அன்பானவர்களே, இன்றைக்கு, "நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" (யோவேல் 2:25) என்ற வசனத்தை தியானிப்போம். வெட்டுக்கிளிகள் என்ன செய்யும்? அவை தாவரங்கள், தண்டுகள், கிளைகள், மலர்கள் எல்லாவற்றையும் பட்சித்துப்போடும். ஒன்றையும் விட்டு வைக்காது. அவை, எல்லாவற்றையும் அழிக்கக்கூடியவை. அவ்வண்ணமே, உங்கள் வாழ்க்கையில் எல்லாம் பட்சிக்கப்பட்டுபோனதாக நீங்கள் உணரலாம். ஒரு பிரச்னை அல்ல; பல பிரச்னைகள். உங்கள் பொருளாதாரம், உங்கள் ஆரோக்கியம், உங்கள் வேலை, உங்கள் குடும்ப சமாதானம் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இழந்துவிட்டதுபோன்ற உணர்வு எழும்பும். எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கும்; அனுபவிப்பதற்கு எதுவுமே இல்லாததுபோன்று தோன்றும்.

அன்பானவர்களே, தேவன் உங்கள் வாழ்வில் இன்னும் செயல்படவில்லை. எடுக்கப்பட்டவை எல்லாவற்றையும் திரும்ப தருவதாக அவர் கூறுகிறார். நீங்கள், "ஏன் திரும்ப தரவேண்டும்? ஏன் பதிலுக்கு மாற்றாக வைக்கக்கூடாது." என்று வியக்கலாம். தேவன், திரும்ப தரும்போது, இழந்தவற்றை இரட்டிப்பாக தருகிறார். யோபுவைப்போல, அவன் எல்லாவற்றையும், குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும், சொத்துகளையும், கனத்தையும் இழந்தான்; சாம்பல் மட்டுமே இருந்தது. ஆனாலும், அவன் தேவனை இறுகப் பற்றிக்கொண்டபடியால், அவர் எல்லாவற்றையும் இழந்தவற்றையெல்லாம் இரட்டிப்பாகக் கொடுத்தார். அவனுடைய பிந்தைய நாள்கள் ஆரம்ப நாள்களை விட சிறப்பாக இருந்தன. அப்படி திரும்ப தருவதாக தேவன் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.

ஆகவே, இப்போதும் மனந்தளராதீர்கள். வீணாகிப்போன வருஷங்கள், இழந்த எல்லா சமாதானம், நசுக்கப்பட்ட நம்பிக்கை எல்லாவற்றையும் இரட்டிப்பாக தேவன் திரும்ப தருவார். உடைந்துபோன பகுதிகளை அவர் சீர்ப்படுத்துவதோடு, உங்கள் வாழ்க்கையில் நன்மை நிரம்பி வழிந்தோடச் செய்வார். இப்போது ஆண்டவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பின்னாக அவர் இருக்கிறார் என்று விசுவாசியுங்கள். அவர் உங்களை உயர்த்துவார்; ஜெயத்தை தருவார்; வெட்டுக்கிளிகள் பட்சித்தவற்றை திரும்ப தருவார்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, எல்லாவற்றையும் இரட்டிப்பாக திரும்ப தருவதாக அன்புடன் நீர் அளித்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உமது இரக்கத்திற்காக உம்மை துதிக்கிறேன். நான் இழப்புகளின் வழியாக கடந்து சென்றாலும், எனக்கு ஒத்தாசை செய்யக்கூடிய உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்; யோவேல் 2:25 என்ற வாக்குத்தத்தத்தை பிடித்துக்கொள்கிறேன். நீர் பதிலுக்கு மாற்றாக ஒன்றை தருகிறவரல்ல; இரட்டிப்பாக திரும்ப தருகிறவர். யோபுவை உயர்த்தியதுபோல, என்னையும் உயர்த்துவீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என்னுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும்; ஒருபோதும் உம்மை விட்டுவிடாதிருக்க உதவி செய்யும். நீர் திரும்ப அளிக்கிறவற்றை, அருளுகிற சுகத்தை, அற்புதத்தை இன்று பெற்றுக்கொள்கிறேன். என் வாழ்க்கையில் இனிமேல்தான் சிறந்தவை வரும் என்று விசுவாசித்து இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.