அன்பானவர்களே, இதுவரை நீங்கள் தேவ பயத்தில் நடந்து வந்திருப்பதால், அவரது சித்தத்தை நோக்கியிருப்பதால், அவரது சத்தத்தைக் கேட்பதற்காக அவரது சமுகத்தில் பொறுமையுடன் காத்திருந்ததால், உங்கள் இருதயத்தை, சிந்தையை, சரீரத்தை, செயல்களை பரிசுத்தமாக காத்துக்கொண்டிருப்பதற்கு பலனாக இன்றிலிருந்து கர்த்தர் உங்கள் திடமாக ஸ்தாபிக்கப்போகிறார். இயேசு, "...இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" (மத்தேயு 16:18) என்று கூறுகிறார். பாதாளத்தின் வாசல்கள் என்று குறிப்பிடப்படும், துன்மார்க்கரின் கோபம், கொடிய வியாதிகளால் ஏற்படும் உபத்திரவங்கள், இழப்பினால் நேரும் வேதனை, குற்றத்தினால், கடிந்துகொள்ளப்படுவதால் எழும்பும் ஒடுக்குதலின் எண்ணங்கள் எதுவும் உங்களை மேற்கொள்ள முடியாது.
நீங்கள் ஜீவனுள்ள தேவனின் ஆலயமாக இருக்கிறீர்கள்; அவரது ஆவி உங்களுக்குள் தங்கியிருக்கிறார் (1 கொரிந்தியர் 3:16). நீங்கள் முக்கியமற்றவர் என்றோ, உங்கள் வாழ்க்கை ஒரு பொருட்டே அல்லவென்றும் எண்ணாதிருங்கள். மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார். "நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்" (ஏசாயா 51:1) என்று வேதம் கூறுகிறது. ஆம், இயேசுவை நோக்கிப் பாருங்கள்; அவரே கன்மலையாயிருக்கிறார். அவரே உங்களை தம்மேல் திடமாக ஸ்தாபிக்கிறார். ஒன்றும் உங்களை அவரிடமிருந்து பிரிக்க முடியாது. நம் ஆண்டவராகிய இயேசுவின்மேல் நீங்கள் உறுதியாக பொருத்தப்பட்டிருக்கிறீர்கள். அப்போஸ்தலனாகிய பவுல், "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?" என்று கேட்கிறார் (ரோமர் 8:36). அவர், உபத்திரம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம், பட்டயம் எதுவும் நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியாது என்று கூறுகிறார். இவையெல்லாவற்றிலும் நம்மை நேசிக்கிற அவரால் நாம் முற்றும்ஜெயங்கொள்ளுவோம் என்கிறார். ஒருவேளை, நீங்கள், "ஆண்டவர் இயேசுவுடன் நான் முழுமையாக இணைந்திருக்கிறேன் என்று கூறுமளவுக்கு வைராக்கியமான அன்பு என்னிடம் இல்லை" என்று சொல்லலாம். உங்களால் நேசிப்பதற்கு முடிகிற அயச அன்பைக் காட்டிலும் கிறிஸ்து உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பு மிகவும் அதிகமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.
தேவன், கிறிஸ்துவின் ஜீவத்தண்ணீரைத் தந்து சுத்திகரித்து, புதுப்பித்து, மறுரூபப்படுத்துவார். "அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே" (1 கொரிந்தியர் 10:4). மோசேயின் வாயிலாக தேவன் தம் வார்த்தையை உரைத்தார்; அதை உறுதிப்படுத்தினார்; தம் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். அவர்களைச் செங்கடல் வழியாக நடத்தினார். அவர்கள், தங்கள் வாழ்வில் கடந்த காலத்து உபத்திரவங்களையும் கட்டுகளையும் விட்டுவிட்டு புதிய வாழ்வுக்குள் நுழையவேண்டுமென்று அவர் விரும்பினார். செங்கடலின் தண்ணீரால் பழைய கட்டுகளிலிருந்து அவர்கள் கழுவப்பட்டனர்; பழைய வாழ்விலிருந்து புது விடுதலைக்கு ஆச்சரியமானவிதத்தில் கடந்து சென்றனர். அவர், "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்" என்று கூறுகிறார் (யோவான் 7:37). நீங்கள் தாகமாயிருக்கிறீர்களா? "யார் என்னை விடுவிப்பார்கள்?" என்று திகைத்து கலங்குகிறீர்களா? ஆண்டவராகிய இயேசுவைக் கேளுங்கள். அவர் உங்களை ஜீவத்தண்ணீரால் நிரப்புவார்; சுத்திகரிப்பார்; புதுப்பிப்பார்; புதிய வழியில் நடத்துவார். அவ்வண்ணமே, தேவன் உங்களையும் பழைய காரியங்களை விட்டு வெளியே கொண்டு வந்து, புது வாழ்வுக்குள் நடத்துவார்.
