அன்பானவர்களே, "நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை" (ஆதியாகமம் 28:15) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். கர்த்தர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் உங்களுக்கு வாக்குப்பண்ணிய யாவற்றையும் நிறைவேற்றுவார். ஆண்டவரின் ஒத்தாசையுடன் ஒருவர் ஒரு வேலையைச் செய்யலாம்; ஆனால், ஆண்டவரே பலன் தருகிறவர். யோனத்தானைக் குறித்த சம்பவத்தில் வேதத்தில் இது எழுதப்பட்டுள்ளதைக் காணலாம் (1 சாமுவேல் 14:45).
அவ்விதமே, யாக்கோபு தன் வீட்டை விட்டு ஒரு கோலுடன் மட்டும் சென்றான். எங்கே செல்கிறோமென்று அறியாமல் தன் தாய் கூறியதற்கு கீழ்ப்படிந்து, தன் மாமனுடைய வீட்டைத் தேடிக்கொண்டு சென்றான். அவன் பல தேசங்களைக் கடந்து பல மைல்கள் பயணித்திருக்கக் கூடும். (ஆதியாகமம் 28:13-15). ஆனால், யாக்கோபு, கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். இரவு வந்தது. அவன் ஒரு கல்லை எடுத்துத் தலையின் கீழ் வைத்து உறங்கினான். அந்தத் தருணத்தில் கர்த்தர் அவனை பார்க்க வந்தார்; சொப்பனத்தின் வாயிலாக அவனுடன் பேசினார். ஆம், ஒரு கல் மட்டுமே அவன் தலையின் கீழ் இருந்தது. இருள் அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் வெறுந்தரையில் படுத்திருந்தான்; ஒரு கோல் மாத்திரமே அவனிடம் இருந்தது. அவனுடன் யாருமில்லை. ஒரு காலத்தில் அவன் பெரிய அந்தஸ்துடன் வாழ்ந்தவன்; இப்போது ஒன்றுமில்லாதவனாகக் காணப்பட்டான். அன்பானவர்களே, இன்று நீங்களும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கலாம். "நான் வெறுமையாய் கிடக்கிறேன்," என்று கூறாதிருங்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பயணித்த யாக்கோபைப்போல், நீங்கள் வாழ்ந்தால், அந்த இக்கட்டான வேளையிலும் கர்த்தர் உங்களைத் தேடி வருவார். இன்று அவர் உங்களைத் தேடுகிறார்.
கர்த்தர் யாக்கோபிடம், "நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்," என்று கூறினார். கர்த்தர், அவனுக்கு அந்தத் தேசத்தைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணினார். அப்போது யாக்கோபு ஓடிப்போய் கொண்டிருந்தாலும், தேவன் அவனுக்கும் அவன் சந்ததிக்கும் அந்தத் தேசம் சொந்தமாகும் என்று கூறினார். கர்த்தர் அவனுக்கென்று சொந்தமாக ஒரு தேசத்தை அளிப்பதாக வாக்குக்கொடுத்தார். நீங்கள், கர்த்தரின் நாமத்திற்காக இன்று நிராகரிக்கப்பட்டிருக்கிறீர்களா? விரட்டப்பட்டிருக்கிறீர்களா? அற்பமாய் எண்ணப்பட்டிருக்கிறீர்களா? தவறாய் நடத்தப்படுகிறீர்களா? கர்த்தர் உங்களை நிலைப்படுத்துவார்; உங்களுக்கு சுதந்தரத்தை அளிப்பார். நீங்கள் அவருக்குக் கீழ்ப்படியும்போது, நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று, செய்யவேண்டிய வேலையை செய்து முடிப்பீர்கள். அதற்காகவே, கர்த்தர், "நான் உன்னைக் கைவிடமாட்டேன்; தேசத்தை உனக்கு அளிப்பேன்," என்று கூறுகிறார்.
