எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" (நீதிமொழிகள் 28:20) என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பாருங்கள். தேவனை பின்பற்றுவதில் நீங்கள் உண்மையாயிருக்கிறீர்களா? கர்த்தருக்கு முன்பாக எல்லா நல்ல காரியங்களையும் செய்வதற்கு நீங்கள் உண்மையாயிருக்கிறீர்களா? நீங்கள் உண்மையாயிருந்தால், கர்த்தர் உங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார். நீங்கள் ஆண்டவரால் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். வேதம், "தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்," (1 கொரிந்தியர் 1:9) என்றும், "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்," (2 தெசலோனிக்கேயர் 3:3) என்றும் கூறுகிறது.
வேதாகமத்தில் நாம் தாவீதைக் குறித்து வாசிக்கிறோம். அவன் கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்தான். அவன் மேய்ப்பன்தான். ஆனாலும், கர்த்தரை நேசித்து, அவரை நண்பராகக் கொண்டான். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1) என்று அவன் கூறுகிறான். முழு சங்கீதத்தையும் வாசித்தீர்களானால், ஒவ்வொரு வாக்கியத்தையும் தியானிப்பது இன்பமாயிருக்கும். கர்த்தரை உங்கள் மேய்ப்பராகக் கொண்டிருக்கும்போது, தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்கள் உங்கள்மேல் வரும். தாவீதின் வாழ்வு முழுவதும் தேவ பிரசன்னம் அவ்வளவு வல்லமையாய் விளங்கியது. அவன் அநேக போராட்டங்களை, சோதனைகளை, பிரச்னைகளைக் கடந்து சென்றாலும் கர்த்தர் ஒருபோதும் அவனை விட்டு விலகவில்லை. கர்த்தர் உங்களோடு இருக்கும்போது, நீங்களும் அவரது சமுகத்தாலும் சந்தோஷத்தாலும் நிரப்பப்படுவீர்கள்.
தாவீது, மேய்ப்பனான இளைஞனாக இருந்தான். கர்த்தரை உண்மையாய் பின்பற்றியதால் பெரிய ராஜாவானான். அன்பானவர்களே, அவ்வண்ணமே நீங்களும் பாக்கியம் பெறலாம். உண்மையோடு கர்த்தரை பின்பற்றுங்கள். அப்போது கர்த்தர் உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பார்; மற்றவர்கள் முன்பாக உங்களைக் கனப்படுத்துவார்கள். தாவீதை நிலைப்படுத்திய உண்மையுள்ள அதே தேவன் உங்களையும் நிலைப்படுத்துவார்; எல்லா தீமையிலிருந்தும் உங்களை விடுவிப்பார்; உங்கள் வாழ்க்கையை தம் பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்புவார். நாம் இப்போது ஜெபிப்போம். ஆண்டவர்தாமே வந்து உங்களைக் கனப்படுத்துவாராக; உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, வாழ்வின் எல்லா காலங்களிலும் எனக்கு உண்மையுள்ளவராக இருப்பதினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் முழு இருதயத்தோடும் உம்மை பின்பற்றவும், அன்பில் நிலைத்திருக்கவும், உமக்குக் கீழ்ப்படியவும் எனக்கு உதவும். ஆண்டவரே, என் மேய்ப்பராயிருந்து எல்லா போராட்டம், சோதனை, பயத்தினூடாக என்னை நடத்திச் செல்லும். தாவீதை நீர் பரிபூரணமாக ஆசீர்வதித்ததுபோலவே உம் தயவு என்மீது தங்கட்டும். உம்மை நம்புவதற்கும், அனுதினமும் உம்மை நெருங்கி ஜீவிக்கவும் எனக்குக் கற்றுக்கொடும். என் வாழ்வில் உம் ஆசீர்வாதங்கள் பரிபூரணமாய் விளங்கவும் உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரவும் வேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


