அன்பானவர்களே, இன்றைக்கு, "நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (சகரியா 10:12) என்ற வசனத்தை தியானிப்போம். கர்த்தர், "நானே என் ஜனங்களை வழிநடத்துவேன்," என்கிறார். நம் தேவன் எவ்வளவு அன்புள்ளவர்! ஆகவேதான் தாவீது, "என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே," என்று கூறுகிறான் (சங்கீதம் 18:32). வேதம், "குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்," என்று கூறுகிறது (நீதிமொழிகள் 21:31). ஆம், அன்பானவர்களே, நம் யுத்தங்கள் யாவற்றிலும் நமக்கு கர்த்தரே ஜெயத்தைத் தருகிறார். தேவன் நம்மோடு இருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

இந்த உலகில், படைகள் எப்படி யுத்தத்திற்கு ஆயத்தமாக்கப்படுகின்றன என்பதை பார்க்கிறோம். இஸ்ரேல் தேச படைகள், அங்கு நவீன தொழில்நுட்பங்கள் இருப்பதால், தங்கள் குடிமக்களாகிய ஆண், பெண் இருபாலாருக்கும்  பயிற்சியளிக்கின்றன. அவர்கள் யுத்தத்திற்கு ஆயத்தமாக்கப்படுகின்றனர். ஆனாலும் ஆண்டவர், "நானே உன்னை ஆயத்தமாக்குகிறவர். நானே உனக்குப் பெலன் அளிக்கிறவர்," என்று கூறுகிறார். தம் மக்களாகிய இஸ்ரவேலர் சென்ற எல்லா இடங்களுக்கும் கர்த்தரே அவர்களுக்கு முன்னாகச் சென்றார்; அவர்கள் யுத்தங்களை செய்தார். இன்றும் தம் மக்களுக்காக அதைச் செய்கிறார். ஆகவேதான், குதிரை யுத்தநாளுக்காக ஆயத்தமாக்கப்படலாம்; ஆனால், ஜெயம் கர்த்தரிடமிருந்தே வருகிறது. "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை," என்று தாவீது கூறுவதுபோல, கர்த்தர், நம்மை காப்பதற்காக நம்முடன் நிற்கிறார் (சங்கீதம் 16:8). கர்த்தரே நம்மை காக்கிறவர். அவர் பயங்கரமான பராக்கிரமசாலி. அவரைக் கொண்டு நாம் எல்லா யுத்தங்களையும் வெல்ல முடியும்.

உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு. ஆனால், கர்த்தரின் பார்வையில் அவை ஒன்றுமேயில்லை. நம் உபத்திரவங்கள் எல்லாவற்றை காட்டிலும் தேவன் மிகப் பெரியவராயிருக்கிறார். அன்பானவர்களே, மனந்தளர்ந்துபோகாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எதுவும், உங்களுக்கு எதிராக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காது. சத்துரு பலவித யோசனைகளை வைத்திருக்கலாம்; ஜனங்கள் உங்களுக்கு விரோதமாக எழும்பலாம்; ஆனால், எல்லா யுத்தங்களையும் நீங்கள் வென்று, ஜெயம் பெறுவீர்கள். ஒருபோதும் மனந்தளராதிருங்கள். "என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்," என்று தாவீது கூறுகிறபடி, கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் (சங்கீதம் 62:5). ஆம், அன்பானவர்களே, கர்த்தருடைய அதிகாரத்துடன் நீங்கள் நடப்பதால், உங்கள் பெலன் அவரிடமிருந்து வரும். நீங்கள் பயந்திருந்தது போதும்; அவருடைய பெலத்தோடு எழும்புங்கள். நீங்கள் சத்துருவை துரத்துவீர்கள்; எல்லா யுத்தத்தையும் மேற்கொண்டு, ஜெயிப்பதற்காக வல்லமையை ஆண்டவர் உங்களுக்குத் தருவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம்மிடமிருந்து மாத்திரமே எனக்கு ஜெயம் வருவதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் எதிர்கொள்ளும் எல்லா யுத்தத்திலும் என் பெலனாகவும் என்னை தற்காக்கிறவராகவும் இருப்பீராக. எனக்கு முன்சென்று என் பாதையை பாதுகாப்பானதாக மாற்றுவீராக. உம்மை மாத்திரமே நம்பவும், அசைக்கப்படாதிருக்கவும் எனக்கு உதவும். என் ஆத்துமாவை அமைதியாக்கும்; என் எதிர்பார்ப்பு உம்மேல் இருப்பதாக. உம் வல்லமையால் என்னை நிறைத்து, யுத்தத்தில் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை அளிப்பீராக. சத்துருவினால் வரும் எல்லா பயத்தையும் அவனின் கிரியைகள் அனைத்தையும் விரட்டுவீராக. உம் மகிமைக்கென்று என்னை ஜெயத்துக்குள் வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.