அன்பானவர்களே, தம் பிள்ளைகளை எல்லாவிதத்திலும் ஆசீர்வதிக்கவே தேவனுடைய இருதயம் விரும்புகிறது. இயேசு, "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்" (லூக்கா 6:38) என்று கூறுகிறார். ஆசீர்வாதத்தை பொழிந்தருள தேவன் விரும்புகிறார்; ஆனால், எங்கு, எப்படி கொடுக்கவேண்டும் என்றும் காட்டுகிறார். முதலாவது கர்த்தர், "என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா" (நீதிமொழிகள் 23:26) என்று கூறுகிறார். நாம் பாவத்தை, பயத்தை, பாரங்களை நம் இருதயத்தில் சுமக்கக்கூடாது என்று அவர் விரும்புகிறார். தாம், கதவின் அருகில் நின்று தட்டிக்கொண்டிருப்பதாகவும் இயேசு கூறுகிறார் (வெளிப்படுத்தல் 3:20). நம்முடைய இருதயத்தை திறந்து அவருக்கு முழுவதுமாகக் கொடுத்தால் அவர் உள்ளே வந்து, சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் அதை நிரப்புவார். இயேசுவுக்கு நம் இருதயத்தை அர்ப்பணிக்கும்போது, நாம் கொடுக்க ஆரம்பிக்கிறோம்.
இரண்டாவதாக, நம் காணிக்கைகளை தேவனுக்குக் கொடுக்கும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தம் வீட்டில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தம் பண்டசாலைக்குள் தசமபாகத்தை கொண்டு வர வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிடுகிறார் (மல்கியா 3:10,11). நம்முடைய சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை கொடுக்கும்போது அல்லது நம்முடைய முதற்பலன்களை அர்ப்பணிக்கும்போது, வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் நம்மை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். பட்சிக்கிறவனை அவர் கடிந்துகொண்டு நம் பொருளாதாரத்தை, ஆரோக்கியத்தை, குடும்பத்தை பாதுகாக்கிறார். நல்ல நிலத்தில் நாம் விதைக்கும்போது, ஆயிரக்கணக்கானோர் சுவிசேஷத்தின் மூலம் தொடப்படுவார்கள்; கர்த்தர் நம் விதையை பெருகப்பண்ணி, பூரணமாக நம்மை ஆசீர்வதிப்பார். பசியுள்ளவர்களுக்கு போஜனம் கொடுக்கவும், ஆடையற்றவர்களுக்கு ஆடை கொடுக்கவும், வீடற்றவர்களுக்கு வீடு கொடுக்கவும் வேதம் நமக்குப் போதிக்கிறது (ஏசாயா 58:7,8). தேவையில் உள்ளவர்கள்பேரில் நாம் அக்கறை காட்டும்போது, தேவன் நம்மை குணமாக்குகிறார்; நம் நீதியை பிரகாசிக்கப்பண்ணுகிறார்; நம்மை தமது மகிமையால் மூடுகிறார்.
இறுதியாக, தம் ஊழியர்களுக்குக் கொடுக்கிறவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். சாறிபாத் ஊரைச் சேர்ந்த விதவை தன்னுடைய கடைசி உணவை எலியா தீர்க்கதரிசிக்குக் கொடுத்தாள்; கர்த்தர் அவள் வீட்டாருக்கு வேண்டியவற்றை அருளிச் செய்தார் (1 இராஜாக்கள் 17:12-16). அவ்வண்ணமே, நமக்காக ஜெபித்து, தேவ ராஜ்யத்திற்காக உழைக்கும் தேவனுடைய ஊழியர்களை நாம் கனம்பண்ணும்போது, தேவன் விசேஷித்த ஆசீர்வாதங்களை நமக்கு அருளிச்செய்கிறார். கர்த்தருடன் நடக்கும் பரிசுத்தவான்களை கனப்படுத்தவேண்டும் என்று வேதம் போதிக்கிறது (சங்கீதம் 16:2,3). ஆகவே, நம் இருதயத்தை இயேசுவுக்குக் கொடுப்போம்; தசமபாகத்தை அவர் ஊழியத்திற்குக் கொடுப்போம்; ஏழைகளுக்கு, தேவ ஊழியர்களுக்குக் கொடுப்போம். அப்போது கர்த்தர் ஆவிக்குரிய, சரீரப்பிரகாரமான, உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் நம் வாழ்வில் நிரம்பி வழியச் செய்வார். உற்சாகமாகக் கொடுக்கிறவண்ணம் வாழ்வதற்கு வேண்டிய கிருபையை தேவன் தந்தருள்வாராக.
ஜெபம்:
அன்பின் தகப்பனே, என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற உம் விருப்பத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று என் இருதயத்தை முழுவதுமாக உமக்கு தருகிறேன். என்னிலிருந்து பாவம், பயம், பாரம் இவற்றை கழுவியருளும். உமது சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் என்னை நிரப்பும். உம் ஊழியத்திற்குக் கொடுப்பதால் என்னை ஆசீர்வதித்தருளும். பட்சிக்கிறவனை கடிந்துகொண்டு என் ஆசீர்வாதங்களை காத்தருளும். வறியவர்களை மறவாமல் அவர்கள்பேரில் அக்கறை காட்ட எனக்கு உதவும். உம் ஊழியர்களை நான் கனம்பண்ணுவதால் என்னை கனம்பண்ணும். என் வாழ்வில் பூரணமும் சுகமும் நிரம்பி வழிவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.