எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்" (உபாகமம் 30:9)என்ற வாக்குத்தத்த வசனத்தைத் தியானிப்போம். வேதம், "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22)என்று கூறுகிறது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை எப்போது பெற்றுக்கொள்வீர்கள்? நீங்கள் கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர் உங்களுக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் செய்யும்போது அவரது பரிபூரணமான ஆசீர்வாதங்கள் உங்களைத் தொடர்ந்து வரும் என்ற வேதம் கூறுகிறது (உபாகமம் 30:8). ஆம், நாம் கர்த்தரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும்.
இயேசு கிறிஸ்துவே நமக்கு பூரண முன்மாதிரியாக இருக்கிறார். ஆண்டவர் இயேசு, "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்," (யோவான் 10:30)என்று கூறுகிறார். அவர் எல்லாவற்றையும் தேவனுடைய சித்தத்தின்படியே செய்தார்; இயேசு, பிதாவை உண்மையாய் தேடினார். ஆம், அன்பானவர்களே, நம் வாழ்வில் தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். முதலாவது, எந்நேரமும் ஆண்டவரை பிரியப்படுத்தவேண்டும். அதற்கு நம் முழு உள்ளத்தோடும் அவரைத் தேட வேண்டும்.
என் கணவர், Dr.டி.ஜி.எஸ். தினகரன், பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியபோது, மிகவும் சிரமத்தோடு வேலை செய்யவேண்டியதிருந்தது. தினமும் காலை 6 மணிக்கு நாங்கள் எழுந்து, அரைமணி நேரம் குடும்பமாய் ஒருமித்து ஜெபிப்போம். 6:30 மணிக்குப் பிறகு அவர் மாத்திரம் தன் வேதாகமத்தோடு தனியே சென்று 8:30 மணி வரைக்கும் ஆண்டவரோடு நேரத்தைச் செலவிடுவார். அப்படி ஆண்டவரை உண்மையாய் தேடினதினால் ஆண்டவர், வங்கி வேலையில் அவரை ஆசீர்வதித்து, மகா உயரங்களுக்கு உயர்த்தினார். ஆம், அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையை கருத்தாய் வாசித்து, எல்லா காரியங்களையும் ஆண்டவருக்குப் பிரியமானவிதத்தில் செய்திடுங்கள். அப்போது உங்கள் வேலைகளிலெல்லாம் ஆண்டவர் உங்களை செழிக்கப்பண்ணுவார்.
ஜெபம்:
பரம தகப்பனே, நான் செய்கிற எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுவதாகவும், அதனோடு வேதனையை கூட்டாதிருப்பதாகவும் கொடுத்திருக்கும் அன்பான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியவும் உம்முடைய வழிகளில் நடக்கவும் எனக்குக் கற்பித்தருளும். என் முழு உள்ளத்தோடும் உம்மை உண்மையாய் தேட எனக்கு உதவி செய்யும். என் எண்ணங்கள், செய்கைகள் எல்லாம் உமக்குப் பிரியமானவையாக இருக்கட்டும். ஆண்டவரே, உம்முடைய வார்த்தையில் வாக்குப்பண்ணியிருக்கிறபடி, என் கையின் பிரயாசங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதித்தருளும். உம்முடைய மகிமைக்காக மாத்திரம் என்னை உயர்த்தும். என் வாழ்க்கையை உம் அன்பின் கரங்களில் முற்றிலும் ஒப்படைத்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


