எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இந்தத் தியானத்திற்கு உங்களை வரவேற்கிறேன். ஆண்டவர்தாமே உங்களுடன் பேசி, ஆசீர்வதிப்பாராக. இன்றைய வாக்குத்தத்த வசனம், "உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக" (சங்கீதம் 122:7) என்று கூறுகிறது. இந்த வசனம் கூறுகிறபடி, தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறவர்கள் யாவரும், எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். நமக்கு இந்தச் சமாதானத்தை அளிப்பதற்காகவே, ஆண்டவர் இயேசு தம் ஜீவனை சிலுவையில் கொடுத்தார். நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒப்புக்கொடுக்கப்பட்டார்; நாம் நீதிமான்களாவதற்காக எழுப்பப்பட்டார் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 4:25).
யோவான் சுவிசேஷத்தின் 4ம் அதிகாரத்தில் சமாரிய ஸ்திரீயைக் குறித்து வாசிக்கிறோம். அவள் தண்ணீர் மொண்டுகொள்ள வந்தபோது, இயேசு அங்கே உட்கார்ந்திருந்தார். அவள் பாவமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தாள். ஆனால், தேவனுடைய வார்த்தையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாயிலாக கேட்டதும், முழுமையாக அவள் சுத்திகரிக்கப்பட்டாள்; தேவனுடைய பிள்ளையாக, கிருபாபாத்திரமாக மாறினாள். இதைக் குறித்து வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது (ரோமர் 9:23).
வேதம், "சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக; உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக" (1 தெசலோனிக்கேயர் 5:23) என்று கூறுகிறது. ஆண்டவர் நம் வாழ்வை எப்படி மாற்றுகிறார், பாருங்கள்! இன்னொரு வேத பகுதி, "நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்" (எபிரெயர் 13:20,21) என்று கூறுகிறது. ஆம், அன்பானவர்களே, ஆண்டவரிடம் வாருங்கள். அவர் சமாதானத்தின் தேவனாயிருக்கிறார். இந்த தெய்வீக சமாதானத்தை அருளும்படி ஆண்டவரிடம் ஜெபிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பிள்ளைகளுக்கு நீர் ஆச்சரியமான சமாதானத்தை அருளுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர், "கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்," என்று கூறியிருக்கிறீர். தகப்பனே, இன்று நாங்கள் உம்மிடம் கேட்கிறோம்; உம் தெய்வீக சமாதானத்தால் எங்களை நிரப்புவீராக. எங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் உம் சமாதானத்தால் நிரப்பிடும். எங்களை முழுவதுமாய் பரிசுத்தப்படுத்தி, எங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவும் உமக்கு முன்பாக குற்றமற்றவையாய் இருக்கும்படி காத்தருளும். கவலை, பயம், உலக கவனம் யாவற்றையும் எடுத்துப்போட்டருளும். பாவ வழி யாவற்றையும் சுத்திகரித்து, எங்களை உம் கிருபையின் பாத்திரங்களாக மாற்றியருளும். உம் பார்வைக்கு உகந்தவண்ணம் எங்களுக்குள் கிரியை செய்திடும்; நற்கிரியையை எங்களில் நிறைவேற்றி முடித்திடும். எங்கள் வாழ்க்கையையும் வீடுகளையும் உம் சமாதானம் ஆண்டுகொள்ளட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


