்பட்டான். நீங்களும் ஆண்டவரை பிரியப்படுத்தும் காரியங்களையே செய்திடுங்கள். தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள்; அவர் வழிகளை பின்தொடருங்கள். அப்போது ஆண்டவர் உங்களோடிருப்பார். அவர் தொடரும் எல்லா பொல்லாப்புகளிலிருந்து உங்களைக் காத்து உங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துவார்.

எங்கள் வாழ்விலும் ஊழியத்திலும் பல ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் தேவனையே நோக்கிப் பார்த்து, அவரது பாதத்தை இறுகப் பற்றிக்கொள்வதையே நாங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஜெபம், ஜெபம், ஜெபம் மாத்திரமே நாம் ஆண்டவரை அணுக முடிகிற ஒன்று. அன்பானவர்களே, அதையே நீங்களும் செய்திடுங்கள். ஆண்டவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார். அவர் உண்மையுள்ள தேவன். நிச்சயமாகவே நீங்கள் உங்கள் உபத்திரவங்கள் எல்லாவற்றிலிருந்து வெளியே வருவீர்கள்.

ஜெபம்:
அருமையான பரலோக தகப்பனே, என்னை பாதுகாப்பதாக நீர் வாக்குக்கொடுத்துள்ளதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, பொல்லாத மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தாலும் நீர் மாத்திரமே என் நம்பிக்கையாயிருப்பதால் உம்மை முழுவதுமாக நம்பி, உம்முடைய தெய்வீக பாதுகாப்பை நாடி உம் பாதத்தைப் பற்றிக்கொள்கிறேன். நீர் மாத்திரமே என் நம்பிக்கையாகவும் பெலனாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறீர். ஆண்டவரே, எனக்காக யாவற்றையும் செய்து முடித்தருளும். நான் உம் பிள்ளையாக இருப்பதால் என்னை கண்ணோக்கும்; என்னுடன் இருந்தருளும். என் பாதைகளிலெல்லாம் என்னை வழிநடத்தி, மகிமையான உம் ஆசீர்வாதங்களினால் என்னை ஆசீர்வதித்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.