நீங்கள் கன்மலையின்மேல் திடமாக ஸ்தாபிக்கப்படும்போது, உங்களுக்கு விரோதமாக எது வந்தாலும் உறுதியாக நிற்பதற்கான தெய்வீக பெலனை பெறுவீர்கள். வேதம், "ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது" (லூக்கா 6:48) என்று கூறுகிறது. நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருக்கிறபடியால், அசைக்கப்படுவதில்லை. உங்கள் பெயர், குடும்பம், வேலை, வியாபாரம் அசைக்கப்படாது. உங்கள் அழைப்பும் அசைக்கப்படாது. கிறிஸ்துவின் பெலன் உங்களுக்குள் மேன்மேலும் பெருகும். வேதம், "கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்" (உபாகமம் 32:13) என்று கூறுகிறது. கர்த்தர் உங்களுக்கு தம் உச்சிதமான ஆசீர்வாதங்களை அளிப்பார்; அவர் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியுள்ள தயையை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
நிறைவாக, கிறிஸ்துவின்மேல் ஸ்தாபிக்கப்பட்டவர்களுக்கு தெய்வீக பாதுகாப்பும் உண்டு. வேதம், "பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" என்று கூறுகிறது (மத்தேயு 16:18). பிசாசுகள் உங்களுக்கு விரோதமாக எழும்பலாம்; அந்தகாரத்தின் வல்லமை, மக்கள் வாயிலாக, பல்வேறு விதங்களில் கிரியை செய்யலாம்; ஆனால், கிறிஸ்துவின்மேல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளவர்களின் வாழ்க்கையை அவற்றால் மேற்கொள்ள முடியாது. இயேசு கிறிஸ்து என்னும் நாமமும் உங்கள்மேல் இருக்கிறது; நீங்கள் அவரது ஆலயமாக இருக்கிறீர்கள். இயேசு என்னும் நாமத்தில் பரலோகத்தில், பூமியில், பூமியின் கீழ் இருக்கும் எல்லா முழங்காலும் முடங்கும் (பிலிப்பியர் 2:10). ஆகவே உங்களுக்கு விரோதமாக எழும்பும் வல்லமைகளுக்குப் பயப்படாதிருங்கள். உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர்; சமாதானத்தின் தேவன் சீக்கிரமே சாத்தானை உங்கள் கால்களின் கீழ் நசுக்கிப்போடுவார் (ரோமர் 16:20). ஆகவே, திடமாக, தைரியமாக நில்லுங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, என் வாழ்க்கையை கன்மலையாகிய இயேசுவின்மேல் ஸ்தாபித்தருளும். என் இருதயத்தைச் சுத்திகரித்து, என் மனதை புதுப்பியும்; புது வாழ்க்கைக்குள், ஜீவத்தண்ணீரால் நீர் எனக்கென்று ஆயத்தமாக்கியுள்ள விடுதலைக்குள் என்னை நடத்தும். எல்லா தேவையையும் அருளிச்செய்து, இக்கட்டான சூழ்நிலையிலும் உம் தயவை அனுபவிக்கச் செய்திடும். எவ்வித உபத்திரவம், எதிர்ப்பு இவற்றின் நடுவிலும் ஸ்திரமாக நின்றிட எனக்குப் பெலன் அளித்திடும். இருளின் எல்லா சதியாலோசனையிலிருந்தும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும். உம் கரத்தில் என் அழைப்பை, வேலையை, எதிர்காலத்தை வைத்துக்கொள்ளும். நான் உம் ஆலயமாகவும், நீர் என் மாறாத அஸ்திபாரமாகவும் இருப்பதால் உம் ஆவியானவர் எனக்குள் நிறைவாய் தங்கியிருப்பாராக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


