அன்பானவர்களே, "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்" (சங்கீதம் 51:12) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். வாழ்க்கையில் பலவேளைகளில் இரட்சிப்பின் சந்தோஷத்தை நாம் இழந்துவிட்டதுபோல் உணரலாம். பாவம், சோதனை, வாழ்க்கையின் போராட்டங்கள் நாம் தேவனை விட்டு தூரமாக சென்றுவிட்டதுபோல் உணரவைக்கலாம். ஒரு காலத்தில் நாம் முழுவதும் அக்கினியாய், வைராக்கியமாய், ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வாஞ்சையாய் இருந்திருக்கலாம். ஆனால், காலம் செல்ல செல்ல, தோல்விகளும் பெலவீனங்களும் வந்து நம் அக்கினியை மங்கச் செய்யலாம். ஒரு காலத்தில் தைரியமாய், எது வந்தாலும் பரவாயில்லை என்று இயேசுவை பின்பற்றிய பேதுருவைபோல, நம்முடைய பெலவீனங்களில் நாம் ஆண்டவரை மறுதலிக்கவோ, ஏமாற்றவோ செய்திருக்கலாம். பேதுரு, இயேசுவை மூன்று முறை மறுதலித்தபோது அவன் உள்ளம் உடைந்து, தன்னை மன்னிக்கவே முடியாது என்று எண்ணி கசந்துபோய் அழுதான்.
ஆனால், நம் ஆண்டவர் இரக்கமிகுந்தவர். இயேசு, மரணத்திலிருந்து உயிரோடு எழுந்த பிறகு, பேதுரு மறுதலித்ததற்கு சமமாக மூன்று முறை, "நீ என்னில் அன்பாயிருக்கிறாயா?" என்று கேட்டு சீர்ப்படுத்தினார். அந்தத் தருணம் இயேசு மன்னிப்பவர் மட்டுமல்ல; முற்றிலுமாக சீர்ப்படுத்துகிறவர் என்பதை நிரூபித்தது. வேதம், "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்" (எபிரெயர் 8:12) என்று கூறுகிறது. அன்பானவர்களே, நாம் முழு இருதயத்தோடும் மனந்திரும்பும்போது, ஆண்டவர் எல்லா பாவங்களையும் கழுவுவார்; நமக்கு எதிராக அவற்றைப் பிடிக்கமாட்டார். அவர் இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பத் தருவார்; குற்றவுணர்ச்சியின் பாரத்தை அகற்றுவார். நம்மை சமாதானத்தினால் நிறைப்பார். ஒருமுறை மடங்கடிக்கப்பட்ட ஒன்று ஒருபோதும் நம்மை வரையறுக்க முடியாது. மாறாக, அவரது கிருபை நம்மை தாங்கும்; அவரது ஆவி மறுபடியும் உண்மையாய் நடப்பதற்கு நம்மை பெலப்படுத்தும்.
சீர்ப்படுத்தப்பட்ட பிறகான பேதுருவின் வாழ்க்கையைப் பாருங்கள். முன்பு தோல்வியடைந்த அதே மனிதன், ஆயிரக்கணக்கானோரை இயேசுவிடம் வழிநடத்தினான்; தைரியத்தோடு பிரசங்கித்தான்; தன்னுடைய நிழலினால் கூட வியாதியஸ்தர்களை குணமாக்கினான். அதுவே சீர்ப்பட்ட வாழ்வின் வல்லமையாகும். அவ்வண்ணமாகவே, நீங்கள் தேவனிடம் மனந்திரும்பும்போது, அவர் உங்களை மன்னிப்பதோடு, பெரியதொரு நோக்கத்திற்காக உங்களைப் பெலப்படுத்துவார். அவர் தளராத, உற்சாகமுள்ள, இறுதிவரை உண்மையாயிருக்கிற ஆவியை உங்களுக்கு அருளுவார். இன்று, உங்கள் சந்தோஷத்தை திரும்பத் தரவும், உங்கள் ஆவியை உயிர்ப்பிக்கவும், மகிழ்ச்சியோடு தம்மை சேவிக்கும்படியாகவும் உங்களை விடுவிக்க ஆண்டவர் வாஞ்சையாயிருக்கிறார். இயேசுவிடம் திரும்புங்கள்; அவர் சமாதானத்தினால், சந்தோஷத்தினால், பெலத்தினால் நிறைந்த புதிய ஆரம்பத்தை உங்களுக்குத் தருவார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் பாவங்களை மன்னித்து என்னை சீர்ப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்றைக்கு இரட்சிப்பின் சந்தோஷத்தால் மறுபடியும் என்னை நிரப்பும். தினந்தோறும் உம்மை உண்மையாய் சேவிக்க விரும்பும் ஆவியை எனக்குத் தந்தருளும். குற்றவுணர்வின் எல்லா பாரத்தையும் அகற்றி, சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் அந்த இடத்தை நிறைத்தருள வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் வேண்டுகிறேன், ஆமென்.