அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" (கொலோசெயர் 3:24) என்று கூறுகிறது. உங்கள் கைகளின் கிரியையை ஆசீர்வதித்து, அவரது காரியத்தை செய்து முடிப்பதற்கு உதவும்படி கர்த்தர் விரும்புகிறார். ஒருவேளை, நீங்கள் பல ஆண்டுகளாக, நேரத்தை, பெலனை, ஆற்றலை தியாகம் பண்ணினாலும் எதிர்பார்த்த பலனை காணாமல் இருக்கலாம். மனந்தளராதிருங்கள். ஆண்டவர் உங்கள் முயற்சியை பார்க்கிறார்; உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார். உண்மையாய் நீங்கள் செய்த சேவைக்கு, ஏற்றவேளையில் அவர் பலன் அளிப்பார்; அவரது ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்காக கிருபையை தந்தருளுவார்.
நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷரின் அனுமதிக்காக அல்லாமல் கர்த்தருக்கென்றே செய்யுங்கள். உங்கள் குடும்பத்தைக் கவனிப்பதாக இருந்தாலும், வியாபாரத்தை நிர்வகிப்பதாக இருந்தாலும், பொறுப்புகளை நிறைவேற்றுவதாக இருந்தாலும், ஊழியத்தில் சேவை செய்வதாக இருந்தாலும் எல்லாவற்றையும் முழு மனதுடன் செய்திடுங்கள். உங்கள் நேரத்தை, பெலனை, திறன்களை தேவ மகிமைக்கென்று பயன்படுத்துகிறீர்கள் என்பதை மறவாதிருங்கள். சிறிய காரியத்தையும் அவருக்கென்று செய்யும்போது அது அர்த்தமுள்ளதாகிவிடும். உங்கள் குடும்பத்தில், வேலையில், முடிவுகளில் ஆண்டவருக்கு முதலிடத்தைக் கொடுங்கள். இயேசு, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்," என்று கூறியுள்ளார். தேவனை முதலிடத்தில் வைத்து, அவர் உங்களை வழிநடத்துவார் என்றும் தேவையானவற்றை அருளிச்செய்வார் என்றும் நம்புங்கள்.
ஒரு சம்பவத்தை நான் பகிர்ந்துகொள்ளட்டும். அனுபவமிக்க, முதிய ஊழியர் ஒருவரும், புதிதாக ஊழியத்திற்கு வந்திருந்த ஓர் இளைஞரும் ஒன்றாய் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தனர். முதிய போதகர், நகைச்சுவையாக பேசுவதிலும், மற்றவர்களுடன் உரையாடுவதிலும் நேரத்தைச் செலவழித்தார். அந்த இளைஞரோ அருகில் அமர்ந்து, வேதாகமத்தை அவ்வப்போது பார்த்து ஒரு குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் அவரைப் பார்த்துக்கொண்டிருந்த முதிய போதகர், "தம்பி, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அந்த இளைஞர், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நான் பிரசங்கிக்கவேண்டும். ஆண்டவரிடம் ஜெபித்து, தேவ செய்தியை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறேன். மக்களுக்கு தேவனுடைய ஜீவனை கொண்டு வரும் வண்ணம் அவரது வார்த்தையை பேசவேண்டுமல்லவா?" என்று கூறினார். முதிய போதகர் வாய்விட்டு சிரித்தார். பிறகு, "நீ அதிகமாக ஆயத்தம் செய்கிறாய். பிசாசு, நீ எழுதியிருக்கிற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறான். நீ பிரசங்கிக்கும்போது, என்ன சொல்லப்போகிறாய் என்று அவனுக்குத் தெரியும். என்னைப் பார். நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் செய்தியளிக்க எழுந்து நிற்கும்போது, என்ன பேசுவேன் என்பது ஆண்டவருக்கே தெரியாது," என்று கூறினார்.
அன்பானவர்களே, இந்தச் சம்பவம், தேவனுடைய வார்த்தையை ஒருபோதும் அலட்சியமாகவும், நம் திறமைகளைச் சார்ந்தும் அணுகக்கூடாது என்று நினைப்பூட்டுகிறது. ஆண்டவருக்கு உண்மையாக ஊழியம் செய்கிறவர்கள், அவருடைய வழிகாட்டுதலை தேடுகிறார்கள்; அவரது ஞானத்தை சார்ந்திருக்கிறார்கள். தங்களுடைய விருப்பத்தை அல்ல; தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதே அவர்களுக்கு பிரியமாயிருக்கும். ஆகவே, நாம் எப்போதும் அவரை கனப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு எல்லா பொறுப்பையும் ஜெபத்துடனும், உண்மையுடனும் நிறைவேற்றுவோம். வேதாகமத்தில் நோவாவைப் பாருங்கள். பூமியில் பொல்லாப்பு பெருகியபோது, அவன் குடும்பத்தையும் உயிரினங்களையும் வரும் வெள்ளத்திலிருந்து காக்கும்படி ஒரு பேழையை உண்டாக்குவதற்கு தேவன் கட்டளையிட்டார். அதை எப்படி உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டுக் கூறி, விலங்குகளையும் பறவைகளையும் அதற்குள் கொண்டு வரும்படியும் கட்டளையிட்டார். நோவா, தேவ கட்டளைகளை புறக்கணிக்கவில்லை; தன் சொந்த சிந்தனையின்படி நடக்கவில்லை. கர்த்தர் தனக்குக் கூறியபடியே அவன் எல்லாவற்றையும் செய்தான். பேழை, ஆயத்தமானபோது, நோவா, தன் குடும்பத்துடன் நுழைவதற்கு தயாரானான். பிறகு கர்த்தர், விலங்குகளையும் பறவைகளையும் அவனிடம் கொண்டு வந்தார். நோவா, தன் பெலத்தினால் எங்கும் தேடி ஒவ்வொரு சிருஷ்டியையும் சேர்க்கவில்லை. அவனது திறனுக்கு அப்பாற்பட்டதை தேவன் செய்து முடித்தார்.
