அன்பானவர்களே, "கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார்" (சங்கீதம் 138:8) என்ற அழகிய வாக்குத்தத்தத்தை இன்று தியானிப்போம். முந்தின வசனத்தில் தாவீது, "நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்," என்று கூறுகிறான். கடினமான சூழ்நிலைகளிலும் அவன் தேவ பாதுகாப்பையும் உண்மையையும் நம்பினான். சூழ்நிலைகளை எண்ணி நாம் கலங்கலாம். ஆனால் தேவன், "என் பிள்ளையே, என் கிருபை உனக்குப் போதும்," என்று கூறுகிறார். எல்லா உபத்திரவத்திலும் அவருடைய கிருபையே நம்மை தாங்கும்.

பாடுகளின் மத்தியிலும் யோபு, "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது," என்று அறிக்கையிட்டான் (யோபு 42:2). எல்லாவற்றையும் சகித்தாலும், யோபு, தேவனுடைய சர்வவல்லமையின்மேல் திடநம்பிக்கையாயிருந்தான். வேதம், மனுஷனுடைய யோசனைகள் அநேகமாயிருக்கும்; ஆனால், கர்த்தர் நினைக்கிறதே நடக்கும் என்று கூறுகிறது. நமக்கென்று எண்ணங்கள் இருந்தாலும், நமக்கு எது சிறந்தது என்றும், தம் பூரண சித்தத்திற்கு ஏற்றது எது என்றும் தேவன் அறிந்திருக்கிறார். நம்மை அழிப்பதற்கும், தேவனிடமிருந்து பிரிப்பதற்கும் பிசாசு தீங்கானவற்றை யோசிக்கலாம். மக்கள் நமக்கு விரோதமாக சதியாலோசனை செய்யலாம்; ஆனாலும் அவர்கள் எண்ணங்கள், கர்த்தரின் நோக்கத்தை மேற்கொள்ள முடியாது.

வேதம், "அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று" என்று கூறுகிறது (சங்கீதம் 21:11). அடுத்த வசனம், "அவர்களை இலக்காக வைத்து உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்" என்று கூறுகிறது. விரோதிகள் நமக்கு எதிராக எழும்பினாலும், தேவனால் அவர்கள் எண்ணங்களைச் சிதறடிக்க முடியும். எல்லா யுத்தங்களையும் நம் சுயபெலத்தினால் செய்யவேண்டிய அவசியமில்லை; அவரே நமக்காக இடைப்படுவார். உபத்திரவங்கள் நம்மை சூழ்ந்துகொள்ளும்போது, நம்பிக்கையோடு இருப்பது கூடாத காரியம். ஆனாலும், "என் கர்த்தர் எனக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார்," என்று விசுவாசத்துடன் அறிக்கையிடுங்கள். உங்களை வழிநடத்தி, உங்களைக் குறித்து தாம் எண்ணியவற்றை செய்து முடிப்பார் என்று நம்புங்கள்.
ஒருவேளை, உங்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கலாம்; மக்கள், கீழே தள்ளுவதற்கு முயற்சிப்பதாக நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு தீங்கு செய்யும் நோக்கத்துடன் யாராவது இருப்பதாக நினைக்கலாம். உங்கள் அவலநிலையில், "இதற்குமேல் என்னால் தாங்க இயலாது. நான் உயிரை விடட்டும்," என்று நீங்கள் நினைக்கலாம். அன்பானவர்களே, தயவுசெய்து மனந்தளராதிருங்கள். உங்கள் உயிர் அருமையானது. உங்களால் தாங்க இயலாது என்ற நிலையில், நம்பிக்கைக்கு உரிய யாரையாவது அணுகுங்கள். தேவனால் உங்களைப் பெலப்படுத்தி, இக்கட்டை கடப்பதற்கு உதவ இயலும்.

உங்கள் சூழ்நிலைகளில் இன்று கர்த்தரின் பலத்த கரம் செயல்படுவதை காண்பீர்களாக. அவர் உங்களுக்கு ஞானத்தை அருளி, சட்டப்போராட்டங்களில் உங்களுக்குத் தயவு காட்டி, உங்கள் தரப்பை பெலப்படுத்தி, விடுதலைக்கு நேராய் வழிநடத்துவாராக. நீங்கள் அவரை நம்பும்போது எல்லா சவால்களின் வழியாகவும் அவரே உங்களை நடத்திச் செல்வார். உங்கள் பாரங்களை தேவனுடைய கரங்களில் வைத்திடுங்கள்; அவரது உண்மையில் திடநம்பிக்கையாயிருங்கள். அவரே உங்களை தற்காக்கிறவரும் அடைக்கலம் அருளுகிறவருமாயிருப்பார். தத்தளிப்புகளின் நடுவே அவரே உங்களை வழிநடத்தி, உங்கள் வாழ்க்கையில் தம் நோக்கத்தை நிறைவேற்றி, அவருக்காக காத்திருக்கும் உங்களை தம் சமாதானத்தினாலும் பெலத்தினாலும் நிரப்புவாராக.

ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, நீர் வாக்குக்கொடுத்தபடியே, உபத்திரவத்தில் இருக்கிற அனைவர் வாழ்விலும் இடைப்படுவீராக. வழக்குகளில் அவர்களைத் தற்காத்து, உம் சித்தத்தின்படியே அவர்களுக்கு வெற்றியை அருளுவீராக. அவர்களுக்கு விரோதமாக செய்யப்படும் எல்லா ஆலோசனைகளையும் கடிந்துகொள்ளும்; எல்லா இருளையும் அகற்றி அவர்கள் இருதயங்களைப் பெலப்படுத்தும். நீர் இடைப்படுவதற்காக காத்திருக்கும் அவர்களுக்கு நற்செய்தியை அருளிச்செய்யும். அவர்களுக்காக யாவற்றையும் செய்துமுடித்து, உபத்திரவங்களிலிருந்தும் மனமுடையச் செய்யும் காரியங்களிலிருந்தும் அவர்களைக் காத்து, வெற்றியடைய உதவி செய்யும். அவர்கள் சூழ்நிலைகளை தலைகீழாக மாற்றும்; எல்லா சதியாலோசனையும் தோற்றுப்போகச் செய்யும்; அவர்கள் வெட்கத்தை இரட்டிப்பான கனமாக மாற்றும். அவர்கள் இன்று உம் பலத்த விடுதலையையும் அற்புதங்களையும் அனுபவிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.