பிரியமானவர்களே, உங்கள் சாபங்களையெல்லாம் ஆசீர்வாதமாக மாற்றுவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். பெங்களூருவில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை நான் சமீபத்தில் வாசித்தேன். நீதிமன்றம் ஒன்றில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது. ஒரு முதிய பெண்மணி நீதிபதியின் இருக்கைக்குச் சென்று பில்லிசூனியம் செய்வதற்கு முயற்சித்தார்கள். நீதிபதியோ மற்றவர்களோ வரும் முன்னரே அவர்கள் சென்று அந்த இருக்கையில் பில்லிசூனியம் வைக்க முயற்சித்தார்கள். ஆம், இந்த உலகில் அநேக காரியங்கள் நடக்கின்றன. ஆனால், ஆண்டவர், அவர் நம்மை காப்பாற்றுவதாகவும், நம் சாபங்களையெல்லாம் ஆசீர்வாதமாக மாற்றுவதாகவும் வாக்குப்பண்ணுகிறார். "அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய" (நெகேமியா 13:2) என்று வேதம் கூறுகிறது. நீங்களும் இன்று அதே சூழ்நிலையில் இருக்கலாம். சிலவேளைகளில் பரம்பரை சாபங்களைக் குறித்து பேசுவதைக் கேட்கிறோம். ஒரு சந்ததியிலிருந்து சாபம் அடுத்த சந்ததிக்குச் செல்கிறது. தாயிடமிருந்து பிள்ளைக்கும், பேரப்பிள்ளைக்கு என்று செல்கிறது. ஆனால், இன்று கர்த்தர் அதே சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றப்போகிறார். ஏதோ ஒன்றுக்கு அடிமையாவதுபோல் அது இருக்கலாம்.

"அவன் அப்பா குடிப்பார். ஆகவே, இவனும் குடிக்கிறான். அவன் அப்பா சூதாடுவார்; இவனும் சூதாடுகிறான்," என்று கூறுவார்கள். ஆனால் இன்று ஆண்டவர் அந்தச் சாபத்தை உடைக்கப்போகிறார். உங்களிலிருந்து அந்த மாற்றம் தொடங்கப்போகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அதைச் சுமந்துசெல்வதில்லை. உங்கள் வாழ்க்கையில் அந்த மாற்றத்தை ஆண்டவர் செய்வார்.

ஜாண் ஓலிரே என்ற மனிதர் எட்டு அல்லது ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது, தன் வீட்டில் தீப்பெட்டியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். துர்வாய்ப்பாக கொட்டகை முழுவதும் தீப்பற்றிக்கொண்டது. உடல் முழுவதும் கொடிய தீப்புண்கள் உண்டாகின. மருத்துவர், இன்று இரவு நீ பிழைப்பதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பே உள்ளது," என்று கூறினார். ஆனால், தேவன் அவர் வாழ்வில் ஓர் அற்புதம் செய்தார். அவரைத் தொட்டு சுகப்படுத்தினார். ஐந்து, ஆறு, ஏழு மாதங்கள் மறுவாழ்வு சிகிச்சைக்கு நடந்தது. ஜாண் இப்போது மகிழ்ச்சியாய் இருக்கிறார். திருமணமும் முடிந்திருக்கிறது. உலகம் முழுவதும் பயணித்து ஊக்க உரையாற்றுகிறார். ஆம், இந்த சாபங்கள் உங்களை கீழே தள்ள முயற்சிக்கலாம். உங்கள் குடும்பத்தை அழிப்பதற்கு அவை முயற்சிக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் எல்லா ஆசீர்வாதத்தை அவை தடுத்துப்போடலாம். ஆனால் ஆண்டவர், உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர் என்று கூறுகிறார். ஆண்டவர், அதை ஆசீர்வாதமாக மாற்றுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா சாபத்தையும் ஆசீர்வாதமாக உம்மால் மாற்ற முடியும் என்ற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அடிமைத்தனத்தின் மாதிரி எல்லாவற்றையும் உடைத்துப்போடும்; ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு தொடரும் தீமையின் செல்வாக்கை நொறுக்கிப்போடும். உம் பிள்ளைகளையும் அவர்கள் குடும்பங்களையும் எல்லா தீய யோசனையிலிருந்தும் பாதுகாத்து, அவர்கள் வீடுகளை உம் பிரசன்னத்தால் நிரப்பிடும். அவர்களுக்கு விரோதமாக உரைக்கப்பட்ட எல்லா சாபமும் ஆசீர்வாதமாக மாறுவதாக. மது, சூதாட்டம் மற்றும் ஆரோக்கியமற்ற எல்லா பழக்கவழக்கங்களிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை அளித்திடும். அவர்களைச் சுற்றிலும் உம் பாதுகாப்பின் வேலியை அமைத்து, உம் பாதையில் அவர்களை நடத்திடும். ஆசீர்வாதங்கள் அவர்கள் வாழ்வில் நிரம்பி வழிந்து அவர்கள் பிள்ளைகளுக்கும் தொடரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.