இது எவ்வளவு அருமையான பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது! கர்த்தர் நமக்கு ஒரு பொறுப்பை கொடுக்கும்போது, நம் பங்கை நாம் உண்மையாய் செய்து, பலனுக்கு அவரை நம்பியிருக்கவேண்டும். குடும்பத்தில், வியாபாரத்தில், அலுவலகத்தில் அல்லது ஊழியத்தில் நீங்கள் கடினமாய் உழைத்தும் எதிர்பார்த்த பலனை காணவில்லையா? அதைரியப்படாதிருங்கள். காலைதோறும் ஆண்டவரை தேடுங்கள்; அவரது வசனத்தைத் தியானியுங்கள்; அவரது வழிகாட்டுதலை பின்பற்றுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உண்மையுடனும் நேர்மையுடனும் செய்து முடித்திடுங்கள். தம் ஏற்றவேளையில், தேவன் ஏற்ற மக்களை, வாய்ப்புகளை, வேண்டியவற்றை அருளிச்செய்து, தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஆதரவையும் தருவார். கர்த்தர், உயிரினங்களை நோவாவிடம் கொண்டு வந்ததுபோலவே, உங்களுக்குத் தேவையானவற்றையும் அருளிச்செய்ய வல்லவராயிருக்கிறார். ஆனாலும், நீங்கள் நினைக்கிறவண்ணமே அது நடக்குமென்று எதிர்பார்க்காமல், அவரது வேளையையும் ஞானத்தையும் நம்புங்கள். அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிவதும், பலனை அவர் கரத்தில் விட்டுவிடுவதுமே நம் பொறுப்பாகும். கர்த்தர், நோவாவை நினைவுகூர்ந்து, வெள்ளத்தின்போது அவனையும் அவன் குடும்பத்தையும் காத்துக்கொண்டார் என்று வேதம் கூறுகிறது. அதேவண்ணம், கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் என்றும், நம்மையும் நம் பிள்ளைகளையும் அவர் ஆசீர்வதிப்பார் என்றும் கூறுகிறது (சங்கீதம் 115:12-14). வெள்ளத்திற்குப் பிறகு தேவன், நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்து, பலுகி பெருகும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவன் சந்ததி பெருகி பூமியெங்கும் பரவியது.
ஆகவே, தைரியமாயிருங்கள்! நீங்கள் எண்ணிய பலன், உங்கள் முயற்சிகளால் கிடைக்காவிட்டாலும் மனந்தளராதிருங்கள். நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தருக்கே முதலிடம் கொடுத்து முழு மனதுடன் அவருக்குச் சேவை செய்திடுங்கள். நோவாவைப்போல், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுங்கள்; உங்களுக்குத் தேவையானவற்றை அருளிச்செய்வார் என்று தேவனை நம்பிடுங்கள். உங்கள் கைகளின் கிரியையை தேவன் ஆசீர்வதிப்பாராக; உங்கள் குடும்பத்தைப் பெலப்படுத்துவாராக; முடிவெடுக்கும்போது உங்களை வழிநடத்துவாராக; அவரது காரியங்களை முடிப்பதற்கு உங்களுக்கு உதவுவாராக. உண்மையான உங்கள் சேவையை அவர் கனப்படுத்துவாராக; அவரது ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கான கிருபையை அருளிச்செய்வாராக, ஆமென்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் மகிமைக்கென்று யாவற்றையும் முழு மனதுடன் செய்வதற்கு எனக்கு உதவும். உம் சித்தத்தை பயபக்தியுடனும், தியானத்துடனும், உண்மையுடனும் நிறைவேற்றுவதற்கான கிருபையை எனக்கு அருளும். என் கைகளின் கிரியையை ஆசீர்வதியும்; குடும்பத்திலும், ஊழியத்திலும், தொழிலிலும் உமக்கு உண்மையாக சேவை செய்வதற்கு எனக்கு உதவும். நீர் நோவாவை நினைவுகூர்ந்ததுபோல, என்னையும் என் பிள்ளைகளையும் நினைத்தருளும். எங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள எல்லா ஆசீர்வாதமும் வேண்டியவையும் வாய்ப்பும் தயவும் ஏற்ற நேரத்தில் வந்து சேர்வதாக. எங்கள் சரீரபிரகாரமான, ஆவிக்குரிய மற்றும் பொருளாதார தேவைகளை சந்திப்பீராக. எங்கள் பெலனை திரும்ப தந்து, கனத்தையும் சமாதானத்தையும் அருளிச் செய்வீராக. உம் ராஜ்யத்தை முதலாவதாக தேடவும், உம் வசனத்தின்படி வாழவும் எங்களுக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


