அன்பானவர்களே, இன்றைக்கு, "கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்" (கலாத்தியர் 5:1) என்ற வசனத்தைத் தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, இன்றைக்கு தேவன் உங்களுக்கு விடுதலையை தந்திருக்கிறார். இயேசு, உங்களைப் பணயமாகவோ, கட்டுக்குள்ளோ வைத்திராமல் சுதந்திரமாக வாழும்படி விடுவித்திருக்கிறார். முன்பு செய்த தவறுகளாலோ, துன்புறுத்தும் சில நினைவுகளாலோ நீங்கள் குற்றவுணர்வாலும் பயத்தாலும் கட்டப்பட்டிருக்கலாம். நீங்கள் இயேசுவை விசுவாசித்தாலும், இன்றும் அதுபோன்ற உணர்வுகள் உங்களை வாட்டிக்கொண்டிருக்கலாம். நீங்கள், "என்னால் மாற முடியவில்லை; இதிலிருந்து வெளியே வர இயலவில்லை," என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், இன்று ஆண்டவருக்குள் முழுவதுமாய் விடுவிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அனைவரும் அறிந்த ஒரு கதை உண்டு. யானைக் கன்று ஒன்று உறுதியான ஒரு தூணில் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அது குட்டியாயிருந்தபோது, அந்தக் கயிற்றை அறுப்பதற்கு முயற்சி செய்தது. பல முறை முயற்சி செய்தபோதும், இயலாததால் தன்னால் அதை அறுக்கவே இயலாது என்று நம்ப தொடங்கியது. அது பெரிதாகவும் பெலமுள்ளதாகவும் வளர்ந்த பின்னரும் அதே கயிறு அதைக் கட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. கயிறு, பெலம் வாய்ந்ததாக மாறியதால் அல்ல; யானை தன்னால் தப்ப இயலாது என்று நம்பியதால் அப்படிக் கட்ட முடிந்தது. யானை பெரிதாக வளர்ந்த பின்னரும் அந்த சின்னக் கயிறு அதே இடத்தில் அதைக் கட்டிப்போட போதுமானதாக இருந்தது. அந்த நம்பிக்கையே அதன் எண்ணத்தையும் நடத்தையையும் கட்டுப்படுத்தியது.
அவ்வண்ணமே, நாம் வளரும்போது, நாம் முன்னர் செய்த தவறுகள், நமது பழைய நடத்தைகள், முன்பு நடந்த எல்லாமும் இன்று நம்மை கட்டுப்படுத்தக்கூடும். அது, தோல்வியாகவோ, புண்படுத்தலாகவோ, குற்றமாகவோ இருக்கலாம். நாம், "ஆ, இது எனக்கு முன்பு நடந்தது. என்னால் ஒருபோதும் மாற இயலாது. இதிலிருந்து ஒருபோதும் என்னால் வெளிவர முடியாது," என்று எண்ணலாம். அதன் காரணமாக, நாம் அதே இடத்தில் தங்கியிருக்கலாம்; அதே பயத்துடன், முன்னேற இயலாமல் இருக்கலாம். நீங்கள் ஒரு தவறு செய்திருக்கலாம்; தேவனிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம்; ஆனால், இன்னமும் உங்களையே குற்றஞ்சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால், இன்று தேவன் உங்களுக்கு முழு விடுதலையை, சுதந்திரத்தை அருள விரும்புகிறார். அவருடன் புதிதான வாழ்க்கை வாழ விரும்புகிறார்.
முதலாவதாக, தேவன் நம்மை குற்றப்படுத்தாததால் நம்மை நாமே கடிந்துகொள்வதை நிறுத்துவோம். "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" என்று வேதம் கூறுகிறது (ரோமர் 8:1). இன்றைக்கு, ஆண்டவர் உங்களைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, தம்முடன் நீதியான, தேவனுக்குப் பயந்த புதிய வாழ்வை தொடங்கவேண்டுமென்று விரும்புகிறார். ஆகவே, தேவன் அருளும் மன்னிப்பை பெற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏற்கனவே மன்னித்துவிட்டவற்றுக்காக உங்களை தண்டித்துக்கொள்வதை நிறுத்துங்கள்.
இரண்டாவதாக, தேவன் உங்களுக்கு பயத்தை அல்ல; சுதந்திரத்தை அளிக்க விரும்புகிறார். வேதம், "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" என்று கூறுகிறது (2 தீமோத்தேயு 1:7). ஆகவே, நீங்கள் முடிவெடுப்பதை பயமோ, கலக்கமோ கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். மாறாக, எல்லாவற்றையும் தெளிவும் திடமுமான மனதுடன் செய்யுங்கள்; தேவ அன்பால் உங்கள் உள்ளம் நிறைந்திருக்கட்டும்.
மூன்றாவதாக, தேவன் உங்களுக்கு அளித்திருக்கும் விடுதலையோடு நடந்திடுங்கள். வேதம், "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" என்று கூறுகிறது (யோவான் 8:36). இன்று, நீங்கள் சுகத்தின், விடுதலையின், சுதந்திரத்தின் செயல்முறையில் நடக்கும்போது, நீங்கள் தனியே இல்லை என்று அறிந்துகொள்வதுடன், ஆண்டவர்மேல் நம்பிக்கையும் வைத்திடுங்கள். இந்தப் பயணத்தில் உங்களை வழிநடத்துவதற்கு தேவன் விரும்புகிறார்; இயேசுவில் நீங்கள் விடுதலையை அனுபவிக்க முடியும். சோதனைகள் வரலாம்; கவனம் சிதறலாம்; எதிர்மறை குரல்கள் கேட்கலாம். ஆனால், தேவனுடைய வார்த்தையில் நீங்கள் கேட்கிறவற்றையும் வாசிக்கிறவற்றையும் ஒருபோதும் மறவாதீர்கள். தேவன் உங்களை விடுதலையாக்கியிருக்கிறார் என்று எப்போதும் விசுவாசியுங்கள். இன்றிலிருந்து விடுதலையோடு நடந்திடுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த நாளுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பழைய பாவங்கள், குற்றம், எதிர்காலத்தைக் குறித்த பயத்திலிருந்து எனக்காக விடுதலையை வாங்கியிருப்பதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பிடும். என் எண்ணங்களை முழுவதுமாய் ஆண்டுகொண்டு, என்னை வெற்றியாய் நடத்திடும். எல்லா பெலவீனங்களிலிருந்தும் நான் விடுதலையோடு முற்றும் ஜெயங்கொண்டவனா(ளா)ய் விளங்குவதற்கு உதவி செய்திடும். உம் ஆவியானவர் என்னை சகல சத்தியத்தின், நீதியின், சந்தோஷத்தின், சமாதானத்தின் வாழ்க்கைக்குள் நடத்துவார் என்று விசுவாசித்து இயேசுவின் இணையற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