உங்கள் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும். நீங்கள் எத்திசையிலும் பலுகிப் பெருகுவீர்கள். ஆம், ஆண்டவர் உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தைத் தருகிறார்; உங்கள் சந்ததியை அவர் விரிவாக்குகிறார். இன்று கர்த்தர் உங்களை சந்ததியை நிலைப்படுத்துவார்; உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பார். கர்த்தர், "நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்," என்று கூறுகிறார் (15ம் வசனம்). உங்களைப் பாதுகாப்பதாக அவர் வாக்குப்பண்ணுகிறார். பொல்லாத மக்கள் உங்களுக்கு விரோதமாக எழும்பலாம்; உங்களை விழுங்கிப்போட முயற்சிக்கலாம்; ஆனால், அவர்கள் மேற்கொள்ளமாட்டார்கள். கர்த்தர், அவர்களை துரத்துவார். தாம் உங்களுக்காக ஆயத்தம்பண்ணிய இடத்துக்கு மறுபடியும் உங்களைக் கொண்டு வருவார்.
கர்த்தர், யாக்கோபை எப்படி திரும்ப கொண்டு வந்தார்? பரிபூரண ஆசீர்வாதங்களோடு அவனை திரும்ப கொண்டு வந்தார். யோர்தானை ஒரே ஒரு கோலுடன் கடந்து சென்றதாகவும், இப்போதோ இரண்டு பரிவாரங்களுடன் வருவதாகவும் யாக்கோபு கூறினான் (ஆதியாகமம் 32:10). தன் மாமன் வீட்டில் பதினான்கு வருடங்கள் அவன் உழைத்தான்; தியாகங்களைச் செய்தான்; கர்த்தரை பயபக்தியாய் பின்பற்றினான்; கர்த்தர் அவனைக் குறித்து வைத்திருந்த நோக்கங்களையெல்லாம் நிறைவேற்றினான். கர்த்தர் அவனுக்கு தயை காண்பித்தார். யாக்கோபு திரளான செல்வத்தை, செழிப்பை, பரிபூரண ஆசீர்வாதங்களை, பாக்கியமான குடும்ப வாழ்வை, பிள்ளைகளை, பெலனை பெற்றுக்கொண்டான். அன்பானவர்களே, கர்த்தர் உங்கள் வாழ்விலும் கிரியை செய்வார். அவர் உங்களை ஆசீர்வதித்து வர்த்திக்கப்பண்ணுவார். தைரியமாயிருங்கள்!
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம் பிள்ளைகளுக்கு நீர் கொடுத்துள்ள எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றும். உம் வாக்குத்தத்தங்களையும், தீர்க்கதரிசனங்களையும் பற்றிக்கொண்டிருப்போரை, உண்மையாய் ஜெபிப்போரை, பரிசுத்தமாய் வாழ்வோரை, உமக்குக் கீழ்ப்படிந்து, உம் வழிகளில் நடப்போரை, அவர்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும், ஆசீர்வதித்தருளும். அவர்களைச் செழிக்கப்பண்ணி, அவர்கள் ஆசீர்வாதம் பன்மடங்காய் பெருகச் செய்யும். அவர்களுக்கு ஞானத்தை அருளி, செய்கிற யாவற்றையும் வாய்க்கப்பண்ணும். அவர்கள் வாழ்வில் பெருக்கத்தைக் கட்டளையிட்டு, குடும்பத்தை பாதுகாப்பாய் நிலைப்படுத்தியருளும். ஆபத்து ஒன்றும் அவர்களைத் தொடாதபடி பாதுகாத்தருளும்; பொறாமை கொண்டவர்களிடமிருந்தும், துன்மார்க்கரிடமிருந்தும் காத்தருளும். அவர்களிடம் பேசும்; வழிநடத்தும்; உம் பரிபூரண சித்தத்திற்குள் நடத்தும். வாக்குப்பண்ணிய ஆசீர்வாதங்கள் இன்று அவர்கள்மேல் இறங்குவதாக. உம் கிருபைக்காகவும் மாறாத பிரசன்னத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


